எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" (1 பேதுரு 2:3) என்ற வசனத்தை தியானிப்போம். களங்கமில்லாத பால் என்பது தேவனுடைய சுத்தமான வார்த்தையை குறிக்கிறது; அது நம் ஆவியை போஷித்து, நம் விசுவாசத்தை பெலப்படுத்துகிறதாயிருக்கிறது. வேதம், மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல; ஆண்டவருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று கூறுகிறது (உபாகமம் 8:3; மத்தேயு 4:4; லூக்கா 4:4). அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? வாசிப்பதற்கு வேதாகமம் உங்களிடம் இருக்கிறதா? என் அம்மா, ஒவ்வொரு குழந்தை பிறந்ததும் உடனே ஒரு வேதாகமத்தை வாங்குவதை பழக்கமாக வைத்திருந்தார்கள்; அதன் மூலம் தேவன் எங்கள் குடும்பத்தை அபரிமிதமாக ஆசீர்வதித்தார்.

சீமோன் பேதுருவும் அவன் நண்பர்களும் இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒரு மீனையும் பிடிக்கவில்லை (லூக்கா 5:5). ஆனாலும், இயேசு, பேதுருவிடம், "உன் படகை ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், வலையைப் போடு," என்றார். பேதுரு, "ஆயினும், உம் வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்," என்று சொன்னான். தொடர்ந்து அற்புதம் நடந்தது. அவர்கள் வலையே கிழிந்துபோகுமளவுக்கு மீன்களைப் பிடித்தனர். இந்த நிகழ்வு, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வழிகாட்டுதலின்படி நடக்கும்போது, அவருடைய ஆசீர்வாதம் நம் வாழ்வில் நிரம்பி வழியும் என்ற முக்கியமான பாடத்தை நமக்குப் போதிக்கிறது. தேவனுடைய சித்தத்தோடு நாம் இசைந்திருக்கும்போது நம் முயற்சிகளுக்கான பலன் பெருகுகிறது. பேதுருவைப்போல, நாமும் சொந்தமாக முயற்சிக்கும்போது தடுமாறலாம்; ஆனால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது நம் வேலை, பரிபூரணமாகவும் அற்புதங்களாகவும் மறுரூபமடைகிறது.

நம் வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்ப்போம். தினமும் தேவனுடைய வார்த்தையை வாசிக்க, தியானிக்க எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்? அதன்படி வாழ்கிறோமா? என்று சீர்தூக்கிப் பார்ப்போம். அதில் குறைபட்டிருந்தால், நம் இருதயங்களை ஆண்டவரிடம் ஒப்படைத்து, அவருடைய வார்த்தையில் வளர உண்மையாயிருக்கும்படி கிருபையை தேடுவோம்.

ஜெபம்:
தகப்பனே, தினமும் உம் வார்த்தையை வாசிக்க விருப்பத்தை எனக்குத் தந்தருளும். உம் வசனத்தை உண்மையாய் தியானிக்கும் கிருபையினால் என் இருதயத்தை நிரப்புவீராக. ஒவ்வொரு வசனமும் என் விசுவாசத்தை பெலப்படுத்தி, கிரியைகளை நடத்துவதாக. உம்முடைய வார்த்தையை புரிந்துகொள்வதற்கான ஞானத்தை எனக்குத் தந்து ஆசீர்வதித்தருளும். என் வாழ்க்கையில் உம் பரிபூரண ஆசீர்வாதங்கள் நிரம்பி வழிவதாக. உம் வார்த்தையை நேசித்து கீழ்ப்படியும்படியாக என் இருதயத்தை மாற்றுவீராக. உம் வார்த்தை என் வாழ்வில் எல்லா பகுதியிலும் பலன் கொடுக்கட்டும். தினமும் உம் வாக்குத்தத்தங்களை நம்புவதற்கான தைரியத்தை எனக்குத் தந்தருளும். உம் பார்வைக்கு பிரியமாக வாழ்வதற்கு என்னை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.