அன்பானவர்களே, இன்று, "சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்" (சங்கீதம் 41:1) என்ற அருமையான வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அநேகவேளைகளில் நாம், நமக்கே பல போராட்டங்கள் இருக்கும்போது, ஏன் பெலவீனருக்கு, ஏழைகளுக்கு அல்லது தேவையில் இருப்போருக்கு உதவி செய்யவேண்டும்? என்று எண்ணுகிறோம். ஆனாலும், இயேசு, சிறியவர்களாகிய அவரது சகோதரருக்கும் சகோதரிகளுக்கும் எதைச் செய்கிறோமோ அதை அவருக்கே செய்வதாக நினைவுப்படுத்தியுள்ளார் (மத்தேயு 25ம் அதிகாரம்). உதவியற்றவர்களுக்கு மனதுருக்கத்தோடு செய்யப்படும் எந்தச் செயலும் ஆண்டவரை ஆராதிப்பதாகும்; அப்படிப்பட்ட அன்பை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்

குர்தாஸ்பூரைச் சேர்ந்த பரம்ஜித் என்ற சகோதரி இந்தச் சத்தியத்தை அனுபவித்தார்கள். 25 ஆண்டுகளாக அவர்கள் இயேசு அழைக்கிறார் ஊழியத்தோடு இணைந்திருக்கிறார்கள். அவர்களுடைய தங்கைகளுக்கெல்லாம் திருமணம் நடந்து, மகிழ்ச்சியாய் இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமலே இருந்தார்கள். மக்கள், அந்தச் சகோதரியின் விசுவாசத்தைக் குறித்து கேள்விகேட்டு, "உன் தேவன் எங்கே?" என்று கேலி செய்தார்கள். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து உபவாசித்து, ஜெபித்து, பக்தியுள்ள துணைவர் வேண்டும் என்று தேவனிடம் கேட்டார்கள். பத்து ஆண்டுகள் காத்திருந்த பின்னர், அவர்கள் Dr. பால் தினகரனுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவர் அனுப்பிய பதில் அவர்களுக்கு மிகுந்த மன சமாதானத்தைக் கொடுத்தது. அவர், உங்கள் நம்பிக்கை வீண்போவதில்லை என்றும் கர்த்தர், அவர்களைச் செழிக்கப்பண்ணவே நினைத்திருக்கிறார் என்றும் வாக்குத்தத்தங்களை அனுப்பி அவர்களை ஊக்குவித்தார். இந்த வாக்குத்தத்தங்களை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு அவர்கள் தொடர்ந்து தேவனை நம்பினார்கள். 2009ம் ஆண்டில் அவர்களது 44வது வயதில் ஆச்சரியவிதமாக திரு.பீட்டர் என்பவரை வாழ்க்கைத் துணையாகக் கொடுத்து தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லற வாழ்வை தொடங்கினர்.

திருமணம் முடிந்ததும் அவர்கள் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைந்துகொண்டார்கள். அவர்கள் கணவர் மின் வாரியத்தில் நல்ல வேலையில் இருந்தாலும், இருவரும் ஆண்டவரை நேசித்தாலும் ஐந்து ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்தனர். அவர்கள் உள்ளங்கள் உடைந்தன. வயது முதிர்வினால் தங்களுக்கு குழந்தையே பிறக்காது என்று பயந்தனர். இந்த வேதனையான சூழலிலும் நலிவுற்ற சிறுபிள்ளைகளை சீஷாவின் வாயிலாக ஆதரித்தனர். நம்பிக்கையற்ற பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக விளங்குவதற்கு தீர்மானித்தனர். பிள்ளைகளை ஆதரிக்க ஆரம்பித்த இரண்டே மாதங்களில் அவர்கள் ஆச்சரியப்படும்வண்ணம் தேவன் ஓர் அற்புதத்தைச் செய்தார். பரம்ஜித் கர்ப்பந்தரித்தார்கள். 2015 ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மகிமா என்று பெயரிட்டனர். இன்று அவள் தாலந்துள்ள ஒரு பிள்ளையாக வளர்ந்து, படிப்பில் சிறந்து விளங்குவதோடு, தன் திறமைகளை தேவ மகிமைக்கென்று பயன்படுத்தவும் செய்கிறாள்.

பரம்ஜித்தும் பீட்டரும் தேவையுள்ள சிறுபிள்ளைகளுக்கு மனதுருக்கம் காட்டியதால், தேவன் அவர்கள் உள்ளத்தின் மிகுந்த வாஞ்சையை நிறைவேற்றினார். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவதை அவர்கள் தெரிவு செய்ததால், பல ஆண்டுகளாய் அவர்கள் காத்திருந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். இதுவே, தேவனின் வாக்குத்தத்தம். நாம் பெலவீனர்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அன்போடு சேவை செய்யும்போது, ஆண்டவர்தாமே நம்மை நினைவுகூர்வார். நம் மனதுருக்கத்தை கனப்படுத்தி, நம் உள்ளங்களின் விருப்பங்களை அருளிச்செய்து ஆசீர்வதிப்பார். இன்று எந்த ஆசீர்வாதத்திற்காக நீங்கள் காத்திருந்தாலும், தேவனை நம்புங்கள்; மனமுவந்து மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்; தம் ஏற்றவேளையில் தேவன் உங்களுக்கு பலனளிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மைப்போலவே எளியவர்கள்மேல் அன்பும் அக்கறையும் காட்டும்படி எனக்குக் கற்பிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தேவையில் உள்ளோருக்கு, அவர்களுக்குச் செய்வதை உமக்கே செய்கிறேன் என்று அறிந்து, மனமுவந்து சேவை செய்யும் இரக்கமுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருளும். எல்லா பாரத்தையும், ஜெபத்தையும், வாழ்க்கையின் வாஞ்சையையும் நினைத்து, உம் பூரண சித்தத்தின்படி என்னை ஆசீர்வதித்தருளும். உம் நாமத்தினாலே செய்யப்படும் அன்பான எல்லா செயலுக்கும் பலன் அளித்தருளும்; என் வாழ்க்கை உம் அன்பை உலகத்திற்குக் காட்டுவதாக. மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி என்னை உம் கிருபையினால் நிரப்பும்; என் இருதயத்தில் நீர் வைத்த விருப்பங்களை நிறைவேற்றவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.