நண்பர்களே! ஏசாயா 58:9ல், "ஆண்டவர் உங்கள் கூப்பிடுதலுக்கு செவிகொடுப்பார்." நீங்கள் ஒவ்வொரு இரவும் அழுகையோடு இருக்கிறீர்களா? தூக்கம் இல்லாமல் தவிக்கிறீர்களா? துக்கம் உங்களை அச்சுறுத்துகிறதா? உங்கள் வியாதியில் இருந்து சுகம் கிடைக்காமல் நம்பிக்கையற்று காணப்படுகிறீர்களா? நெடுநாள் குழந்தை இல்லாமல் வேதனைப்படுகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் உயர்வு இல்லாமல் அப்படியே இருக்கிறேனே என்று நம்பிக்கையற்று காணப்படுகிறீர்களா?
பிரியமானவர்களே, நீங்கள் ஆண்டவரை நோக்கி அழுது கூப்பிட்டீர்கள் அல்லவா? "இதோ, நான் உன்னோடுகூட இருக்கிறேன்" என்று ஆண்டவர் சொல்லுகிறார். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் உங்களுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வார். உங்களை விடுவிப்பார். சகல பிரச்சனைகளிலும் இருந்தும் உங்களைக் காப்பாற்றுவார். உங்கள் கண்ணீரையெல்லாம் தேவன் தம்முடைய துருத்தியில் வைத்திருக்கிறார். ஆகவே, உங்கள் கண்ணீர் ஒருபோதும் வீண்போகாது. இன்றைக்கு தேவன் உங்களுக்கு மறுஉத்தரவு அருளுவார். இப்பொழுது ஆண்டவருக்கு நன்றி செலுத்தி ஜெபிக்க ஆரம்பிப்பீர்களா?
"அவன் என்னை நோக்கி கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்" என்று சங்கீதம் 91:15ல் நாம் வாசிக்கிறாம்.
ஆம் நண்பர்களே! நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் உங்களை விடுவித்து உங்களை இரட்சிப்பார். மத்தேயு 15-ல் நாம் ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். இயேசு ஒரு பட்டணத்தில் இருந்து இன்னொரு பட்டணத்திற்கு கடந்துசெல்லும் வழியில், ஒரு கானானிய ஸ்திரி அவரை எதிர்கொண்டு வந்து, "தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்; என்னுடைய மகள் கொடிய பிசாசினால் மிகவும் வேதனைப்படுகிறாள்" என்று கண்ணீரோடு இயேசுவை தொடர்ந்து அலட்டிக்கொண்டே இருந்தாள். சீஷர்கள் அவரிடத்தில் வந்து, ஆண்டவரே இவளை போகவிடும். ஓயாமல் உம்மை அலட்டிக்கொண்டிருக்கிறாள் என்று சொன்னபோது, இயேசு ஒன்றும் மறுஉத்தரவு சொல்லவில்லை. ஆனாலும், அவள் அவரை விடாமல் ஓயாமல் அலட்டிக்கொண்டிருந்தாள். இயேசு அவளை நோக்கி, "ஸ்தீரியே உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது" என்றார். அந்நேரமே அவளுடைய மகள் விடுதலையடைந்தாள்.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாத நம்பிக்கையற்ற சூழ்நிலையில், "இதோ நான் உன்னோடுகூட இருக்கிறேன்" என்று ஆண்டவர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் அவரை நம்பும்போது அவர் உங்களை விடுவித்து, கனப்படுத்தி உயர்த்துவார்.
அன்பானவர்களே, ஏசாயா 58:9-ல் “உன் வெளிச்சம் விடியலைப்போலப் பிரகாசிக்கும், அப்பொழுது நீங்கள் கூப்பிடுங்கள், கர்த்தர் பதிலளிப்பார்; நீங்கள் உதவிக்காக அழுவீர்கள், அவர்: இதோ இருக்கிறேன் என்று கூறுவார்” என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தின்படி நீங்கள் ஒருவேளை அழுகையோடு, சரீர சுகத்திற்காக, உங்கள் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட, நல்ல வேலைக்காக, உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக ஆண்டவரை நோக்கி நம்பிக்கையற்ற நிலையில் கூப்பிடலாம். கவலைப்படாதிருங்கள். ஆண்டவர் உங்கள் கூப்பிடுதலுக்கு செவி சாய்த்து "இதோ நான் உன்னோடுகூட இருக்கிறேன்" என்று சொல்லுகிறார்.
ஜெபம்:
கர்த்தராகிய இயேசுவே, இன்று நான் என் முழு இருதயத்தோடும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். வேறு யாரும் கேட்காதபோது நீர் என் குரலைக் கேட்டு, "இதோ நான் இருக்கிறேன்" என்று சொன்னீர் உமக்கு நன்றி. நீர் அருகில் இருப்பதாக நம்புகிறேன். என் பிரச்சனையிலிருந்து என்னை மீட்டு, எனக்கு அமைதியைத் தாரும். என் சரீரத்தில் சுகத்தைக் கட்டளையிடும். ஆண்டவரே, நீர் என் குடும்பத்தை ஒற்றுமையாலும் அன்பாலும் நிரப்பும். என் வாழ்க்கையின் பொருளாதார தேவைகளை சந்திக்கப்பட கதவுகளை திறந்தருளும். என் வழிகளை ஒளிரச்செய்யும். நீர் என் கண்ணீரைத் துடைத்து, என் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.