அன்பானவர்களே, இன்று உங்களோடு தொடர்புகொள்ளுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, "இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்" (சங்கீதம் 147:3) என்ற வாக்குத்தத்தத்தைத் தியானிப்போம். உங்கள் உள்ளம் உடைந்துள்ளதா? வியாதிப்பட்டிருக்கிறீர்களா? நோய் மீண்டும் மீண்டும் வருகிறதா? எவ்வளவுதான் சிகிச்சை எடுத்தாலும் அது அகலவில்லையா? அதை எண்ணி உடைந்துபோயிருக்கிறீர்களா? பெலவீனப்பட்டிருக்கிறீர்களா? இன்று, ஆண்டவர் உடைந்த உங்கள் உள்ளத்தை குணப்படுத்துவதாக, உங்கள் காயங்களை கட்டுவதாகக் கூறுகிறார்.
அவரது தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள். இயேசு, உங்களுக்காகக் காயப்பட்டார். நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கிற வேதனையை அவர் அறிவார். உங்கள் உடலில் எவ்வளவு பெலவீனத்தை உணர்கிறீர்கள் என்று அவருக்குத் தெரியும். எதிர்காலத்தைக் குறித்து உங்கள் இருதயத்தைப் பிடித்திருக்கும் பயத்தையும் அவர் அறிவார். இன்று அவர் உங்களைக் குணப்படுத்தி, புதிதாக்குவார்.
சுரேஷ் என்ற அன்பு சகோதரருக்கு இப்படியே நடந்தது. காக்கிநாடாவிலிருந்து அவர் தன் சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். அவருக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அறுவைசிகிச்சை செய்து புற்றுநோயை அகற்றவேண்டியதிருந்தது. மருத்துவர், குரல்வளையை இழக்கநேரிடும் என்று கூறினார். இதைக் கேட்டதும் அவர் உள்ளம் உடைந்தார். "என் குரலையே முற்றிலும் இழந்துவிடுவேன்," என்று எண்ணினார். பரிசோதனை முடிந்து இரண்டு முறை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், புற்றுநோய் அகலவில்லை. எதிர்காலத்தைக் குறித்த பயமும் கலக்கமும் அவரைப் பிடித்தன. உடலிலும் உணர்வுப்பூர்வமாகவும் அவர் பெலவீனப்பட்டார். உடைந்தவராய், பயத்தால் நிரம்பினார். இந்தச் சூழ்நிலையில், இயேசு அழைக்கிறார் பத்திரிகை அவருக்கு வந்தது. "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" என்ற வாக்கியத்தை அவர் வாசித்தார். அதைப் பற்றிக்கொண்டார். அந்த வாக்கியம் அவருக்கு மிகுந்த ஆறுதலைக்கொடுத்தது. அதன்பிறகு பெதஸ்தா ஜெப மையத்திற்கு ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு Dr. பால் தினகரன் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரும் அதில் இணைந்து, ஜெபித்தார். உடன்தானே, தேவனுடைய ஆறுதலை இருதயத்தில் உணர்ந்தார். பின்னர், ஸ்கேன் பரிசோதனை செய்யும்படி மருத்துவர்களிடம் சென்றார். ஆச்சரியமான காரியம் நடந்தது. மருத்துவர்கள், புற்றுநோயின் அறிகுறியே இல்லையென்று வியந்தனர். அவர்கள், அற்புதவிதமாக அவர் சுகம் பெற்றதாக கூறினர். அவர் சந்தோஷத்தால் நிரம்பினார். 'ஆண்டவர் இயேசுவே என்னை சுகப்படுத்தினார்' என்று கூறினார்.
ஆம், அன்பானவர்களே, இப்போது, அவர் பூரண சுகத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆண்டவர், அப்படியே உங்களுக்கும் செய்வார். உடைந்த உள்ளத்தோடு இதை வாசித்து, ஆண்டவரிடம், "இன்னும் எவ்வளவு காலம் நான் பாடுபடுவேன்? இதுதான் என் முடிவா? நான் என்ன செய்தேன், இது வந்திருக்கிறது?" என்று கேட்கலாம். ஆண்டவர், தாமே உங்கள் உடைந்த உள்ளத்தை குணப்படுத்துவதாகவும், உங்கள் காயங்களைக் கட்டுவதாகவும் கூறுகிறார். இது முடியாது என்று மருத்துவர்கள் கூறலாம்; ஆனால், முடியாத எல்லாவற்றையும் முடிகின்ற ஒன்றாக மாற்றுகிற தேவன் நமக்குண்டு. ஆகவே, இன்று அவரை விசுவாசித்திடுங்கள். அவரது ஆறுதலை, வாழ்வதற்கான அவரது பெலனை பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைப் பரிபூரணமாகக் குணமாக்குவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்தச் செய்தியை உடைந்த உள்ளத்தோடு வாசிக்கிற அனைவரையும் குணப்படுத்துவீராக. இன்று அவர்கள் நொறுங்கியிருக்கலாம்; விழுந்துபோயிருக்கலாம்; பெலவீனமாயிருக்கலாம். வியாதி, அவர்களை உயிரோடு தின்று, அவர்கள் பெலனையெல்லாம் எடுத்துப்போட்டிருக்கலாம். ஆண்டவரே, அவர்கள் உதவியற்றிருக்கலாம். உம் குணமாக்கும் வல்லமையை உம் பிள்ளைகள்மேல் பொழிந்து அவர்கள் உறுப்புகளில், உடல்களில், மனங்களில், இருதயங்களில் ஜீவனை அருளுவீராக. ஆண்டவரே, உம் சுவாசத்தை இவர்களுக்குள் ஊதும். உம் தழும்புகளால் இவர்கள் குணமாகட்டும். சுகமளிக்கும் உம் கரத்தால் இவர்களைத் தொடும்; இப்போதே அவர்களுக்கு பூரண சுகத்தை அளித்திடும். அவர்கள் காயங்களைக் கட்டி, சுகப்படுத்துவீராக. நீரே அவர்கள் பரிகாரி. உம்மேல் நம்பிக்கை வைத்து, உம்மிடமிருந்து சுகத்தைப் பெற்றுக்கொள்கிறோம். ஆண்டவரே, உம் நாமத்தை மகிமைப்படுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


