அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்" (நீதிமொழிகள் 2:6) என்ற வசனத்தை தியானிப்போம். நம் தேவன் சகல ஞானத்தின் ஊற்றாக இருக்கிறார். ஞானம் நமக்கு வினாவையும் அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும் என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 1:4). நாம் அதை ஒளிப்பிடத்திலுள்ள பொக்கிஷத்தைப்போல தேடவேண்டும். தேவனுடைய வார்த்தைக்காக நாம் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறோமோ அந்த அளவுக்கு தெய்வீக ஞானம் நமக்குள் இறங்கும். மெய்யான ஞானம் எது என்று நீங்கள் கேட்கலாம். வேதம், "கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்" (1 கொரிந்தியர் 1:24) என்று கூறுகிறது. அவருக்குள் ஞானம் அறிவு ஆகிய சகல பொக்கிஷங்களும் அடங்கியிருக்கிறது. இந்த ஞானத்தை மனுஷீக முயற்சியால் சம்பாதிக்க முடியாது. ஆனால் கிறிஸ்து இயேசுவின்மேல் வைக்கும் விசுவாசத்தால் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டவர், "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று கூறியிருக்கிறார் (மத்தேயு 4:4). தன் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து அவற்றின்படி செய்கிற மனுஷன் கன்மலையின்மேல் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப்போல இருக்கிறான் என்றும் அவர் கூறியிருக்கிறார் (மத்தேயு 7:24). தேவனுடைய வார்த்தை, அதைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற நம்மை ஞானமுள்ளவர்களாக்கும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். உலக ஞானம் தவறானதல்ல; ஆனால், உள்ளான மனுஷனால் கொடுக்கப்படும் ஆவிக்குரிய ஞானத்தால் அது சமநிலைப்படுத்தப்படவேண்டும்.

தேவ ஞானத்தை நாம் கேட்கவேண்டும். பரிசுத்த ஆவியினால் நாம் நிரப்பப்படும்போது, ஆண்டவர் நமக்கு தெய்வீக ஞானத்தையும் யோசனையையும் அருளிச்செய்வார். ஞானமுள்ள, ஜீவனுள்ள சொற்களை மற்றவர்களிடம் பேசும்படி உதவுகிறார். நாம் அவருடைய வார்த்தையால் பிழைக்கிறதோடு, மற்றவர்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்ள உதவுகிற பாத்திரங்களாகவும் மாறுகிறோம். ஆதி திருச்சபையின் தலைவர்களை அப்போஸ்தலர்கள் தெரிந்தெடுத்தபோது ஞானத்தாலும் பரிசுத்த ஆவியாலும் நிரப்பப்பட்டவர்களை தேடினார்கள். ஸ்தேவான் அப்படி விசுவாசமும் ஆவியும் ஞானமும் நிறைந்தவனாக காணப்பட்டான். சிரேனே, அலெக்சந்திரியா மற்றும் ஆசிய மக்கள் அவனுக்கு விரோதமாக எழும்பினர்; ஆனால் அவன் பேசிய ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று (அப்போஸ்தலர் 6:9,10).தேவ ஞானம் தன் வார்த்தைகளை வழிநடத்தியமையால் ஸ்தேவான் திடமாக நின்றான். அதேபோல தானியேலும் தெய்வீக யோசனை நிரம்பியவனாக காணப்பட்டான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேவ ஆவியும் ஞானமும் தானியேலுக்குள் இருப்பதை அறிந்ததும் அவனை கனமான பதவிக்கு உயர்த்தினான்.அவ்வண்ணமே தேவ ஞானம் உங்கள் வாழ்க்கையில் நிரம்பும்போது, அவர் உங்களை உயர்த்தி, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பார்.

அன்பானவர்களே, இன்றைக்கு பரலோக ஞானத்தைக் கேளுங்கள். தேவனுடைய வாக்குத்தத்தம் இப்போதும் நிலைத்திருக்கிறது. அவர் கேட்கிற யாவருக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார். அவருடைய வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையின்படியும் நீங்கள் வாழ்வீர்களாக. உங்கள் தீர்மானங்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் ஆவியானவரால் நடத்தப்படுவதாக. ஆண்டவர்தாமே உங்கள் இருதயத்தை தெய்வீக அறிவினாலும் புத்தியினாலும் நிரப்புவாராக. நீங்கள் பேசும் வார்த்தைகள் தேவ ஞானமும் வல்லமையும் நிறைந்தவையாய் இருப்பதாக.ஸ்தேவானையும் தானியேலையும் போல நீங்கள் ஆவியினாலும் தேவ ஞானத்தினாலும் நிரப்பப்பட்டிருப்பீர்களாக. மற்றவர்கள் தேவ ஞானமாகிய கிறிஸ்து உங்கள் மூலமாக பிரகாசிப்பதை காண்பார்களாக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, ஞானத்தை அருளுகிற உம் வசனத்துக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் வாக்குப்பண்ணியபடியே இன்றைக்கு உம் தெய்வீக ஞானத்தாலும் அறிவாலும் புத்தியாலும் என்னை நிரப்பும். உம்முடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் என்னுள் தங்கியிருப்பதாக. ஆண்டவர் இயேசுவே, தேவ ஞானமாகிய நீரே வந்து என் இருதயத்தை நிரப்பும். ஞானமான தீர்மானங்களை செய்ய நான் போராடும்போது எனக்கு யோசனையை அருளிச் செய்வீராக. ஞாபக சக்தியையும் தெளிவான மனதையும் எனக்குத் தந்தருளும்.உம்முடைய வழிகாட்டுதலால், தேர்வுகளில் நான்  வெற்றியை காண உதவும். உமது ஞானத்தை அருளும் ஆவியும் வெளிப்பாடுகளும் என்மேல் வருவதாக.ஆழமான இரகசியங்களை எனக்கு வெளிப்படுத்தும். தானியேலையும் ஸ்தேவானையும்போல என்னை ஞானத்தினாலும் வல்லமையினாலும் நிரப்பும்.என் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஜீவனை அளிக்கட்டும். ஆண்டவரே, என்னை மகா உயரங்களுக்கு உயர்த்துவீராக. தீர்க்கமான பார்வையையும், புரிந்துகொள்ளுதலையும், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தையும் எனக்குத் தந்து ஆசீர்வதிப்பீராக.உம்முடைய சமுகத்தில் நான் சந்தோஷத்தையும் உம்முடைய ஞானத்தில் பெலனையும் கண்டுகொள்ள உதவ வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.