அன்பானவர்களே, இன்று உங்களோடு தியானிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய வாக்குத்தத்தம், "பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர் 5:5) என்று கூறுகிறது. பலவேளைகளில், வாழ்க்கையில் கடினமான தருணங்களில் நம்பிக்கையை பற்றிக்கொண்டிருப்பது சிரமமாய் தெரியும். அடுத்து என்ன செய்வதென்று தெரியாதபோது, மக்கள் வந்து உங்களிடம், "உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? அடுத்து உனக்கு என்ன? ஏன் அது இன்னும் நடக்கவில்லை? ஓர் அற்புதத்திற்காக தேவனை நம்பியிருக்கிறேன் என்று சொன்னாயோ, அது எங்கே?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும்போது நாம் புண்படுகிறோம்; அதைரியப்படுகிறோம். மக்கள் நம்மை கீழே தள்ளுவதற்கு முயற்சிக்கலாம்; அதுபோன்ற தருணங்களில் நம்பிக்கையில் நிலைத்திருப்பது, நம் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்வது சிரமமாயிருக்கும்.
மக்கள், தாங்கள் யோசிக்கிறபடி நடக்க விரும்புவார்கள்; ஆனால், தேவனே நம்மை எப்போது, எப்படி உயர்த்துவது என்பதை அறிந்திருக்கிறார். ஆகவேதான் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பது முக்கியம். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள யோசேப்பை எண்ணிப்பாருங்கள். தேவன், யோசேப்புக்கு சொப்பனங்களை, சிறந்த சொப்பனங்களைக் கொடுத்தார். ஒருநாள் அவன் உயர்த்தப்படுவான் என்று அவை கூறின. ஆனால், அவன் கண்ட சொப்பனங்களுக்கு மாறாக அவன் வாழ்க்கையில் காரியங்கள் நடந்தன. அவன் குழிக்குள் போடப்பட்டான். அவன் சகோதரர்கள் அவனை வெறுத்தனர்; அவனை அடிமையாய் விற்றுப்போட்டனர். பின்னர் அவன் சிறைச்சாலைக்குள் போடப்பட்டான். தேவன் அவனுக்குக் காண்பித்த சொப்பனங்களுக்கு முற்றிலும் மாறாக அவன் வாழ்க்கைக் காணப்பட்டது. ஆனாலும், யோசேப்பு கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையை மாற்றவில்லை. அவன் இருதயம் கடினப்படவில்லை. தேவன், தொடர்ந்து தம் அன்பை அவன்மேல் ஊற்றினார். ஏற்றவேளையில் தேவன் யோசேப்பை உயர்த்தி, அவனை புண்படுத்தியவர்களுக்கு சேவை செய்யும்படியான அதிகாரமான பொறுப்பில் அமர்த்தினார். யோசேப்பு தம்மை நம்பியிருந்தபடியால் தேவன் தமது வேளையில் அவனை உயர்த்தினார்.
தன்னை ஏமாற்றியவர்களை, புண்படுத்தியவர்களை நேருக்கு நேராக சந்தித்தாலும் யோசேப்பு கசப்போ, காயமோ ஏமாற்றமோ தன் உள்ளத்தை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. மாறாக, தேவ அன்புடன் அவர்களுக்குச் சேவை செய்தான். "நீங்கள் எனக்கு தீங்கு நினைத்தீர்கள். ஆனால், தேவனோ அதை நன்மையாக முடியச்செய்தார்," என்று யோசேப்பால் சொல்ல முடிந்தது. மக்கள் தனக்கு தீமை செய்தார்கள் என்ற உண்மையை யோசேப்பு மறுக்கவில்லை. ஆனால், தன் உள்ளத்தில் கிரியை செய்வதற்கு அவன் தேவனுக்கு இடங்கொடுத்தான். ஒரு நபரின் உள்ளத்தில் தேவ அன்பு செய்ய கூடிய கிரியை அதுவாகும். தேவ அன்பு, தொடர்ந்து நம் உள்ளத்தை நிறைத்து ஆண்டவர்மேல் நம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது.
தேவ அன்பு, ஆண்டவரை, அவரது யோசனைகளை, அவரது நோக்கங்கள் நம் வாழ்வில் நிறைவேறும் வேளைகளை நம்புவதற்கு உதவுகிறது. ஆகவே, சூழ்நிலை எப்படியிருந்தாலும் ஆண்டவரில் நம்பிக்கை வைத்திடுங்கள். கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் வெட்கமடைவதில்லை. ஆகவே, சந்தோஷமாயிருங்கள். தேவ அன்பு உங்கள் உள்ளத்தை நிரப்பும். எல்லா கசப்பையும், எல்லா காயத்தையும், ஏமாற்றத்தையும், முறிவையும் அவர் அகற்றி, உங்கள் வாழ்க்கையை தம் அன்பினால் கட்டுவார். இன்று தைரியமாயிருங்கள். ஏற்றவேளையில் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சிறந்த யோசனைகள் நிறைவேறும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மை நம்புகிறவர்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை என்ற உம் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் எதிர்பார்க்கிறதற்கு மாறான சூழ்நிலை நிலவினாலும் உம் பூரண வேளையையும், உம் யோசனைகளையும் நம்புவதற்கு எனக்கு உதவும். எல்லா கசப்பையும், காயங்களையும், ஏமாற்றத்தையும், தனிமையையும், முறிவையும் என் உள்ளத்திலிருந்து அகற்றும்; உம் நிபந்தனையற்ற அன்பினால் உள்ளத்தை நிரப்பும். ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாளுவதற்கு தேவையான கிருபையையும் ஞானத்தையும் எனக்குத் தந்தருளும். உம் யோசனைகள் என் வாழ்வில் நிறைவேறி, பிறருக்கு என்னை ஆசீர்வாதமானவளா(னா)க மாற்றும்படி தாழ்மையாக இருக்க எனக்கு உதவி செய்யும். முழுவதும் உம் வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிவதினாலும், உம்மை முழுவதுமாய் நம்புவதாலும் என் முயற்சிகள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்தருளும். என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமைய கொண்டு வருவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


