அன்பானவர்களே, இன்றைக்கு உழைப்பாளர் தினமாகும். தேவன்தாமே உங்கள் கைகளின் பிரயாசத்தையும், குடும்பத்தையும், வாழ்வாதாரத்தையும், மற்றவர்களுக்கும், தமக்கும் செய்யும் சேவையையும் ஆசீர்வதிப்பாராக. இந்த மாதத்தில் உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் திரும்ப கட்டுவதற்கு கர்த்தர் விரும்புகிறார். "கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்" (சங்கீதம் 102:15) என்று வேதம் கூறுகிறது. எல்லாம் தொலைந்துபோனதுபோல, நொறுங்கிவிட்டதுபோல, உங்கள் வாழ்வை விட்டு மகிமை அகன்றுபோனதுபோல நீங்கள் உணரலாம். ஆனாலும் தேவன், "உன்னை என் வாசஸ்தலமாக திரும்ப கட்டுவேன்; உன் வாழ்வில் என் மகிமையை மறுபடியும் காணப்படும்," என்று வாக்குக்கொடுக்கிறார். உங்கள் வாழ்க்கை, குடும்பம், சரீரம், ஊழியம் எல்லாமும் அவரது மகிமையால் சீர்ப்படுத்தப்படும்; நீங்கள் மறுபடியும் பிரகாசிப்பீர்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவன் உங்களைத் திரும்ப கட்டும்போது மகிமையின் நாட்கள் வரும். நீங்கள் நெடுங்காலமாய் பாழாய்க்கிடந்தவைகளையும், பூர்வத்தில் நிர்மூலமானவற்றையும் கட்டுவீர்கள் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 61:4).
உங்கள் வாழ்வில் எவை முறிந்திருந்தாலும், தேவன் அதைப் பெலப்படுத்துவார்; அதை திரும்பக் கட்டும்படி தம் மகிமையால் உங்களை நிரப்புவார். இடிந்த மதில்கள், பாழாய்ப்போனவை அனைத்தும் சீர்ப்படுத்தப்படும் என்று வேதம் உறுதியாகக் கூறுகிறது (ஏசாயா 58:12). உறவுகள் புதுப்பிக்கப்படும்; சந்தோஷமும், அன்பும், பரிபூரண ஜீவனும் திரும்பும்.
தேவன் எதைத் திரும்பக் கட்டுவார்? முதலாவது, உங்கள் பாக்கியங்களைத் திரும்பக் கட்டுவார். சிறையிருப்பிலிருந்து மீட்பை வேதம் வாக்குப்பண்ணுகிறது (ஆமோஸ் 9:14). நீங்கள் கட்டப்பட்டுள்ளதாக, முன்னேற முடியாமல் இருப்பதாக எண்ணலாம்; ஆனால், தேவன் தம் ஆவியினால் உங்களை விடுவிப்பார். இடிந்துபோனவற்றை நீங்கள் கட்டுவதோடு, திராட்சத்தோட்டங்களையும் நாட்டுவீர்கள். அவற்றின் கனிகளைப் புசிப்பீர்கள்; தோட்டங்களை நாட்டி அவற்றின் விளைச்சலை மகிழ்ச்சியோடு சேர்ப்பீர்கள். உங்கள் வேலை, வியாபாரம், குடும்பம், ஊழியம் எல்லாம் மீண்டும் பலன் கொடுக்கத் தொடங்கும். செங்கல்கட்டு இடிந்துபோனதாக நினைவுப்படுத்தும் வேதம், உறவுகள், பொருளாதாரம், உடல்நலம், நற்பெயர், ஞானம், திறன் எவை சீர்கெட்டுப்போனாலும் அவற்றை மறுபடியும் சீர்ப்படுத்த தேவன் உதவுவார் என்று கூறுகிறது (ஏசாயா 9:9). அவர் உங்களுக்கு கன்மலையான இயேசு கிறிஸ்துவாகிய புதிய அஸ்திபாரமாக விளங்குவார் (1 கொரிந்தியர் 10:4). கோலியாத்தை வீழ்த்திய கல்லைப்போன்று, கிறிஸ்து உங்களோடு திடமான அஸ்திபாரமாக நிற்பார். அத்தி மரங்கள் கனிகொடாமல் போனால், தேவன் அவற்றுக்குப் பதிலாக கேதுரு மரங்களை நாட்டுவார் என்பது, அவரது பெலனையும் அருட்கொடையையும் குறிக்கிறது. இயேசுவை உங்கள் அஸ்திபாரமாகக் கொண்டு எழும்புங்கள்; அவருடைய மகிமையுடன் மறுபடியும் கட்டப்படுங்கள். விழுந்துபோன தாவீதின் கூடாரம் எழுப்பப்படுவதைக் குறித்து வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 15:16). அது பாவத்தினாலும் அவிசுவாசத்தினாலும் விழுந்துபோனாலும், மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் மன்னிப்பையும் விசுவாசித்து மக்கள் திரும்பியபோது சீர்ப்படுத்தல் உண்டானது. அவ்வாறே, நீங்கள் தேவனிடம் திரும்பும்போது அவர் உங்கள் வாழ்க்கையைக் கட்டுவார்.
இரண்டாவதாக, தேவன் உங்கள் குடும்பத்தைத் திரும்பக் கட்டுவார். இழந்த வருஷங்கள் திரும்ப அளிக்கப்படும் என்று வேதம் வாக்குப்பண்ணுகிறது (யோவேல் 2:25-27). வெட்டுக்கிளிகள் பட்சித்தவை திரும்ப அளிக்கப்படும். நீங்கள் பரிபூரணத்தை அனுபவிப்பீர்கள். மீண்டும் ஒருபோதும் வெட்கப்படாதிருப்பீர்கள். அதற்காக கர்த்தரை துதியுங்கள். தேவன் உங்கள் குடும்பத்தை தாம் வாசம்பண்ணும் இடமாக மாற்றுவார்; கனத்தைத் தருவார். மாம்சமான யாவர்மேலும் அவர் தம் ஆவியை ஊற்றுவார். உங்கள் குமாரரும் குமாரத்திகளும் இயேசுவைக் குறித்த சாட்சியை தீர்க்கதரிசனமாக உரைப்பார்கள் (வெளிப்படுத்தல் 19:10). அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவர் செய்த கிரியைகளை தைரியமாய் பகிர்ந்துகொள்வார்கள். வாலிபர் தரிசனங்களைக் காண்பார்கள்; சிறந்து விளங்குவார்கள்; செழிப்பார்கள்; உலகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கண்டு பிடிப்பார்கள்; பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். உங்கள் மூப்பர் சந்தோஷத்தின் சொப்பனங்களை, சீர்ப்படுத்துதல் நிறைவேறுவதை காண்பார்கள். பரிசுத்த ஆவியின் வாயிலாக உங்கள் குடும்பம் முழுமையும் திரும்ப கட்டப்படும்.
மூன்றாவதாக, உங்கள் பெயர் திரும்பக் கட்டப்படும். உங்கள் பெயர் கெடுக்கப்பட்டுவிட்டதாக அல்லது அவமரியாதைக்குள்ளாக்கப்பட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், தேவன், வெண்மையான கல்லில் எழுதப்பட்ட புதிய நாமத்தை உங்களுக்குத் தருகிறார் (வெளிப்படுத்தல் 2:17). தேவன்தாமே அளிக்கும் புதுப்பெயர், கனத்தை, புதிய பொறுப்பை, புதிய அந்தஸ்தை கொண்டு வரும்; உங்களைப் புதிய சாதனைகளைச் செய்யப்பண்ணும். நீங்கள் புதிய மகிமையில் நடப்பீர்கள். தேவன், தம் ஊழியர்களுக்கு அவரது ஆசீர்வாதத்தால் குறிக்கப்படும் வேறு நாமத்தை அருளுவார் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 65:15). கிறிஸ்துவுக்காக நீங்கள் நிந்திக்கப்பட்டால், உங்கள் வாயிலாக பலர் அவரை அறிந்துகொள்ளும்படி உங்களை உயர்த்துவார். அவர் புதிய வல்லமையுள்ள, புதிய ஆவிக்குரிய அடையாளத்தை அளிப்பார். உங்களை ஒடுக்குகிறவர்களை அவர் எதிர்கொண்டு, கீர்த்தியும் புகழ்ச்சியுமான நாமத்தை உங்களுக்கு அளிப்பார் (செப்பனியா 3:19). நீங்கள் வெட்கத்தை அனுபவித்த அதே இடத்தில் கனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். தேவன், வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும், தேசத்தையும் அசைப்பார் என்று வசனம் கூறுகிறது (ஆகாய் 2:6). அப்படி அசைக்கப்படும்போது, எல்லா தேசத்தாரும் விரும்பும் இயேசு, வந்து தம் ஜனங்களை மகிமையால் நிரப்புவார். நீங்கள் ஜீவனுள்ள தேவனின் ஆலயமாவீர்கள்; அவர் உங்களை முன்பைக் காட்டிலும் புதியதும் சிறந்ததுமான மகிமையால் நிரப்புவார். சவால்கள் உங்களை சூழ்ந்துகொண்டாலும், இந்த அசைக்கப்படுதல், அவரது மகிமையை பெற்றுக்கொள்ளும்படி உங்களை ஆயத்தப்படுத்தும். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வின் உடைந்த பகுதிகள் எல்லாவற்றையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னை உம் வாசஸ்தலமாக திரும்ப கட்டுவீராக; உம் மகிமை என்மேல் தங்கியிருக்கட்டும். நான் இழந்தவற்றையெல்லாம் திரும்ப தந்தருளும்; உம் ஆவியால் என் பெலத்தை புதுப்பித்தருளும். ஆண்டவரே, என்னை உம் சத்தியத்தில் நிலைப்படுத்தி, என் அஸ்திபாரமாக இருப்பீராக. என் குடும்பத்தை, வேலையை, என் பெயரை உம் மகிமைக்கென்றும் கனத்துக்கென்றும் திரும்ப கட்டியெழுப்புவீராக. உம் பரிசுத்த ஆவியால் என்னை நிறைத்து, புது வாழ்வுக்குள் வழிநடத்தும். என் வெட்கத்தை கனமாகவும், பெலவீனத்தை பெலனாகவும் மாற்றும். வாழ்வில் நான் செய்கிற எல்லாவற்றிலும் உம் மகிமை விளங்குவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


