அன்பானவர்களே, இன்றைக்கு உங்களோடு இணைந்து தேவனிடமிருந்து வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி. நாம் இணைந்து வார்த்தையைப் பெற்றுக்கொண்டு ஜெபிப்போம். இன்றைய வாக்குத்தத்தம், "நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்" (நீதிமொழிகள் 16:13) என்று கூறுகிறது.
ஒரு நாட்டில், ஓர் அமைச்சர் லஞ்சம் பெற்று மிகவும் செல்வந்தரானார். அவர் மக்களை மிகவும் கடினமாய் நடத்தினார்; வலுக்கட்டாயமாக பணத்தைப் பிடுங்கினார்; சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டார்; திக்கற்ற மக்களைத் தன் லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தினார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அநேகரை தம் பக்கமாக இழுத்தார். பயத்தினால் மக்களும் அவர் பின்னே சென்றனர். இதன் பலனாக, அவர் மிகவும் புகழும் பணமும் சேர்த்தார். காலப்போக்கில், அவர் பெருமை மிகுந்தது. ராஜாவுக்கும் சவால் விட்டார். அவர் ராஜாவுக்கு விரோதமாக புறம்பேசி, மக்களிடையே பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பினார். ராஜாவை பதவியிறக்க முயற்சித்தார். ராஜா, இதைக்கேள்விப்பட்டபோது, தன் அதிகாரிகளை அனுப்பினார். அவர்கள், அந்த அமைச்சரின் கணக்குகளை ஆராய்ந்தார்கள்; அவரது செயல்பாடுகளையும் விசாரித்தனர். அதிகாரிகள் பெரிய ஊழல் பட்டியலோடு ராஜாவிடம் திரும்பினர். அந்த அமைச்சருக்கு ராஜா ஆயுள் தண்டனை விதித்தார்.
அன்பானவர்களே, நேர்மையற்ற வழிகளில் சொத்து சேர்த்தால் இப்படித்தான் நடக்கும். சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட சொத்துகள் ஒருவரை எப்போதும் உயர் ஸ்தானத்தில் வைத்திருக்காது. அப்படிப்பட்ட வெற்றி, தற்காலிகமானது. முடிவில் அது கீழே தள்ளிவிடும். நாம் நேர்மையாக சம்பாதிப்பவையே நிலைக்கும். சரியானவற்றை பேசுகிறவர்கள்பேரில் ராஜா பிரியமாயிருப்பார் என்று இந்த வசனம் கூறுகிறது. நீங்கள் வேலை செய்யுமிடத்தில் உங்கள் உத்தமத்தை உங்கள் உயரதிகாரிகள் மதிப்பார்கள்; பாராட்டுவார்கள். சமுதாயத்தில் மக்கள், "இவர் நம்பத்தகுந்தவர்," என்று கூறுவார்கள்.
அதிக முக்கியமாக, பரலோகத்திலிருக்கும் ராஜாதி ராஜா நேர்மையான உதடுகளை விரும்புகிறார். ஆண்டவராகிய இயேசு உங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்து, நித்திய கனமுள்ள இடத்துக்கு உயர்த்துவார். தேவன் அருளும் மகிமை, பலன்கள், ஆசீர்வாதங்கள் அனைத்தும் நித்தியமானவை; அது, உங்கள் வாழ்க்கையை அவரது சமுகத்தின் நித்திய சந்தோஷத்தால் நிரப்பும். ஆகவே, இன்று ராஜா நம்மேல் பிரியமாயிருக்கும்படி நேர்மையுள்ள இருதயத்தையும் உண்மையுள்ள உதடுகளையும் கொண்டிருக்க நம்மை அர்ப்பணிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பார்வையில் உத்தமமே உயர்ந்து என்று நினைவுப்படுத்துகிறபடியால் ஸ்தோத்திரிக்கிறேன். வாழ்வில் பொது விஷயங்களிலும், தனிப்பட்ட விஷயங்களிலும் உத்தமமாய் நடக்க எனக்கு உதவும்; என் உள்ளத்தை உண்மையினால் நிரப்பும். நேர்மையற்ற சிந்தனையையும் செயலையும் எனக்கு விலக்கியருளும். யாரும் பார்க்காதபோதும் உமக்கு முன்பாக பயபக்தியாய் வாழும்படி செய்யும். நீதியை தெரிவு செய்ததால், நிராகரிப்பு, அநியாயம், தாமதிக்கும் பதவி உயர்வு இவற்றை கடந்துபோகும் அனைவரையும் பெலப்படுத்தியருளும். அவர்களை கனப்படுத்தும்; உயர்த்தும்; உண்மைக்கு ஏற்ற பலனை அருளிச்செய்யும். ஒவ்வொரு நாளும் உம் பரிசுத்த ஆவியானவர், என் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் வழிகாட்டுவராக. அப்போது என் வாழ்க்கை உமக்கு மகிமை கொண்டுவருவதாக அமையும். உம் நித்திய ஆசீர்வாதங்கள், தயவு, தெய்வீக அபிவிருத்தி எப்போதும் என்மீது இருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


