எனக்கு அருமையான தேவ பிள்ளையே, தாவீது கர்த்தருக்குப் பாடிய சங்கீதத்திலிருந்து இன்றைக்கான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவன், "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்" (2 சாமுவேல் 22:2) என்று கூறுகிறான். அவன், "என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக" என்றும் கூறுகிறான் (2 சாமுவேல் 22:47). தாவீதுக்கு அநேக விரோதிகள் இருந்தனர். ஆனால், அவன் ஜெபித்தபோது, கர்த்தரையே தன் ரட்சகராக நோக்கினான்; கர்த்தர் அவனுடனே இருந்து அவனை எல்லா விரோதிகளிடமிருந்தும் விடுவித்தார். அந்தத் தருணத்தில்தான், தாவீது, "என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக" என்றும் கூறியதாக வாசிக்கிறோம்.
அவ்விதமே, புதிய ஏற்பாடு, சவுல், பவுலாக மறுரூபமானதை விவரிக்கிறது. கிறிஸ்துவை பின்பற்றும் அனைவரையும் சவுல் கொன்றுகொண்டிருந்தான். தேவனுக்கு முன்பாக தவறாக வாழ்ந்துகொண்டிருந்தான். ஆனால், இயேசு அவன் வாழ்வில் நுழைந்து, அவனிடம், "சவுலே, எத்தனை காலம் என்னை துன்புறுத்துவாய்? என்று கேட்டார்; ஆண்டவர் அவன் இருதயத்தைத் தொட்டார்.
அவன் பூரணமாக மறுரூபமடைந்தான். வேதம், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" (கலாத்தியர் 2:20) என்று கூறுகிறது. அவன் பவுலாக மாறினான்; பரிபூரணமாக மறுரூபமானான். அவன் இயேசுவை ஏற்றுக்கொண்டு, தேவ ஊழியனாக, தேவ வல்லமையினால் பயன்படுத்தப்பட்டான். அன்பானவர்களே, தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் கன்மலையாக, கோட்டையாக, ரட்சகராக கொண்டிருக்கிறீர்களா? எல்லாவற்றுக்கும் அவரையே பற்றிக்கொண்டிருக்கிறீர்களா? அப்போது கர்த்தர் உங்கள்மேல் பிரியமாயிருப்பார். உங்களைத் தம் மகிமைக்காய் பயன்படுத்துவார். அருமையான தேவ பிள்ளையே, இப்போதே, உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். இயேசுவை உங்கள் ரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். தேவனுக்கு பிரியமானவிதத்தில் வாழ்ந்திடுங்கள்.
ஜெபம்:
தகப்பனே, நீர் சிலுவையில் பலியாகி எங்கள் அனைவருக்கும் ரட்சிப்பை தந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தவறாய் வாழ்ந்திடும் பிள்ளைகளின் உள்ளங்களையும், உம்மைவிட்டு தூரமாய் இருப்போரின் இருதயங்களையும் தொட்டருளும். தகப்பனே, அவர்கள் உம்மை கிட்டிச் சேரப்பண்ணும். நீர் சிலுவையில் சிந்திய உம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் அவர்களைச் சுத்திகரித்தருளும். அவர்களை பவுலைப்போல, முழுவதும் மறுரூபமாக்கி, உமக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக்கும். இயேசு அவர்களுக்குக் கன்மலையும் கோட்டையும் ரட்சகருமாவாராக. உம்மிடம் வரும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தருளும். அவர்கள் வாழ்க்கை உமக்குப் பிரியமானதாக இருப்பதாக. உம் மகிமைக்காக அவர்களை வல்லமையாக பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


