அன்பானவர்களே, இந்த மாதத்திற்கான, இன்றைக்கான ஆண்டவரின் வாக்குத்தத்தமாக, "சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக" (சங்கீதம் 51:18) என்ற வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் தேவன் தம் பிள்ளைகளைச் செழிக்கப்பண்ணுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வாழ்வில் உடைந்துபோன பகுதிகளை மறுபடியும் கட்டுகிறவராகவும் இருக்கிறார். சீயோன் எதைக் குறிக்கிறது? அது தேவனின் வாசஸ்தலமாகும். இயேசு கிறிஸ்துவின் வாயிலாக, உங்கள் உள்ளம் சீயோனாக மாறுகிறது. கர்த்தர், உங்களுக்குள் தம் சிங்காசனத்தை ஸ்தாபிக்க தெரிந்தெடுத்துள்ளார். வேதம், "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4) என்று கூறுகிறது. அவர் உங்களுக்குள் வாசம்பண்ணுவதால் நீங்கள் பயப்பட தேவையில்லை. உங்களை அவருக்கு அர்ப்பணித்தால், உங்கள் வாழ்க்கையை எல்லாப் பக்கமும் அவர் கட்டியெழுப்ப தொடங்குவார்.
தேவ ஊழியரான வில்லியம் பிரன்ஹாமின் மகன் பில்லி பால் அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஊழியத்தினிமித்தம் பயணம் செய்தபோது அவரும் அவர் தந்தையும் ஒரு ஹோட்டல் அறையில் தங்கினர். பின்னிரவில் பிரன்ஹாம் தன் மகனை எழுப்பினார். "என்னோடு பேசுகிற தேவதூதனை பார்க்க விரும்புகிறாயா?" என்று கேட்டார். அவரும் ஒத்துக்கொண்டார்.
அவருடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டன. தேவதூதனைப் போன்ற அழகான ஒருவர் தன் பின்னே நிற்பதை அவர் கண்டார். அந்தத் தேவதூதனின் பார்வையே பில்லியின் கவனத்தை ஈர்த்தது. தன் தந்தை அசையும்போதோ, எதையாவது பேசும்போதோ தேவதூதனின் கண்கள் அவர்மேலேயே வைக்கப்பட்டிருந்ததையும், அன்புடனும் அக்கறையுடனும் அவரைப் பார்த்ததையும் கவனித்தார்.
அன்பானவர்களே, இம்மாதத்திலும் ஆண்டவர் அப்படியே உங்களைக் காண்கிறார். அவருடைய கிருபையின் வாயிலாக, தம் விருப்பத்திற்கேற்ப நன்மையினால் உங்கள் வாழ்க்கையை நிரப்புவார். "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 2) என்ற வசனத்தில் ஆண்டவர் நன்மையைத் தரும் விதம் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது, அவர் உங்களை நீதியில் செழிக்கப்பண்ணுவார். "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:3). கர்த்தர் உங்களை உள்ளும் புறமுமாக மறுரூபமாக்குவார். உங்கள் வாழ்க்கை நீதியின்மேல் கட்டப்படுமாயின், எந்தக் குற்றச்சாட்டும், பொறாமையும், அவதூறும், இருளின் அதிகாரமும் உங்களை மேற்கொள்ள முடியாது. இரண்டாவதாக, ஆண்டவர் உங்களை துதியில் செழிக்கப்பண்ணுவார். வேதம், "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்" (சங்கீதம் 63:3) என்று கூறுகிறது. துதி உங்கள் உள்ளத்தை நிரப்பும்போது, அதைரியம் தன் பெலனை இழக்கும்; உங்கள் கண்கள் பிரச்னையை காண்பதை விட்டு, எல்லா பிரச்னையைக் காட்டிலும் பெரியவரான தேவனை நோக்கும். மூன்றாவதாக, தம் பிரமிப்பான படைப்பாக உங்களைச் செழிக்கப்பண்ணுவார். வேதம், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்" (சங்கீதம் 139:14) என்று கூறுகிறது. நீங்கள் அவரது வாசஸ்தலமாக விளங்குவீர்கள். அவரது கரம் உங்கள்மேல் இருக்கிறது; உங்களைப் பற்றிய அவரது எண்ணங்கள் மாறிவிடவில்லை. ஆண்டவர் உங்களுக்காய் ஆச்சரியமான காரியங்களைச் செய்வார். நான்காவதாக, அவர் உங்களை ஞானத்திலும் அறிவிலும் செழிக்கப்பண்ணுவார். தம்மை தேடும்போது தாமே எல்லா நன்மையான பாதைகளையும் புரிந்துகொள்ள உதவுவதாக ஆண்டவர், நீதிமொழிகள் 2ம் அதிகாரத்தில் வாக்குக்கொடுக்கிறார். ஒருவேளை உங்கள் படிப்பை, வேலையை, குடும்பத்தை, ஊழியத்தை, எதிர்காலத்தைக் குறித்த முடிவை எடுக்கவேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கலாம். உங்கள் ஆத்துமா ஆண்டவரின் ஞானத்திலும் அறிவிலும் செழிப்பாகும்போது எல்லா நன்மையான பாதைகளையும் அவரே வெளிப்படுத்துவார். ஐந்தாவதாக, அவர் தம் நன்மையினாலும் பரிபூரணத்தினாலும் உங்களைச் செழிக்கப்பண்ணுவார். வேதம், "என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்," (எரேமியா 31:14) என்று கூறுகிறது. விடாய்த்துப்போன உங்கள் ஆவியை ஆண்டவர் தேற்றுவார்; சோர்ந்துபோன உங்கள் உள்ளத்தைப் பெலப்படுத்துவார்; நன்மையும் பரிபூரணமும் நிறைந்து வழியும்வண்ணம் உங்களை நிரப்புவார். நிறைவாக, அவர், தம் அன்பை பகிர்ந்துகொண்டு செழிப்பாக்குவார். ஆண்டவர் நமக்குக் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த செழிப்பு, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கக்கூடிய சிலாக்கியமாகும். உங்கள் இருதயத்தை உருவாக்க நீங்கள் இயேசுவுக்கு இடங்கொடுக்கும்போது, அவர் உங்களை தம் சாந்தத்தால், தாழ்மையால், மனதுருக்கத்தால், உதாரகுணத்தால் நிரப்புவார். நீங்கள் அவருடைய கண்களைக் கொண்டு மக்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்; அவருடைய அன்பினால் அவர்களை நேசிப்பீர்கள். ஆகவே, தைரியமாயிருங்கள். அவரது கண்கள் உங்கள்மேல் வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது கரம் உங்கள்மேல் இருக்கிறது. தம் பிரியத்தின்படியும் பரிபூரண சித்தத்தின்படியும் உங்கள் வாழ்க்கையைக் கட்டி நன்மையினால் நிரப்புவார் (சங்கீதம் 51:18).
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, என்னைச் செழிக்கப்பண்ணுவதாகவும் என் வாழ்க்கையில் உடைந்திருக்கும் எல்லாவற்றையும் கட்டுவதாகவும் நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆத்துமா உம் சமுகத்தில் செழிப்பதாக. நீதியில், உம்மை துதிப்பதில், உம் ஞானத்தில், உம் பரிபூரணத்தில் என்னை நிலைப்படுத்துவீராக. உம் நன்மையினால் என்னை நிறைத்து அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றுவீராக. உம் அன்பின் கண்கள் என்னை கண்ணோக்கி, ஒவ்வோர் அடியிலும் நடத்துவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


