அன்பானவர்களே, துரோகம் செய்யப்பட்டதாய் நினைக்கிறீர்களா? நெருங்கிய குடும்பத்தினரும் நட்பு வட்டத்தினரும் உங்களைக் கைவிட்டதாய் எண்ணுகிறீர்களா? எல்லோரும் உங்கள்மேல் ஏறி மிதித்துச் செல்கிறதாய் உணர்கிறீர்களா? வேதம், "இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்" (மீகா 5:2) என்று வாக்குப்பண்ணுகிறது. ஆம், இன்றைக்கு உங்களிடத்திலிருந்து ஆசீர்வாதம் செல்லப்போகிறது. மக்கள் உங்களுக்குத் துரோகம் செய்தாலும், ஆண்டவர் இன்றைக்கு ஆசீர்வாதம் உங்களிடத்திலிருந்து வரும் என்று வாக்குப்பண்ணுகிறார்.
ஆம், என் தந்தை மிகுந்த உதாரகுணமுள்ளவர். யார் பணம் கேட்டாலும் அவர் கொடுத்துக்கொண்டே இருப்பார். அவர்கள் திரும்ப தராவிட்டாலும் அவர் கவலைப்படமாட்டார். மக்கள், "ஐயா, இப்போது தாருங்கள். ஒரு மாதத்திற்குள் நான் திரும்ப தந்துவிடுவேன்," என்று கூறுவார்கள். எனக்கு பத்து வயதாயிருக்கும்போது நடந்தது நினைவில் உள்ளது. எங்களிடம் வேலை செய்த ஒருவர் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கேட்டார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு அது பெருந்தொகை ஆகும். என் தந்தை இன்னொரு முறை யோசிக்காமலே எடுத்து கொடுத்தார். அந்த அண்ணன், "ஐயா, பத்து நாளைக்குள் தந்துவிடுவேன்," என்று சொன்னார்கள். ஆனால், பத்து நாளைக்குள் அவர் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். திரும்ப வரவேயில்லை. நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. என் தந்தை அதைக் குறித்து கவலைப்படவேயில்லை. அவர், "கடவுள் எனக்கு தந்திருக்கிறார். அதனால், நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன்," என்று கூறினார்.
நீங்களும் அதேபோன்ற சூழலில் இருக்கலாம். நீங்கள் அதிகம் நம்பியவர்கள், உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் துரோகம் செய்துவிட்டதாய் நினைக்கலாம். ஆனால், என் தந்தை மாறவேயில்லை. இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். அவர், "ஆண்டவர் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். ஆகவே, கொடுப்பதுதான் என் வேலை," என்று கூறுவார். அவ்வாறே, நீங்கள் கடந்து செல்லும் பாதையை ஆண்டவர் பார்க்கிறார். என் தந்தையை ஆசீர்வதித்ததுபோல உங்களையும் ஆசீர்வதிப்பார். என் அப்பா, திருநெல்வேலியில் நன்கு அறிமுகமான சிறந்த பல் மருத்துவர். தேவன் அவரை ஆசீர்வதித்ததினால்தான் அப்படி இருக்கிறார். அவர் மூலமாக நானும் ஆசீர்வாதம் பெற்றுள்ளேன். நான் ஒரு மருத்துவர். ஊழியத்திற்குள் அழைக்கப்பட்டு, நல்ல குடும்பத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். வேதம், "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்" (ஏசாயா 60:22) என்று கூறுகிறது. அவ்வண்ணமே, உங்களுக்குள் சிறியவராக இருப்பவர் பெரிய தேசமாவார். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்; உங்கள் வழியாக உங்கள் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பார். ஆகவே கைவிடப்பட்டிருந்தால், துரோகமிழைக்கப்பட்டிருந்தால் மனம் உடைந்துபோகாதீர்கள். ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
பரம தகப்பனே, எனக்கு துரோகம் செய்யப்பட்டபோதும், நான் மறக்கப்பட்டபோதும் என் உள்ளத்தை நீர் பார்க்கிறீர். நான் சிந்திய கண்ணீரை, இழந்துபோன நம்பிக்கையை நீர் அறிந்திருக்கிறீர். ஆனாலும், என்னிலிருந்து ஆசீர்வாதம் வரும் என்று நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய வேதனையின் மத்தியிலும் உம் நோக்கம் எனக்குள் எழுவதாக. என் காயங்களை கிருபையின் ஊற்றுகளாகவும், என் துக்கத்தை கெம்பீர சத்தமாகவும் மாற்றும். நீர் என்னை தினமும் மன்னிப்பதுபோல, என்னை புண்படுத்தியவர்களை மன்னிக்க எனக்குக் கற்றுத்தாரும். திரும்ப நான் பெற்றுக்கொள்ளாவிட்டாலும் கொடுப்பதினால் உண்டாகும் சந்தோஷத்தால் என்னை நிரப்பும். உம்முடைய நன்மையை அனைவரும் பார்க்கும்படி உமது வெளிச்சம் என் மூலமாக பிரகாசிக்கட்டும். என் வாழ்வில் உம் கரத்தின் கிரியைகள் வெளிப்பட்டு என் குடும்பத்தையும் வரவிருக்கும் சந்ததியினையும் ஆசீர்வதிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


