அன்பானவர்களே, உங்களுக்கு என் அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்று இயேசுவை கொண்டாடுங்கள். இன்றைய வாக்குத்தத்தம், "எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்" (சங்கீதம் 87:7). இஸ்ரவேல் தேசத்தில் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தேவன்பேரிலான மகிழ்ச்சியையும் பயபக்தியையும்  வெளிப்படுத்த அது பயன்படுகிறது. நாங்கள் அங்கு செல்லும்போதெல்லாம் பிள்ளைகளும் மற்றவர்களும் பாடுவதையும் நடனமாடுவதையும் மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனை துதிப்பதையும் பார்க்கிறோம். வெவ்வேறு விதமான இசைக்கருவிகள் அவர்களிடம் உள்ளன. எங்கள் இஸ்ரேல் ஜெப கோபுரத்திற்கும் மக்கள் வருகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; நடனமாடுகிறார்கள்; கர்த்தருக்கென்று இசை வாசிக்கிறார்கள். ஐரின் என்ற  சகோதரி, ஜெப கோபுரத்திற்கு சுரமண்டலத்தைக் கொண்டு வந்து நேர்த்தியாக வாசிப்பார்கள். அவர்கள் சுரமண்டலம் வாசித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் அங்கு செல்ல நேர்ந்தது. அவர்களைப் பார்த்ததும் என் கணவர், "அதை மீண்டும் வாசியுங்கள். ஏன் நிறுத்திவிட்டீர்கள்? நீங்கள் இசைப்பதை கேட்கும்போது எனக்கு அதிக மகிழ்ச்சியாயிருக்கிறது," என்று கூறினார். ஆம், அன்பானவர்களே, எருசலேமின் மக்கள் நடனமாடுகிறார்கள், இசை மீட்டுகிறார்கள், "என் சந்தோஷத்தின் ஊற்று உம்மிடம் உள்ளது," என்று தேவனை தொழுதுகொள்கிறார்கள். தேவாலயத்தில் இசை மீட்டுகிறவர்கள் முக்கிய பணியைச் செய்கிறார்கள்.

கர்த்தரை ஒருநாளின் இருபத்து நான்கு மணி நேரமும் பணிந்துகொள்ளும்படியாக தாவீது, ஆலயத்தில் ராக தலைவர்களை அமர்த்தினான். ஆம், அன்பானவர்களே, ராகம், நம் உள்ளங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். ராஜாவாகிய சவுலுக்கு முன்பாக தாவீது சுரமண்டலத்தை வாசித்தபோது அவன் பொல்லாத ஆவியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டான். இசை, மக்களை குணப்படுத்தவும், ஆண்டவரை ஆராதிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, அன்பானவர்களே, தேவனை துதிக்க உங்களை ஒப்புக்கொடுங்கள். தேவனுடன் உறவாய் இருக்கும்போது மெய்யான சந்தோஷம் கிடைக்கும். இஸ்ரவேல் ஜனங்கள், "ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா" (எண்ணாகமம் 21:17) என்று பாடினார்கள். அவர்கள் பாடியபோது கர்த்தர் அவர்களுக்குள் எழுந்தார். சந்தோஷத்தின் ஊற்றானவர் அவர்களுக்குள் பொங்கியெழுந்தார்.

இன்று இயேசுவே நம் ஊற்றாக, சந்தோஷத்தின் ஆதாரமாக இருக்கிறார். இயேசு, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" (யோவான் 4:14) என்று கூறுகிறார். தேவன்பேரிலான நம் தாகத்தை இந்த ஜீவத்தண்ணீர் தீர்க்கும். ஆண்டவர் இயேசுவின் தண்ணீர் தொடர்ந்து பாயும்; நமக்குள் பொங்கும்; நித்திய ஜீவனாக ஊறும். ஆம், அன்பானவர்களே, ஜீவன் இயேசுவிடமிருந்து பாய்கிறது. இயேசுவே, ஜீவ ஊற்றாக இருக்கிறார். இயேசுவுக்குள் நாம் பிழைக்கிறோம்; அசைகிறோம்; இருக்கிறோம். இயேசுவுக்குள் நாம் வாழ்கிறோம். இயேசுவுக்குள் ஜீவனின் ஊற்றும் சந்தோஷமும் இருக்கிறது. அவரே சகல ஆசீர்வாதங்களின் காரணராகவும் இருக்கிறார். ஆண்டவரின் ஊற்று உங்களுக்குள் இருக்கட்டும். ஜீவத்தண்ணீர் உங்களுக்குள்ளிருந்து பாய்வதாக. இன்றும் ஆண்டவர் உங்களுக்கு கிறிஸ்துமஸின் சந்தோஷத்தை தருவார். ஆண்டவர் உங்களுக்குள் பிறக்கட்டும்; தம் சந்தோஷத்தால் உங்களை நிரப்பட்டும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு சந்தோஷத்தையும் பரிபூரண ஜீவனையும் அருளுவதற்காக இந்த உலகிற்கு வந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் ஆண்டவரே, உம்மேல் தாகமாயிருக்கும் என்மேல் உம் ஜீவத்தண்ணீரை ஊற்றும். ஜீவத்தண்ணீர் ஊற்று எனக்குள் பிரவாகித்து, நிரம்பி வழியட்டும். ஆண்டவர் இயேசுவே, நீர் என்னை அபிஷேகத்தினால் நிரப்புவதால் உம்மில் நான் களிகூருகிறேன். ஆண்டவரே, உம் தண்ணீரை என்மேல் ஊற்றுவதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, அது தொடர்ந்து பாயட்டும்; எனக்குள் பொங்கி வழியட்டும். நான் உமக்குள் களிகூர்ந்து கெம்பீரிக்கட்டும். மெய்யான கிறிஸ்துமஸ் சந்தோஷத்தை எனக்குத் தந்து ஆசீர்வதித்தருளும். என்னில் செத்துப்போன காரியங்கள் உம் வல்லமையால் ஜீவன் பெறட்டும்; இப்போதும் எனக்குள் செழிக்கட்டும். உம் சந்தோஷம் என் மூலம் மற்றவர்களுக்குள்ளும் பாயட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.