புதிய மாதம் தொடங்கும்போது, வாழ்க்கை, பொறுப்புகள், நெருக்கடிகள், கவலைகளால் நிரம்பலாம். ஆண்டவர், மெய்யான சமாதானமும் நித்திய பாதுகாப்பும் விளங்கும் பரலோகத்தை நோக்கி பார்க்குமாறு நினைவுப்படுத்துகிறார். தேவன், தம் பிள்ளைகளுக்கு, மனுஷரின் கைகளால் கட்டப்படாத நித்திய வீடு உள்ளது என்று வாக்குக்கொடுக்கிறார் (2 கொரிந்தியர் 5:1). இன்று, எவ்வளவு தேறுதலான நிச்சயத்தை இது அளிக்கிறது! தம்மை உண்மையாய் பின்பற்றுகிறவர்களுக்கும், நீதியாய் வாழ்கிறவர்களுக்கும், தம் ராஜ்யத்திற்கு ஊக்கமாய் சேவை செய்கிறவர்களுக்கும் பரலோகம் நித்திய பலன்களை வைத்திருக்கிறது என்று இயேசு போதிக்கிறார் (மத்தேயு 10:41,42).

வாழ்வின் எல்லா நிலைகளிலும் இயேசுவை நெருங்கியிருக்கும் உண்மையுள்ள சீஷர்களுக்கு பரலோக பலன் முதலாவது வழங்கப்படுகிறது. தம் போதனைகளை உறுதியாய்ப் பற்றிக்கொள்கிறவர்களே மெய்யான சீஷர்கள் என்று இயேசு கூறுகிறார் (யோவான் 8:31). மகதலேனா மரியாள், இந்தப் பக்தியை நேர்த்தியாகக் காட்டுகிறாள். இயேசு அவளை விடுவித்தபிறகு, அவள் ஒருபோதும் அவரது இரக்கத்தையும் அன்பையும் மறந்துபோகவில்லை. சிலுவை மரணத்தின் வேதனையான தருணங்களில், அநேகர் பயத்தால் விலகினாலும், அவள் அசையாத உண்மையோடு இயேசுவுக்கு அருகிலேயே நின்றாள். இயேசுவின்மேல் அவள் கொண்டிருந்த ஆழமான அன்பினால், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை முதலில் கண்ட சிலரில் அவளும் ஒருவளானாள். அவ்வண்ணமே, கவனச்சிதறலுக்கு மாற்றாக ஜெபத்தையும், சமரசத்துக்கு மாற்றாக பரிசுத்தத்தையும், வசதிக்கு மாற்றாக கீழ்ப்படிதலையும் நீங்கள் தெரிந்துகொள்வது ஆண்டவருக்குப் பிரியமாயிருக்கும்.

பரலோகம் அளிக்கும் இரண்டாம் பலன் நீதிமான்களுக்கானதாகும். அநேகரை நீதியினிடமாய் நடத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போல ஜொலிப்பார்கள் என்று வேதம் கூறுகிறது (தானியேல் 12:3). நீதி, அனுதின வாழ்வில் மன்னித்தல், தாழ்மை, பரிசுத்தம், கருணை மற்றும் அன்பின் வாயிலாக கிறிஸ்துவின் இயல்பை காட்டுகிறது. நீங்கள் உங்களை தேவனுக்கு முற்றிலுமாய் அர்ப்பணித்துவிட்டால், அவர் உங்கள் வாழ்க்கையை, மற்றவர்களைப் பெலப்படுத்தவும் வழிகாட்டவும் பயன்படுத்துவார்.

மூன்றாவதாக, ஆண்டவர், மக்களை தேற்றுகின்ற, பெலப்படுத்தும், சீர்ப்படுத்தும் வார்த்தைகளை தீர்க்கதரிசனமாக உரைத்து தமக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு பலன் அளிக்கிறார்.  தேவன், சோர்ந்துபோன ஆத்துமாக்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்ற, அவர்கள் மறக்கப்பட்டுப் போகவில்லை என்று நினைவுப்படுத்துகின்ற தமது ஊழியர்களுக்கு தம் இருதயத்தை வெளிப்படுத்துகிறார் என்று வேதம் கூறுகிறது (ஆமோஸ் 3:7).

ஈரோட்டில் நடந்த இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை கூட்டத்திற்கு நாமக்கல்லை சேர்ந்த எஸ்தர் ராஜாத்தி என்ற பெண்மணி, இருதயத்தில் தாங்கொண்ணா துக்கத்தோடு வந்தார்கள். அவர்கள் பெரும் பொருளாதார பாரத்துக்குள் சிக்கியிருந்தார்கள். கடன்கொடுத்தவர்கள் ஒவ்வொரு நாளும் பணத்தைக் கேட்டு வருவதாலும், உதவியற்ற நிலையை கேலி செய்வதாலும் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. சூழ்நிலையை மேற்கொள்ள அவர்கள் போராடினாலும், எல்லா கதவுகளும் மூடப்பட்டதாகவே தோன்றியது. மிகுந்த பயத்தினால், கூட்டத்திற்கு வருவதற்கு முன்னால் அவர்கள் தற்கொலை குறிப்பொன்றையும் எழுதினார்கள். தேவன் அற்புதம் செய்வதே கடைசி நம்பிக்கை என்று விசுவாசித்து கூட்டத்திற்கு வந்தார்கள். ஜெபக் கூட்டத்தில் நான் ஊழியம் செய்தபோது, பரிசுத்த ஆவியானவர் ஏவியபடியினால், "ராஜாத்தி, உங்கள் பணப்பிரச்னையினால் மிகுந்த துக்கத்தோடு நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இன்றிலிருந்து ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்; உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்," என்று கூறினேன். இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர்கள் கேட்டதும், தேவ சமுகம் அவர்களை அதிகமாய் தொட்டது. அன்றிலிருந்து ஆண்டவர் அற்புதவிதமாக அவர்களுக்கு வழிகளைத் திறக்க ஆரம்பித்தார்; கடன்களை ஒவ்வொன்றாக அடைக்கும்படி செய்தார். இப்போது அவர்கள் எல்லா பாரமும் முற்றிலும் விலகி, சமாதானத்துடன் வாழ்கிறார்கள். இதுவே தீர்க்கதரிசன ஊழியத்தின் நேர்த்தியாகும். அது தேவனுடைய மனதுருக்கத்தை வெளிப்படுத்துகிறது; உடைந்த வாழ்க்கைகளைச் சீர்ப்படுத்துகிறது; ஆண்டவர் தங்களை மறந்துபோகவில்லை என்று மக்களுக்கு நினைவுப்படுத்துகிறது.

ஜெபம்:
பரம தகப்பனே, உண்மையாய் உம்மை பின்பற்றுகிறவர்களுக்கு நித்திய பலன்களை நீர் ஆயத்தம்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாழ்வின் எல்லா நிலைகளிலும் உம்மை கிட்டிச்சேருவதற்கு எனக்கு உதவும். அனுதினமும் நீதியாயும் தாழ்மையுடனும் கீழ்ப்படிதலுடனும் நடப்பதற்கு எனக்குக் கற்பித்தருளும். உடைந்துபோனவர்களை தேற்றுவதற்கும், சோர்ந்துபோனோரை பெலப்படுத்தவும் என் இருதயத்தை அன்பினால் நிரப்புவீராக. உம் நன்மையை காட்டவும், மற்றவர்கள் உம்மை கிட்டிச்சேர உதவும் பாத்திரமாகவும் என்னை பயன்படுத்தும். சோதனைகள் என்னை சூழும்போதும், என் கண்கள் எப்போதும் பரலோகத்தையே நோக்கிக்கொண்டிருக்க உதவும். என் அன்பின் பிரயாசத்தை ஒருபோதும் மறவாதிருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.