"அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்" (எரேமியா 32:41) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் உங்கள்பேரில் களிகூருகிறார் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துபோகக் கூடாது. மனுஷர் உங்களை குற்றப்படுத்தலாம்; புறம்பே தள்ளலாம்; பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தலாம்; தவறாக புரிந்துகொள்ளலாம்; நீங்களே உங்களைக் குறித்து 'எனக்கு தகுதியில்லை; போதுமானவை இல்லை' என்று நினைக்கலாம். ஆனால் தேவன், "என் பிள்ளையே, நான் உன்பேரில் களிகூருகிறேன். நீ என்னை தேடி வந்திருக்கிறாய். என்னிடம் உதவி கேட்டிருக்கிறாய். உன் வாழ்க்கையை என் கரங்கள் ஒப்படைத்திருக்கிறாய். என்னை பின்பற்றுவதற்கு தீர்மானித்திருக்கிறாய். நான் உன்னில் மகிழ்கிறேன். என் பிள்ளையே, எப்போதும் என் தயை உனக்குக் கிடைக்கும்," என்று சொல்கிறார்.

ஆனால் நீங்கள், "இயேசுவுக்கு முன்பு எனக்கு போதிய தகுதியில்லை. நான் தவறானவற்றை யோசித்தவன்(ள்). தவறான உணர்வுகள் எனக்கு இருந்தன. தவறான முடிவுகளை செய்தேன். ஆண்டவரிடம் கேட்காமல் காரியங்களை செய்துவிட்டேன். நான் அக்கறை காட்டியிருக்கவேண்டியவர்களிடம் அக்கறை காட்டவில்லை," என்று கூறலாம். ஆம், தேவனுக்கு முன்பாக பூரணராக காணப்படுவதற்கு அவ்வாறான பயம் எப்போதும் நல்லதுதான். ஏனெனில் கர்த்தர், "பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்" என்று சொல்லுகிறார். நாம், நம்முடைய பலவீனங்களை ஆராய்ந்து பார்த்து, எப்போதும் பரிபூரணத்தில் நடப்பதற்கு பிரயாசப்படுவோம். பரிபூரணமாக வாழ்வதற்கு தேவன் நமக்குக் கிருபையை தருவார். நம்மிடம் குறைகள் இருக்குமென்றால் அல்லது சரியானவற்றை நாம் செய்யவில்லை என்று உணர்வோமானால் தேவன் நம்பேரில் சந்தோஷமாயிருக்கமாட்டார் என்பது அர்த்தமல்ல.
வேதாகமம், "அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" என்று கூறுகிறது. அவர் நேற்றைய தேவனாயிருக்கிறார்; இன்றைய தேவனாகவும் இருக்கிறார். தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. உங்கள் ஆத்துமாவை இயேசுவுடன் இணைக்கின்ற கணத்தில் அவர் உங்கள்பேரில் மகிழ தொடங்குவார். கர்த்தர் உங்கள்பேரில் களிகூருவதால், எல்லா பலவீனங்களிலுமிருந்தும் அவரது பலத்தினால் வெளியே வருவீர்கள். எல்லா பலவீனங்களையும் உங்களுடைய பலத்தினால் அல்லாமல் இயேசு உங்கள்பேரில் களிகூருவதால் கிடைக்கும் பலனால் மேற்கொள்வீர்கள். முற்றிலும் ஜெயங்கொள்ளும்படி எல்லா பலவீனங்களை விட்டு வெளியே வருவீர்கள். தேவன், இன்றைக்கு அந்த கிருபையை உங்களுக்குத் தருவாராக. தேவனுடைய ஆசீர்வாதங்களினாலும் நீங்கள் மகிழ்வீர்கள். இயேசு உங்கள்பேரில் மகிழும்போது ஒருபோதும் நன்மை செய்வதை நிறுத்தமாட்டீர்கள். ஆசீர்வாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் (எரேமியா 32:40; யோவான் 1:16). இன்றைக்கு இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு வருகிறது.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நான் தகுதியற்றவனா(ளா)கவும், பலவீனனா(ளா)கவும் என்னை உணர்ந்தாலும் நீர் என்பேரில் மகிழ்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய தோல்விகளுக்கு அப்பால் என்னை கண்டு, உடைந்த என்னில் ஓர் அழகைப் பார்த்து, உம்முடைய தயையை என் வாழ்வில் ஊற்றியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தகப்பனே, என் குறைவுகளை, என்னுடைய வருத்தங்களை, என்னுடைய குற்றங்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம்முடைய சந்தோஷத்தினால் என்னை பலப்படுத்தும். என்பேரில் களிகூரும்; என்னுடைய பலவீனங்களுக்கு மேலாக நான் எழும்பி, உம்முடைய கிருபையின் பூரணத்தில் நடக்கும்படி என்பேரில் கெம்பீரியும். நீர் வாக்குப்பண்ணியபடி, உம்முடைய ஆசீர்வாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பாயட்டும். இன்று நான் உம்முடைய அன்பை, பலனை பெற்றுக்கொள்வதோடு என்பேரில் நீர் மகிழ்வதைக் கண்டு மகிழ்ந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.