அன்பானவர்களே, இன்று கர்த்தர், "உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்" (எரேமியா 15:20) என்று கூறுகிறார். இஸ்ரவேலின் மதில் மிகவும் முக்கியமானது. வழக்கமாக, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றிலும் வலுவான மதிலை எழுப்புவார்கள். தாக்குகிற சேனையிடமிருந்து பாதுகாப்பதற்காக அரணை எழுப்புவார்கள். இங்கே கர்த்தர், "உன்னை அரணான வெண்கல அலங்கமாக்குவேன்" என்று கூறுகிறார். பொதுவாக, கற்களினாலும் செங்கற்களினாலும் மதிலை கட்டுவார்கள். ஆனால், வெண்கலத்தால் கட்டவேண்டுமென்றால் அதிக செலவாகும். அது முடியாததும் கூட. இங்கே கர்த்தர் ஆவிக்குரியவிதத்தில் பேசுகிறார். "நீ வெண்கல அலங்கத்தைப்போல இருப்பாய்," என்கிறார். யாராலும் வெண்கல மதிலை உடைக்க முடியாது. இங்கே, உங்களுக்கு விரோதமாக யாராலும் நிற்கக்கூடாத அளவுக்கு நீங்கள் உறுதியாக இருப்பீர்கள் என்ற அர்த்தத்தில் கர்த்தர் கூறுகிறார்.

எரேமியா புலம்பலின் தீர்க்கதரிசி என்று கருதப்பட்டான். இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்தைக் குறித்து அவன் புலம்பிக்கொண்டிருந்தான். அழிவுக்கான தீர்க்கதரிசனங்களை உரைத்தான். ஜனங்கள் அவன்மேல் மிகுந்த கோபங்கொண்டார்கள். ஆகவேதான் அவன், கர்த்தரிடம், "என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்?" என்று முறையிடுகிறான். மிகுந்த வேதனையினூடாக அவன் கடந்துசென்றான். அவன் நிலவறைக்குள் அடைக்கப்பட்டான். அவனுக்குச் சரியான உணவு கொடுக்கப்படவில்லை. தேவனுடைய ஊழியத்தைச் செய்ததினிமித்தம் அவன் பாடுபடவேண்டியதாயிற்று. ஜனங்கள் பின்வாங்கிப்போனார்கள் (எரேமியா 15:5,6). ஆகவே கர்த்தர், நான் வந்து அவர்களை அழித்துப் போடுவேன் என்றார். நான் சோர்ந்துபோய் பின்வாங்கிவிட்டேன் என்றும் கர்த்தர் கூறினார். இதனால் ஜனங்கள் எரேமியாவை சபித்தனர். அவன், "போதும் கர்த்தாவே, இனி என்னால் முன்செல்ல முடியாது," என்றான். அதனால்தான் கர்த்தர், "நான் உன்னை வெண்கல அலங்கமாக்குவேன்," என்றார்.

கர்த்தர், அவர்கள் சேனைக்கெதிராக போரிடுவதுபோல உனக்கெதிராக யுத்தம் செய்வார்கள் என்று கூறுகிறார். ஆனாலும், நான் உன்னை அரணிப்பான வெண்கல மதிலாக்குவேன் என்று சொல்லுகிறார். இது எரேமியாவுக்கு பாதுகாவல் உண்டு என்பதற்கான அடையாளமாயிருந்தது. அவன், தான் எங்கு சென்றாலும் தேவன் தன்னோடிருப்பார் என்ற திடநம்பிக்கை கொண்டான். தேவன் நம்மோடு இருந்தால் யாரால் நமக்கு எதிராய் இருக்கக்கூடும்? ஒருவேளை நீங்களும் பல்வேறு சவால்களின் வழியாக சென்று கொண்டிருக்கலாம். தாக்குதல்களின்மேல் தாக்குதல்கள் வரலாம். மக்கள் உங்களைக் கீழே தள்ளியிருக்கலாம்; உங்களைப் பிரயோஜனமற்றவன் என்று கூறியிருக்கலாம்; உங்களை அதைரியப்படுத்தியிருக்கலாம். ஆனாலும், ஸ்திரமாக இருங்கள். அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தை இன்று உங்களுக்கே வருகிறது. கர்த்தர் உங்களை வெண்கல அலங்கமாக்குவார். மக்கள் உங்களுக்கு எதிராக போரிடலாம். ஆனால், ஒன்றும் உங்களைத் தொட முடியாது. தேவன் உங்களைப் பாதுகாப்பார்; உங்களை மீட்டுக்கொள்வார். தைரியமாயிருங்கள்; முன்னேறுங்கள்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, உம் வாக்குத்தத்தத்தை விசுவாசித்து இன்று உம் முன்னே வருகிறேன். எனக்கு எதிராய் சேனைகள் போரிடுவது போன்ற யுத்தங்கள் எழும்பும்போது என்னை அரணிப்பான கோட்டையாக்குவீராக. மக்கள் எனக்கு விரோதமாய் பேசி, அதைரியப்படுத்தும்போது எனக்கு தைரியத்தைத் தருவீராக. நான் பெலவீனமாய், களைப்பாய், விட்டுவிடலாம் என்று உணரும்போது என்னை பெலப்படுத்தும். பாடுபட்டுக்கொண்டிருந்த எரேமியாவை பெலப்படுத்தியதுபோன்று இன்று என்னைப் பெலப்படுத்தும். நீர் எப்போதும் என்னோடிருக்கிறீர் என்று நம்பி திடமாக நிற்பதற்கு எனக்கு உதவும். எல்லா தாக்குதலிலுமிருந்து என்னை பாதுகாத்து, எல்லா உபத்திரவங்களிலுமிருந்தும் மீட்டுக்கொள்ளும். உம் சமுகமே எனக்கு பாதுகாவலாக இருந்து, நான் செல்லுமிடங்களிலெல்லாம் திடநம்பிக்கையை தருவதாக. ஆண்டவரே, நீர் என்னோடு இருக்குமட்டும் எந்த யுத்தத்திலும் நான் அசைக்கப்படாதிருப்பேன் என்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.