அன்பானவர்களே, வேதத்தில், "மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்" என்று எழுதப்பட்டுள்ளபடி, கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் நடுவில் வாசம்பண்ண விரும்புகிறார் (ஏசாயா 62:5). வேதம், "நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்" என்றும், "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்" என்றும் கூறுகிறது (ஏசாயா 65:19; 62:4). தேவன், தம் மணவாட்டியாகிய எருசலேமை 'எப்சிபா' என்று அழைக்கிறார். அதற்கு, 'உன்மேல் பிரியமாயிருக்கிறேன்' என்று அர்த்தம்.
கர்த்தர், "அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்" (ஏசாயா 62:12) என்று வாக்குப்பண்ணுகிறார். தேவன், கைவிடப்பட்டது, பாழான நகரம் என்று அழைக்கப்பட்ட இஸ்ரவேலுக்கு தாம் புதிய ஆரம்பத்தைக் கொடுப்பதாக காண்பிக்க வேறு அநேக பெயர்களை திட்டம்பண்ணுகிறார். இன்றும் இஸ்ரேல் தேசத்தை, அழிக்க நினைக்கும் எதிரிகள் சூழ்ந்திருந்தாலும், தேவன் அதன்மேல் பிரியமாயிருப்பதினால் அது பிழைத்திருக்கிறது. உண்மையாகவே, அதற்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது. தேவன் தம் ஜனங்கள்மேல் பிரியமாயிருக்கும்போது, அவர்களைப் பாதுகாக்கிறார்; சாபத்தையும் ஆசீர்வாதமாக மாற்றுகிறார்.
உங்கள் முதல் எதிரியான பிசாசு, சாபங்களை உங்கள்மேல் கொண்டு வர முயற்சிக்கலாம். ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் எல்லா சாபமும் முறிக்கப்பட்டது; அழிக்கப்பட்டது. இயேசு உங்கள்மேல் களிகூருகிறார்; நம்மை தமது மணவாட்டியாக பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல விரைவில் வருவார். அங்கு அவரோடு நாம் நித்தியமாய் களிகூருவோம். மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாய் இருப்பதுபோல தேவன் உங்கள்பேரில் களிகூருவார். தேவ ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது சொல்லிமுடியாத சந்தோஷத்தால் உங்களை நிரப்புவார்; அவ்வளவாய் ஆண்டவர் உங்கள்பேரில் பிரியமாயிருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, மணவாளன் தன் மணவாட்டியின்மேல் மகிழ்கிறதுபோல நீர் என்மேல் பிரியமாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மீட்கப்பட்டவள்(ன்), பரிசுத்தமானவள்(ன்) என்றும் கைவிடப்படாதவள்(ன்) என்றும் என்னை அழைக்கிறதற்காக உமக்கு நன்றி. என்மேல் பிரியமாயிருப்பதற்காக, சத்துருவின் எல்லா அஸ்திரங்களிலிருந்தும் சாபங்களிலிருந்தும் என்னை பாதுகாப்பதற்காக உம்மை துதிக்கிறேன்.உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை சொல்லிமுடியாத சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புவாராக. சீக்கிரமான உம் வருகைக்காக என் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, பரலோகத்தில் எப்போதும் உம்முடன் களிகூர்ந்திருக்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.