அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" (ஏசாயா 46:4) என்று கூறுகிறது. ஆம், ஆண்டவர் உங்களை முதிர்வயது வரை தாங்குவதாக வாக்குக்கொடுக்கிறார். பலவேளைகளில் நாம் எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்படுகிறோம். இன்றைய உலகில் மக்களிடையே மிகுந்த தனிமையுணர்வு காணப்படுகிறது. "ஆண்டவரே, 40 அல்லது 50 ஆண்டுகளுக்குப் பிறகு நான் என்ன செய்யப்போகிறேன்? நான் தனியே இருப்பேன். என் கணவருக்கு / மனைவிக்கு ஏதாவது நடந்துவிட்டால் நான் என்ன செய்வேன்? யார் என்னை கவனித்துக் கொள்வார்கள்? என் தேவைகளை யார் கவனிப்பார்கள்?" என்றெல்லாம் யோசிக்கலாம். இப்படி நினைப்பது எல்லோருக்கும் இயற்கையானதே ஆகும்.
ஆனால் இன்று, ஆண்டவர் உங்கள் முதிர்வயது வரைக்கும் அவரே உங்களைத் தாங்குவதாக கூறுகிறார். இந்த வசனத்தை வாசித்தபோது, எங்கள் பாட்டி ஸ்டெல்லா தினகரனே நினைவுக்கு வந்தார்கள். ஒருநாள், மிகுந்த கவலையுடன் அவர்களிடம் சென்று, "பாட்டி, நான் வந்து உங்களுக்கு உதவி செய்யவா? உங்களுக்கு உதவி தேவைப்படுமே, நான் வந்து உதவட்டுமா?" என்று கேட்டேன். ஒருமுறை கூட்டத்திற்காக எல்லோரும் வெளியே செல்ல வேண்டியதிருந்தபோது, அவர்கள் மாத்திரம் தனியே இருக்கவேண்டியதிருந்தது. அப்போது, "எப்படி சமாளிப்பீர்கள்? நீங்கள் தனியே இருக்கவேண்டுமே?" என்று கேட்டபோது, அவர்கள், "நீ ஏன் கவலைப்படுகிறாய்? இயேசு என்னோடு இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். எனக்கு ஒருபோதும் நேரம் போகாமல் இருக்காது. நான் அவரோடு பேசிக்கொண்டிருப்பேன்; அவர் என்னோடு பேசிக்கொண்டிருப்பார்," என்று கூறினார்கள்.
ஆம், அநேகர், "நான் என்ன செய்யப்போகிறேன்?" என்று யோசிப்பீர்கள். ஆனால், இன்று ஆண்டவர், "நான் உன்னை தாங்குவேன்; பெலப்படுத்துவேன்," என்று கூறுகிறார். பாட்டி இன்று வரைக்கும் காலையில் கதவைத் திறக்கும்போதுகூட, யாரும் தனக்கு உதவி செய்ய இடங்கொடுப்பதில்லை. அவர்கள் எப்போதும், "தேவன் எனக்கு பெலன் கொடுத்துள்ளார்; நானே எனக்கு வேண்டியதைக் கவனித்துக்கொள்வேன்," என்று கூறுவார்கள். ஆம், இன்று ஆண்டவர் எல்லோரையும் அதே பெலனால் நிரப்புவார். வேதம், "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்" (ஏசாயா 40:29) என்று கூறுகிறது. ஆம், ஆண்டவர் உங்களுக்கு இந்தப் பெலனை கொடுப்பார்; உங்களைத் தாங்குவார். அதை ஆண்டவரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்வோம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை வாழ்நாள் முழுவதும், முதிர்வயது வரைக்கும் தாங்குவதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தங்கள் எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்படும், தனியாய் வாழுகின்ற அல்லது தங்களுக்கு அன்பானோரை இழந்து கவலையில் வாழும் எல்லோரையும் பெலப்படுத்தும். பிள்ளைகளால் கவனிக்கப்படாதவர்களுடன் நீரே இருந்தருளும்; அவர்களை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பும். அவர்கள் ஒருபோதும் தனிமையை உணராமலும், கவலைப்படாமலும் இருக்கும்படி செய்தருளும். அவர்களுக்கு பெலனை, சமாதானத்தை, தேவையான யாவற்றையும் அருளும். பணக்கஷ்டத்தை அகற்றி, அனுதினமும் அவர்களைத் தாங்கிடும். இயேசு எப்போதும் தங்களோடு இருக்கிறார் என்பதையும், தங்களை கவனித்துக்கொள்வார் என்பதையும் மறவாமல் இருக்க உதவிடும். அவர்கள் வாழ்க்கையை உம் சமுகத்தால், ஆறுதலால், பெலனால், சந்தோஷத்தால் நிரப்பவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


