அன்பானவர்களே, இன்றைக்கு, "இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?" (எரேமியா 32:27) என்ற வசனத்தை தியானிப்போம். கர்த்தர், உங்களிடம், "என்னாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?" என்று கேட்கிறார். வேதம், 17ம் வசனத்தில், கர்த்தரே வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் என்று கூறுகிறது. அவர் எப்படி அவற்றை உண்டாக்கினார்? தமது மகா வல்லமையாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் உருவாக்கினார். அன்பானவர்களே, அவரால் கூடாததென்று எதுவுமில்லை. ஆகவேதான், யோபு, "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2) என்று கூறுகிறான். "இது என் வாழ்வில் நடக்குமா? நடக்கவே நடக்காது," என்று நாம் கூறலாம். இந்த மனுஷன் மிகவும் பிடிவாதமானவன் அல்லது இந்த பொல்லாத ஆவி, என்மேல் மிகவும் வல்லமையாக இறங்குகிறது என்று நீங்கள் சொல்லலாம். "இந்தக் காரியம் என் வாழ்வில் ஒருபோதும் நடக்கவே நடக்காது," என்று கூட நீங்கள் கூறிக்கொண்டிருக்கலாம். ஆனால், கர்த்தர், "என்னால் செய்யக்கூடாத காரியம் ஒன்று இருக்கிறதா?" என்று கேட்கிறார்.
"மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்," (மாற்கு 10:27) என்று இயேசுதாமே சொல்லியிருக்கிறார். நாம் மனுஷர்கள். ஆகவே, நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அதனால்தான் இயேசு, மனுஷரால் இது கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால், நான் தேவன். இந்தப் பூமியிலும் பரலோகத்திலும் பூமிக்குக் கீழாகவும் சகல அதிகாரமும் எனக்குள்ளது. எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்கிறார். ஆம், அன்பானவர்களே, என் தாயாருக்கு 40 வயதாயிருந்தபோது, அவர்கள் கர்ப்பந்தரித்தார்கள். அவர்களாலேயே நம்ப முடியவில்லை. தனக்குள்ளே நகைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள், தனக்குள், "இது குழந்தையாக இருக்கமுடியாது," என்று கூறிக்கொண்டார்கள். மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்துக்கொண்டபோது, மருத்துவர்களாலும் நம்ப முடியவில்லை. கர்ப்பப்பையில் கட்டி உருவாகியிருக்கக்கூடும் என்று அவர்கள் கூறினார்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்று மாதங்கள் கடந்தன. அவர்கள் வயிறு பெரிதாகியது. அவர்கள் மறுபடியும் சோதித்துக்கொண்டார்கள். "நீங்கள் கர்ப்பமாகியிருக்கிறீர்கள்," என்று மருத்துவர் கூறினார். என் தாயாரால் அதை நம்ப இயலவில்லை. ஆனாலும், அவர்கள் தேவனை துதித்து ஸ்தோத்திரித்தார்கள். எனக்கு அப்போது 12 வயது. நான், "எனக்கு குட்டி தம்பியோ, தங்கையோ பிறக்கப்போகிறது," என்று கூறினேன். அன்று இரவு, குடும்பமாக நாங்கள் தேவனை ஸ்தோத்திரித்தோம். இன்று என் சின்ன தம்பி என்னுடன் ஊழியம் செய்கிறான். எவ்வளவு சந்தோஷம்; எவ்வளவு ஆசீர்வாதம்.
சாராள், தொண்ணூறு வயதில் கருத்தரித்தாள். "நீ கருத்தரிப்பாய்," என்று கர்த்தருடைய வார்த்தை அவளுக்கு வந்தபோது, அவளால் அதை விசுவாசிக்க முடியவில்லை. அவள் நகைத்து, "நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ," (ஆதியாகமம் 18:13) என்று கூறினாள். ஆனால், அடுத்த வசனத்திலேயே, கர்த்தருடைய தூதன், "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது ஒரு குமாரன் இருப்பான்," என்று கூறினான். அப்படியே நடந்தது. ஓராண்டு பின்னர் சாராள், ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். ஆம், அன்பானவர்களே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நம் கர்த்தர், இல்லாதவற்றை இருக்கிறவைபோல அழைக்கிறார். இது எனக்கு நடக்காது என்று சொல்லாதீர்கள். நீங்கள் எந்த அற்புதங்களை எதிர்பார்த்தாலும், அவை நடக்கும். இயேசு, மரித்த லாசருவை எழுப்பும் முன்னர், மரியாளும் மார்த்தாளும் தங்கள் சகோதரன் உயிரோடு வருவான் என்று விசுவாசிக்கவில்லை. இயேசு, மார்த்தாளிடம், "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்," என்று கூறினார். அன்பானவர்களே, தேவன்மேல் விசுவாசம் வைப்போம். "ஆண்டவரே, என் வாழ்வில் எல்லாவற்றையும் செய்து முடிப்பீர் என்று விசுவாசிக்கிறேன். நான் எவற்றையெல்லாம் கேட்கிறேனோ, அவையெல்லாம் நடக்கும்," என்று கூறுங்கள். தொடர்ந்து விசுவாசியுங்கள்; பரலோகத்தின் கதவைத் தட்டிக்கொண்டே இருங்கள். கதவு திறக்கும். இன்றைக்கே அது நடக்கும்.
ஜெபம்:
பரம தகப்பனே, நீர் எல்லா மனுஷருக்கும் தேவனாயிருக்கிறீர். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை. எப்போதும் நான், "இது கூடாது," என்று கூறும்போதெல்லாம் என் சந்தேகங்களை மன்னித்தருளும். உம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று இன்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, எனக்குள் இருக்கும் எல்லா பயத்தையும் அகற்றும்; என் விசுவாசத்தை பெலப்படுத்தும். மூடப்பட்டிருக்கும் எல்லா வாசல்களும் உம் சித்தத்தின்படி திறப்பதாக. நான் காத்திருக்கும் அற்புதங்கள் எல்லாவற்றையும் நடப்பித்தருளும்; எனக்காக யாவற்றையும் செய்து முடித்தருளும். கூடாதவை என்று காணப்படுகிறவை யாவும் உம்மால் கூடும் என்று விசுவாசித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


