எனக்கு அருமையானவர்களே, இந்த மாதத்தில், "நான் இடம்கொள்ளாமற்போகுமட்டும் உன்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவேன்" என்று ஆண்டவர் வாக்குக் கொடுக்கிறார் (மல்கியா 3:10). அவர் வானத்தின் பலகணிகளையும், மதகுகளையும் திறந்து உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள்மீது பரலோகத்தின் ஆசீர்வாத மழை பெய்யும். உங்களால் சுமக்க முடியாதபடிக்கு, பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உங்களை ஆசீர்வாதத்தினால் வருஷிக்கப்பண்ணுவார். "உம்முடைய ஆசீர்வாதத்தினால் அடியேனுடைய வீட்டை ஆசீர்வதியும்" என்று தாவீது ஜெபிக்கிறான் (2 சாமுவேல் 7:29). அப்படித்தான், ஆண்டவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து அத்தனை ஆசீர்வாதங்களையும் உங்கள்மீது பொழிந்தருளுவார்.
ஆண்டவர் தமது கிருபையைப் பெருகச் செய்கிறார். 2 கொரிந்தியர் 9:8-ல், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுள்ளவர்களாய் இருக்கும்படி ஆண்டவர் உங்களிடத்தில் சகலவித கிருபைகளையும் பெருகச் செய்கிறார் என்று வாசிக்கிறோம். என் பிள்ளைகள் எல்லாவற்றிலும் சம்பூரணமாய் இருக்கவேண்டும். குறைவே இருக்கக் கூடாது என்று அவர் விரும்புகிறார். அதுதான் ஆண்டவருடைய இருதயம். அதை இந்த நாளிலே அவர் உங்களுக்கு செய்வார்.
அடுத்தபடியாக அவர் தமது ஜீவனை ஊற்றுகிறார். பொல்லாத பிசாசு திருடனாக வருகிறான். கொல்ல வருகிறான். அழிக்க வருகிறான். ஆனால் இயேசுவோ, நாம் பரிபூரண ஜீவனை பெறும்படி வருவார் (யோவான் 10:10). அவர் தமது ஜீவனை நம்மீது ஊற்றுவார். அதுமட்டுமல்ல, அவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள்மீது தமது அன்பை ஊற்றுவார். சாபம் அல்ல, கடிந்துகொள்ளுதல் அல்ல. குற்றம் கண்டுபிடிப்பது அல்ல. என் பிள்ளைகள்மீது அன்பை ஊற்றுவேன் என்று சொல்லுகிறார் (யாத்திராகம்ம் 34:6). அந்த பாக்கியத்தை கர்த்தர் இப்பொழுது உங்களுக்கு கொடுக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவர் பரலோகத்தின் மதகுகளைத் திறந்து தமது ஐசுவரியத்தை ஊற்றுகிறார். பிலிப்பியர் 4:19-ல், "என் தேவன் தமது ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" என்று வாசிக்கிறோம். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள் (சங்கீதம் 36:8) என்று வேதம் கூறுகிறது. அவர் தமது பேரின்ப நதியால் அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பார்.
அடுத்தபடியாக, வானத்தின் மதகுகளை அவர் திறக்கும்பொழுது, நியாயத்தீர்ப்பு வருகிறது. தேவன் நீதியுள்ளவர். ஆதியாகமம் 7:11-ஐ வாசித்துப்பாருங்கள். நோவாவின் காலத்திலே ஜனங்கள் பிசாசின் ஆவியினால் நடத்தப்பட்டு, பாவத்தினால் நிரம்பி வாழ்ந்தார்கள். அப்பொழுது ஆண்டவர், தமக்கு கீழ்ப்படியாதவர்களை அழிக்கும்படியாக வானத்தின் மதகுகளைத் திறந்தார். மழை வெள்ளம் வந்தது. பூமி முழுவதும் தண்ணீர் எழும்பியது. கடைசியில், நோவாவின் குடும்பத்தைத் தவிர அத்தனைபேரும் மாண்டுபோனார்கள். தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் வானத்தின் மதகுகளைத் திறப்பார். பயங்கரமான நியாயத்தீர்ப்பு வரும். ஆகவே, மனம் திரும்புவோம். நம்மை சுற்றியிருக்கும் ஜனங்கள் மனந்திரும்பும்படி ஜெபிப்போம்.
மேலும், ஆண்டவர் வானத்தின் மதகுகளைத் திறக்கும்பொழுது ஆசீர்வாதமும் வருகிறது. "உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்" என்றும், "கர்த்தர் உன் களஞ்சியங்களிலும் நீ கையிடும் எல்லாவற்றிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்" என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (உபாகமம் 28:1,8). இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாய் இருக்கும்படி அவருடைய சத்தத்துக்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜனங்களிலும் உன்னை மேன்மையாக உயர்த்தி வைப்பார். ஆசீர்வாதமான மழை பெய்யும். உங்களை உயர்ந்த ஸ்தானங்களுக்கு ஏறி வரும்படி செய்வார்.
எபிரெயர் 11:8-ஐ வாசித்துப்பாருங்கள், ஆபிரகாம் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்தான். வேறு ஒன்றுமே செய்யவில்லை. நான் சொல்லுகிற இடத்திலெல்லாம் நடந்து திரிந்து அதை சுதந்தரிக்கொள் என்று ஆண்டவர் சொன்னார். விசுவாசத்தினாலே ஆபிரகாம் தாம் சுதந்தரமாக பெறப்போகிற இடத்திற்கு போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தாம் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டான். எங்கே போகிறேன் என்று அவனுக்கு தெரியவில்லை. அநேக முறை ஆண்டவர் அப்படியே நம்மோடும் பேசுவார். அறியாத இடங்களுக்கு கொண்டு போவார். வானத்தின் வாசலை ஆண்டவர் திறக்கிறார். திரள் கூட்டமான ஜனங்கள் பாக்கியம் பெறும்படி செய்கிறார். அப்படியே ஆபிரகாமுக்கும் செய்தார். அவன் போன இடத்திலெல்லாம் ஆண்டவரும் கூடவே சென்று, அவன் நடந்த பூமியெல்லாம் சுதந்தரிக்கும்படி செய்தார். அதேபோல ஆண்டவர் உங்களுக்கும் கீழ்ப்படிதலின் ஆவியைக் கொடுத்து, உங்கள் மூலமாக அவருடைய சித்தத்தையெல்லாம் நிறைவேற்றுவார். நீங்கள் பெருக்கத்தைக் காண்பீர்கள் (ஏசாயா 51:2).
அவர் மிகுந்த ஐசுவரியமுள்ளவராக இருந்தும், அவருடைய தரித்திரத்தினாலே நாம் ஐசுவரியவான்களாகும்படி தம்மை தாமே தரித்திரராக ஒப்புக்கொடுத்தார் (2 கொரிந்தியர் 8:9). மல்கியா 3:10-ல், வானத்தின் பலகணிகளைத் திறந்து இடம்கொள்ளாமற்போகுமட்டும் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று அவர் சொல்லுகிறார். எப்பொழுது? தம்முடைய பிள்ளைகளை, தமது ஆலயமாக மாற்றும்படி செய்யப்படும் ஊழியத்திற்கு நீங்கள் காணிக்கை கொடுக்கும்பொழுது. ஆகவே, அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற தாராளமாய் கொடுங்கள் (ஏசாயா 58:7,8). இதில் நாம் ஜாக்கிரதையாய் இல்லாவிட்டால், "நீ என்னை வஞ்சிக்கிறாய்" என்று கர்த்தர் சொல்லுவார் (மல்கியா 3:8). அநேகர் அற்புதம் கிடைக்கும்வரை அநேக பொருத்தனைகளை செய்வார்கள். ஆனால் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்பு ஓடி ஒழிந்துகொள்வார்கள். ஆகவே மனந்திருந்துவோம். ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நம்மை ஒபுக்கொடுப்போம். அப்பொழுது ஆண்டவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்களை இடம்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பரலோகத்தின் கதவுகளை திறப்பேன் என்று நீர் எனக்கு வாக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி. நிரம்பி வழியும் உமது கிருபையினாலும், அன்பினாலும் என் வாழ்க்கையை நிரப்புவீராக. உம்முடைய வார்த்தைக்கு நான் கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும். மற்றவர்களுக்கு தாராளமாக கொடுக்க எனக்கு கற்றுத்தாரும். உம்முடைய சத்தத்தைக் கேட்க நான் எப்பொழுதும் என் இருதயத்தைத் திறந்து, அதன்படி நடக்க உதவி செய்யும். என் கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்து, ஒவ்வொரு படியிலும் என்னை வழிநடத்தும். என்னுடைய வாழ்வு, பொருளாதாரம், என் குடும்பம் அனைத்தையும் மேன்மைப்படுத்தும். திறந்த வாசலை ஒருவரும் பூட்டாதபடிக்கு பாதுகாத்தருளும். எப்பொழுதும் உம்முடைய கிருபையுடனும், ஆசீர்வாதத்துடனும் வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.