அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபேசியர் 1:3) என்ற வசனத்தைத் தியானிப்போம். தேவன் நமக்கு சரீர ஆசீர்வாதங்களை மட்டும் கொடுக்கவில்லை; மாறாக, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால், அதுவும் உன்னதங்களின் ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கவேண்டுமென்று விரும்புகிறார். வேதம், நன்மையும் பூரணமுமான ஈவுகள் எல்லாம் பரத்திலிருந்து வரும் என்று கூறுகிறது. தேவன் தரும்போது அவை பரிபூரணமானவையாக இருக்கும். ஏனென்றால், அவர் பரிபூரணத்தின் தேவன். அவர் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களால் மாத்திரம் நம்மை ஆசீர்வதிக்கவில்லை; மாறாக, நாம் பரிபூரணராக இருக்கவேண்டும் என்று அவர் விரும்புவதால், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தந்தருள்கிறார். தேவன், பரிபூரணத்தின் தேவனாயிருக்கிறார். அவரது பரிபூரணத்திலிருந்து, கிருபையின்மேல் கிருபையை பெற்றுக்கொள்கிறோம். வேதம், "நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்" (2 கொரிந்தியர் 9:8) என்று கூறுகிறது. எல்லா நற்கிரியையிலும், எல்லாவற்றிலும், நமக்குத் தேவையானவற்றில், ஆண்டவர் நம்மை தம் நன்மையினால் நிரப்புகிறார்.

நாம் அவரைப்போல மகிமையிலிருந்து மகிமையடையவேண்டும் என்று அவர் விரும்புகிறார். எப்போது பெருகிக்கொண்டே இருக்கும் கிருபையுடன் அவரது சாயலாக நம்மை மறுரூபமாக்குவார். இதுவும் ஆண்டவரிடமிருந்தே வருகிறது. கிறிஸ்துவுக்குள்ளான அடையாளம் கொடுக்கப்பட்டதும், நீங்கள் 'இவாஞ்சலின்' ஆக இருக்கமாட்டீர்கள்; மாறாக, 'கிறிஸ்துவுக்குள் இவாஞ்சலின்' ஆக இருப்பீர்கள். அன்பானவர்களே, நீங்கள் தனியே இல்லை. நீங்கள் கிறிஸ்துவுடன், கிறிஸ்துவின் பரிபூரணத்துடன் இருக்கிறீர்கள். ஆகவேதான் ஆண்டவர் இயேசு, "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5) என்று கூறியுள்ளார். ஆம், அவர் தம் நாமத்தை நம்மேல் எழுதியிருக்கிறார். எழுத்தின்படி நம்மேல் அவர் ஒரு முத்திரையை போட்டிருக்கிறார். அதையே நாம் வேதத்தில் வாசிக்கிறோம் (2 கொரிந்தியர் 1:22). அவர் தமக்குச் சொந்தமானவன் (ள்) என்ற முத்திரையை நம்மேல் போட்டிருக்கிறார். தேவனுடைய நாமம் உங்கள்மேல் இருந்தால், உங்களால் எல்லாவற்றையும் செய்யக்கூடும். நீங்கள் ஜெயமுள்ளவராய் இருப்பீர்கள்.

எங்கள் காருண்யா பழைய மாணவர்கள்தாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் அவர்களைப் பார்த்து, "ஏதோ ஒன்று உங்களுக்குள் இருக்கிறது. நான் விசேஷித்த கிருபை உங்கள்மேல் வைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறேன்," என்று கூறுவதாக சொல்வார்கள். குறிப்பாக, அவர்கள் வேலை செய்யுமிடங்களில் அவர்கள் முதலாளிகள், "நீங்கள் என்ன செய்தாலும், ஆண்டவர் அதை ஆசீர்வதிக்கிறார். ஏதோ விசேஷித்த ஒன்று உங்களிடம் இருக்கிறது," என்று கூறுவார்களாம். என்ன விசேஷம்? அது கிறிஸ்துவின் அடையாளம். அது கிறிஸ்துவுக்குள் இருக்கும் அடையாளம். எங்கள் அப்பா, சகோ. தினகரன், காருண்யா மாணவர்களுக்காக இப்படி ஜெபிப்பது வழக்கம். அடுத்த ஆண்டு வெளியே செல்ல இருக்கும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்காக, "ஆண்டவரே, இந்தப் பிள்ளைகளை விசேஷித்த கிருபையால் நான் ஆசீர்வதிக்கிறேன். உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களால் மட்டும் அவர்கள் ஆசீர்வதிக்கப்படக்கூடாது. அவர்கள் ஆவிக்குரியவிதமாகவும் ஆசீர்வதிக்கப்படவேண்டும். தேவனே, எல்லாவித கிருபைகளாலும் அவர்களை நிரப்பும்," என்று ஜெபிப்பார். எங்கள் தகப்பனின் ஜெபத்தினால்தான் அந்தப் பிள்ளைகள் இன்றைக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். என் பிள்ளைகள் சரீர நன்மைகளால் மாத்திரமல்ல; உன்னத நன்மைகள் எல்லாவற்றாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நம் பரம தகப்பனின் உள்ளம் விரும்புகிறது. தன் மகன் யோசேப்பை யாக்கோபு அப்படியே ஜெபித்து ஆசீர்வதித்தான். பூமிக்குரிய ஆசீர்வாதங்களும் உன்னதத்தின் ஆசீர்வாதங்களும் இன்று உங்கள்மேல் வருவதாக.

ஜெபம்:
பரம தகப்பனே, கிறிஸ்துவுக்குள் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினாலும் என்னை ஆசீர்வதித்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பரிபூரணத்தினால் என்னை நிறைத்து,  கிருபையின்மேல் கிருபையை என்மேல் வைத்தருளும். மகிமையிலிருந்து மகிமைக்கு என்னை மறுரூபப்படுத்தி உம்முடைய சாயலாக்கியருளும். உம் நாமத்தை என்மேல் வைத்து, நான் உமக்குச் சொந்தமானவன்(ள்) என்ற முத்திரையை போட்டருளும். உம் விசேஷித்த கிருபை என் வாழ்வில் காணப்படுவதாக. உன்னதத்திற்குரியதும் பூமிக்குரியதுமான எல்லா ஆசீர்வாதங்களால் என்னை ஆசீர்வதித்தருளும். எல்லா நற்கிரியையிலும் நான் பூரணப்பட்டிருக்க உதவும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.