அன்பானவர்களே, பலவேளைகளில் நம் வேதனையில், "ஆண்டவரே, என்னை மறந்துவிட்டீரோ? ஏன் இந்தப் பாடுகள், இந்த நிராகரிப்புகள், இந்த அவதூறு?" என்று கூப்பிடுகிறோம். ஆனால் வேதம், "கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்" (சங்கீதம் 115:12) என்று உறுதிபடக் கூறுகிறது.எவ்வளவு அழகான வாக்குத்தத்தம்! ஆண்டவர் ஒருபோதும் தம் பிள்ளைகளை மறக்கமாட்டார். அவர் நம் பெயர்களை தம் உள்ளங்கைகளில் எழுதி வைத்திருக்கிறார். பூமியில் கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும், தேவன் அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் அறிந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பெயர்சொல்லி அழைக்கிறார்; அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் எவ்வளவு அருமையானவர்களாய் இருப்போம்.நீங்கள் அவருக்கு முன்பாக உத்தமமாய் நடந்தால், அவர் உங்கள் தியானத்தை, உங்கள் கண்ணீரை, உங்கள் ஜெபங்களை, அன்புடன் செய்த சிறு செயல்களையும் நினைப்பார். அவரது நாமத்திற்காக நீங்கள் செய்த வேலையை மறந்துபோக அவர் அநீதியுள்ளவரல்லர். இன்றைக்கு தேவன், "என் பிள்ளையே, நான் உன்னை நினைக்கிறேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன்," என்று கூறுகிறார்.
வேதம், தேவன் தம் மக்களை நினைக்கிறதை குறித்து அருமையான உதாரணங்களை தருகிறது. எசேக்கியா ராஜா இறந்துபோவான் என்று சொல்லப்பட்டபோது, "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும்," (ஏசாயா 38:3) என்று அழுதான். கர்த்தர் அவன் விண்ணப்பத்தைக் கேட்டார்; அவன் உண்மையை நினைத்தார்; அவனுக்கு பதினைந்து ஆண்டுகளைக் கூட்டினார். அதேபோன்று சிம்சோன் தன் பெலத்தையும் பார்வையையும் இழந்தபோது, "இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும்," (நியாயாதிபதிகள் 16:28) என்று ஜெபித்தான். தேவன் அவனுக்குச் செவிகொடுத்து, விரோதிகளை மேற்கொள்ளும்படி அவனை பெலப்படுத்தினார். நெகேமியா, எருசலேமின் மதில்களை திரும்ப கட்டியபோது எதிர்ப்பு கிளம்பியது. அவன், "என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்" (நெகேமியா 5:19) என்று அழுதான். கர்த்தர், ராஜாவுக்கு முன்பு அவனுக்கு தயை பாராட்டி, அவன் விரோதிகள்மேல் வெற்றியை கொடுத்தார். இந்த எல்லா அடியார்களும் எளிமையான, "கர்த்தாவே, என்னை நினைத்தருளும்," என்ற ஜெபத்தையே செய்தார்கள். தேவன், இரக்கத்துடனும் வல்லமையுடனும் பதில் கொடுத்து அவர்களை மீட்டார்.
அன்பானவர்களே, பிள்ளைபேறில்லாமல் இருந்த அன்னாளை நினைவுகூர்ந்த அதே தேவன், இன்றைக்கு உங்களையும் நினைப்பார். அவள், "உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடும்," (1 சாமுவேல் 1:11) என்று அழுதாள். தேவன் அவளுடைய அழுகையை கேட்டார்; சாமுவேலை கொடுத்து ஆசீர்வதித்து, அவள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றினார். அன்னாளை நினைத்தருளிய கர்த்தர், வியாதியோ, தனிமையோ, குடும்ப பிரச்னைகளோ எவை உங்கள் தேவையாயிருந்தாலும் உங்களையும் நினைப்பார். அவர், எசேக்கியாவை குணப்படுத்தியதுபோல, சிம்சோனை பெலப்படுத்தியதுபோல, நெகேமியாவுக்கு தயை செய்ததுபோல, அன்னாளை ஆசீர்வதித்ததுபோல உங்களையும் ஆசீர்வதிப்பார். எல்லா ஜெபத்தையும், எல்லா கண்ணீரையும், எல்லா விசுவாச கிரியையையும் அவர் நினைக்கிறார். கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார், உங்கள் கடந்த காலத்தை மன்னிப்பார், உங்களை மீண்டும் கனி கொடுக்கச் செய்வார். இந்த சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். தேவன் உங்களை மறந்துபோகவில்லை. உங்களை உயர்த்துவதற்கு, இழந்தவற்றை திரும்ப தருவதற்கு, தமக்கு மகிமையாக உங்கள் பெயரை சாட்சியாக்குவதற்கு அவர் பின்னணியில் கிரியை செய்துகொண்டிருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னுடைய தாழ்விலும் என்னை நினைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் வேதனையில் கதறும்போது என்னை நினைத்தருளும். என் கண்ணீரை கண்டு, என் ஜெபங்களுக்குப் பதிலளியும். வியாதியாயிருக்கும்போது என்னை குணப்படுத்தி, வேதனையின் படுக்கையில் இருந்து எழுப்பியருளும். நான் பெலவீனமாயிருக்கும்போது என்னை பெலப்படுத்தும்; நான் விழுந்துபோகும்போது என்னை எழுப்பியருளும். நான் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும்போது உம்முடைய தயையை எனக்குக் காட்டி, வெற்றியை அருளிச்செய்யும். ஆண்டவரே, என்னை நினைத்தருளி, என் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றி என்னை ஆசீர்வதியும். சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் என்னை நிரப்பிடும்; நீர் எப்போதும் எனக்குச் சமீபமாய் இருக்கிறீர் என்பதையும் என்னை நேசிக்கிறீர் என்பதையும் நான் அறிந்திருக்கப்பண்ணும்.ஆண்டவரே, என்னை நினைத்தருளி, பூரணமாக என்னை ஆசீர்வதிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


