அன்பானவர்களே, பலவேளைகளில் நாம் மிகுந்த எதிர்பார்ப்போடு, வேலையை குறித்து, நம் குடும்பத்தைக் குறித்து, படிப்பு மற்றும் எதிர்காலத்தைக் குறித்து பலவற்றை திட்டமிடுகிறோம். ஆனால், வேதம், "மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்" (நீதிமொழிகள் 16:9) என்று நினைவுப்படுத்துகிறது. நாம் எவ்வளவு கவனமாக யோசித்தாலும் தேவனுடைய நோக்கமே நிலைநிற்கும். ஆகவேதான், "உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்" (நீதிமொழிகள் 16:3) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு சமைப்பது, வேலைக்காக வெளியே செல்வது போன்ற சிறிய வேலையாக இருந்தால்கூட அதை ஜெபத்தோடு ஆரம்பிக்கவேண்டும்; ஆண்டவரிடம் ஜெபத்தை ஏறெடுக்கவேண்டும் என்பது இதன் அர்த்தம். "ஆண்டவரே, இது உமக்குச் சொந்தமானது," என்று கூறுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், உங்கள் வெற்றிக்கு தேவன் பொறுப்பெடுத்துக்கொள்வார். உங்கள் எண்ணங்களை, உங்கள் நேரத்தை, உங்கள் செயல்களை தம் தெய்வீக யோசனைக்கு இசைவாக்குவார். அவர் ஒன்றை நிலைப்படுத்தினால் எந்த மனுஷனோ, சூழ்நிலையோ அதை அசைக்கமுடியாது.

நாம் உண்மையாய் நம் யோசனைகளை தேவனிடம் ஒப்படைத்தால், நம் இருதயங்களை சமாதானம் நிரப்பும். அவரது கரங்களில் அந்த யோசனை இருக்கிறபடியால் அது எப்படியாய் முடியும் என்று நாம் கவலைப்பட தேவையில்லை. வேதம், "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11) என்று கூறுகிறது.

சிலவேளைகளில், "என்னுடைய செயல்திட்டம் வெற்றிபெறுமா? என்னுடைய படிப்பு நன்றாக இருக்குமா? என் முயற்சிக்கு பாராட்டு கிடைக்குமா?" என்று கலங்குகிறோம். ஆனால், ஆண்டவர், "கவலைப்படாதே. ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் எனக்குத் தெரியும்," என்று கூறுகிறார். உணவு சமைப்பது, பேசும் வார்த்தைகள், செலவழிக்கும் பணம் போன்று சிறிய விஷயங்கள் முதல் எல்லாவற்றையும் நீங்கள் தேவனிடம் ஒப்படைக்கும்போது, அவர் எல்லாவற்றையும் ஆசீர்வதிக்கிறார். வேதம், "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" (பிரசங்கி 3:11) என்று கூறுகிறது. ஆம், உங்களுக்குக் கிடைக்கும் பலன் அருமையானதாக இருக்கும். உங்கள் குடும்பம் ஆசீர்வாதமாக இருக்கும். உங்கள் யோசனைகளை வழிநடத்த நீங்கள் தேவனை அனுமதிப்பதால், உங்கள் திருமணம், உங்கள் ஊழியம் வாய்க்கும்; உங்கள் பிள்ளைகள் வர்த்திப்பார்கள்.

அன்பான தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் தேவனுக்கு அர்ப்பணிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வேலையை ஆரம்பிக்கும் முன்னர், ஜெபியுங்கள். படிக்கும் முன்னர் ஜெபியுங்கள். பயணிக்கும் முன்னர் அல்லது முடிவுகளை எடுக்கும் முன்னர், "ஆண்டவரே, இதை உம்மிடம் தருகிறேன்," என்று கூறுங்கள். வேதம், "அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக" (சங்கீதம் 20:4) என்று கூறுகிறது. இந்த விசுவாசத்தோடு நீங்கள் நடக்கும்போது, தேவனின் பார்வையிலும் மனுஷரின் பார்வையிலும் தயவை பெறுவீர்கள் (நீதிமொழிகள் 3:4,5). உங்கள் வாழ்க்கையின் மூலமாக தம் நாமத்தை தேவன் கனப்படுத்துவார் (கொலோசெயர் 3:23). ஒவ்வொரு யோசனையின் பலனும் சந்தோஷத்தை, சமாதானத்தை, ஸ்தோத்திரத்தை அளிக்கும். பெரிய காரியங்களைச் செய்யும்படி தேவன் கேட்கவில்லை; எல்லாவற்றையும் அவர் கரங்களில் ஒப்படைக்கும்படியே கூறுகிறார். மீதியானவற்றை அவர் பார்த்துக்கொள்வார். இந்த வழியில் நீங்கள் வாழும்போது, எளிய கீழ்ப்படிதலை நித்திய வெற்றியாய் தேவன் எவ்வாறு மாற்றுகிறார் என்பதற்கு உங்கள் வாழ்க்கை சாட்சியாக விளங்கும்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, என்னுடைய எல்லா யோசனைகளையும் தொடங்குகிறவராயிருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா வேலையையும், எல்லா எண்ணத்தையும், எல்லா கனவையும் உம்மிடம் ஒப்படைக்க எனக்குக் கற்பியும். என் அடிகளை பொறுப்பெடுத்து உம்முடைய பரிபூரண சித்தத்தின்படி என்னை நடத்தும். என் இருதயத்திலிருந்து எல்லா பயத்தையும் கலக்கத்தையும் சந்தேகத்தையும் அகற்றிப்போடும். நான் செய்கிற எல்லாமும் உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும். என் வேலைகளெல்லாம் கனி கொடுக்கும்படி என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்தருளும். உம்முடைய நீதியினாலும் ஞானத்தினாலும் என் திட்டங்களை நிலைப்படுத்தும். உம்முடைய நேர்த்தியும் தயவும் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் விளங்குவதாக. ஆண்டவரே, உம் சித்தத்தோடு என் விருப்பங்களெல்லாம் இசைந்திருக்கவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.