எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்" (ஏசாயா 43:4) என்ற வசனத்தை தியானிப்போம். நம் தகப்பன், எவ்வளவு அருமையான வாக்குத்தத்தத்தைத் தந்திருக்கிறார்! நீங்கள் அருமையானவர் மாத்திரமல்ல; அவருக்கு முன்பாக கனமும் பெற்றவர். இந்த உலகில் அநேகர் மனுஷரிடமிருந்து கனத்தைத் தேடுகிறார்கள்; ஆனால் மெய்யான கனம் தேவனிடமிருந்து வருகிறது. இந்தத் தெய்வீக கனத்தை நாம் பெற்றுக்கொள்வது எப்படி? என்பதே கேள்வி. தேவனுடைய வார்த்தை, அதற்கான வழிகளை தெளிவாக கற்பிக்கிறது. வேதம், "உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு" (நீதிமொழிகள் 3:9) என்று கூறுகிறது. நேரம், ஆஸ்தி, பிரயாசத்தின் பலன் என்று எதுவாக இருந்தாலும் சிறந்ததை தேவனுக்குக் கொடுக்கும்போது, நம் வாழ்வில் அவருக்கு முதலிடம் தரப்படுவதை காண்பிக்கிறோம். அவரை கனப்படுத்த இது ஒரு வழியாகும்; பதிலுக்கு அவர் நம்மை கனப்படுத்துகிறார்.
வேதம், "தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்" (நீதிமொழிகள் 14:31) என்று கூறுகிறது. தேவனை கனம்பண்ணுவது என்பது நேரடியாக அவருக்குக் கொடுப்பது மட்டுமல்ல; நம்மை சுற்றியிருக்கும் ஏழைகளுக்கும், தேவையிலுள்ளோருக்கும் உதவுவதும் ஆகும். பாடனுபவிக்கிறவர்களுக்கு மனதுருக்கத்தோடு உதவும் ஒவ்வொரு தருணத்திலும் உண்மையில் நாம் தேவனையே கனம்பண்ணுகிறோம். "மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்" (நீதிமொழிகள் 29:23) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. என் பிள்ளையே, தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக நம்மை தாழ்த்துவது ஆண்டவரால் உயர்த்தப்படுவதற்கு முக்கியமான வழியாக உள்ளது. "மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்... மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்" (சங்கீதம் 8:4,5) என்று வேதம் கூறுகிறது. நம் பரம தகப்பன், அவருக்கு முன்பாக நாம் தாழ்மையுடன் நடக்கும்போது நமக்கு முடிசூட்டுவது எவ்வளவு மகிமையான காரியம்! மேலும், "ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால்... கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்" (2 தீமோத்தேயு 2:21) என்றும் வேதம் கூறுகிறது. பரிசுத்த ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட வாழ்க்கை, தேவனுக்காய் மகத்தான காரியங்களைச் செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது.
நிறைவாக, ஆண்டவர் இயேசுதாமே, "ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்" (யோவான் 12:26) என்று கூறியுள்ளார். எனக்கு அன்பான தேவ பிள்ளையே, கனத்துக்குரிய பாதை எளிமையானது. உங்களிடம் உள்ள சிறந்தவற்றை கொடுத்து ஆண்டவரை கனப்படுத்துங்கள்; ஏழைகளுக்கு உதவுங்கள்; தூய்மையான வாழ்க்கை நடத்துங்கள்; தாழ்மையாக இருங்கள்; கிறிஸ்துவுக்கு உண்மையாய் ஊழியஞ்செய்யுங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது தேவன் அருளும் கனம் நிச்சயமாய் உங்கள்மீது தங்கும். இந்த கனம், மனுஷரிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம்போல் தற்காலிகமானதல்ல; எல்லாவற்றையும் காணும் பிதாவிடமிருந்து வருவதால் நித்தியமானதாகும். ஆகவே, இன்று நம்மை, நம் வாழ்க்கையை அவரை கனம்பண்ணுவதற்கு அர்ப்பணிப்போம். பதிலுக்கு அவர் நம்மை தமது மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டுவார்.
ஜெபம்:
எனக்கு அருமையான பரம தகப்பனே, உம்முடைய பார்வையில் அருமையானவனா(ளா)கவும் கனமுள்ளவனா(ளா)கவும் இருப்பதாக என்னை அழைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் தலையின்மீது மகிமையின் கிரீடத்தை சூட்டுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். சிறந்த காணிக்கைகளால் உம்மை கனம்பண்ண எனக்குக் கற்றுத்தாரும். ஏழைகளையும் தேவையோடு இருப்பவர்களையும் மனதுருக்கத்தோடு நினைத்துக்கொள்ள எனக்கு உதவும். உமக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக மெய்யான தாழ்மையோடு காணப்படும்படி என் உள்ளத்தை நிறைத்தருளும். என்னை சுத்திகரித்து உம் ராஜ்யத்திற்கென்று கனமுள்ள பாத்திரமாக்கும். தினமும் பரிசுத்தத்தோடும் கீழ்ப்படிதலோடும் நடக்கும்படி எனக்கு வழிகாட்டும். நீர் என்னை அனுப்பும் இடத்திலெல்லாம் கிறிஸ்துவுக்காக உண்மையாய் ஊழியம் செய்யும்படி என்னை பெலப்படுத்தும். ஒருபோதும் மங்காத தெய்வீக கனத்தை எனக்கு அளித்து ஆசீர்வதிக்கவேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.