அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்." (மத்தேயு 2:11) என்று கூறுகிறது. பாலனான இயேசுவை கற்பனை செய்து பாருங்கள். அவர் உருவத்தில் குட்டியாக இருந்தாலும் சாந்தமாக விளங்கினார். சிறுபிள்ளையான அவர் முன்பு சாஸ்திரிகள் பணிந்துகொண்டனர். சாஸ்திரிகள் அவரிடம் பயபக்தியாய் இருந்தனர். அவர்கள், அவர் மீது அன்புகொண்டு, அவருக்கு மரியாதை காட்டினர். அன்பானவர்களே, நாமும் அவ்வாறே இருக்கவேண்டும்.

நம் முழு இருதயத்தோடும் ஆண்டவரை நேசிப்பது மட்டுமல்ல, அவரிடம் பயபக்தியாயும் இருக்கவேண்டும். பயபக்தி என்ற வார்த்தையை நான் முதலில் வேதத்தில் வாசித்தபோது மிகவும் வியப்படைந்தேன். அது சங்கீதங்களிலும் நீதிமொழிகளிலும் பலமுறை வருகிறது. பயபக்தி என்ற வார்த்தை மரியாதை என்பதைக் காட்டிலும் ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும். அது பரிசுத்தமான வியப்பு; அன்பு கலந்த புனிதமான பயம். இந்த உலகம் முழுமைக்கும் தேவனாயிருக்கிறபடியால் நாம் கர்த்தரிடத்தில் பயமும் மரியாதையும் கொண்டிருக்கவேண்டும். கர்த்தரின் பாதத்தில் பணிந்துகொள்ளும்போது, அவர் நிச்சயமாகவே நம்மை மகா உயரங்களுக்கு உயர்த்துவார்.

வேதம், "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்" (சங்கீதம் 113:7,8) என்று கூறுகிறது. இன்று நீங்கள் தாழ்மையோடும் பயபக்தியோடும் ஆண்டவரை தொழுதுகொண்டால் அவர் பிரபுக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரும்படி உங்களை உயர்த்துவார். உங்கள் பெயர் உயர்த்தப்படும். ஆகவே, அன்பானவர்களே, இன்று ஆண்டவர்பேரில் பயபக்தியாயிருக்கவும், கனப்படுத்தவும், அவரில் அன்புகூரவும் மறவாதிருங்கள். அப்படிச் செய்யும்போது, ஆண்டவர்தாமே உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்துவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எப்போதும் உம்மிடம் பயபக்தியாய் இருப்பதற்கு எனக்கு உதவி செய்யும். என் முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும். அப்படி இருக்கும்போது, ஆண்டவரே, நீர் என்னை மகா உயரங்களுக்கு உயர்த்துவீர் என்பதை அறிந்திருக்கிறேன். நீர் என்னை பிரபுக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் அமரப்பண்ணுவீர். ஆண்டவரே, உம் ஞானம் என்னை நிரப்பவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நான் செய்கிற காரியங்களிலெல்லாம் எனக்கு புத்தியையும் விவேகத்தையும் அருளிச்செய்திடும். நான் பேசுகிறவை, செய்கிறவை அனைத்தும் உம் பரிசுத்த நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவதாக. ஆண்டவரே, நீர் என்னிடம் காட்டும் அன்புக்காகவும் தயவுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஏற்ற காலத்தில் நீர் என்னை உயர்த்துவீர் என்று நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.