அன்பானவர்களே, இன்றைக்கு நாம் தியானிக்கும்படி, "எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்" (நீதிமொழிகள் 28:14) என்ற அருமையான வசனத்தை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். நாம், தேவனுக்கு எவ்வளவு காலம் பயப்படவேண்டும்? வேதம், எப்போதும் தேவனுக்குப் பயந்திருக்கவேண்டும் என்று கூறுகிறது. நாம் சந்தோஷமாக இல்லாத காலங்களிலும், ஏன் என்று கேட்காமல் தேவனுக்குப் பயந்திருக்கவேண்டும். ஆகவேதான் வேதம், "எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே" (பிரசங்கி 12:13) என்று கூறுகிறது. இதுவே நம்மை பூரண மனுஷனாக, பூரண மனுஷியாக மாற்றுகிறது. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள், தேவனிடமிருந்து பூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். மனுஷனும் மனுஷியும் தேவனுக்குப் பயப்பட அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வேதம், "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" (நீதிமொழிகள் 1:7) என்று கூறுகிறது. அது முடிவல்ல; அதுவே ஆரம்பம் என்று வேதம் கூறுகிறது. எந்த அளவுக்கு தேவனுக்குப் பயப்படுகிறோமோ அந்த அளவுக்கு தேவ ஞானமும், தேவ அறிவும் நமக்குள் பெருகும். ஞானம் என்பது தேவனே நமக்குள் பெருகுகிறதைக் குறிக்கிறது. நமக்குள் நற்கிரியையை தொடங்கிய ஆண்டவர், தாம் வரும்வரைக்கும் அதை நிறைவேற்றுவார். ஆம், அன்பானவர்களே, நீங்களும் நானும் தேவனுக்குப் பயப்படும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் தேவனுக்குப் பயப்படும்போது மாத்திரமே, தேவ ஞானத்தைப் பெற்றுக்கொள்வோம். நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளும்படி அனுதினமும் தேவனை நோக்கிப் பார்ப்பதே தேவனுக்குப் பயப்படுவதாகும்.

சூரியகாந்தி மலர், வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதை நான் ஒருமுறை காண நேர்ந்தது. அது உண்மையிலேயே வானத்தை, சூரியனை நோக்கிக் கொண்டிருந்தது. சூரியகாந்தி பூவிலிருந்து, நாம் எல்லாவற்றுக்காகவும் ஆண்டவரையே நோக்க வேண்டும் என்ற மேலான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். எல்லா காரியங்களிலும் தேவனுக்குப் பயந்திருக்கும்போது, உண்மையிலேயே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருப்போம். நமக்காக எல்லாவற்றையும் ஆண்டவர் செய்து முடிப்பார். நாம் தேவனுக்கு பயப்பட்டால் போதும்; கர்த்தர் எல்லாவற்றையும் செய்துமுடிப்பார். கர்த்தர், நமக்காக எல்லாவற்றையும் செய்துமுடிப்பார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 138:8). கர்த்தர், கோணலான பாதைகளை செவ்வையாக்குவார்; நாம் நேராக நடக்கும்படிக்கு பாதைகளை விசாலமுமாக்குவார். இன்றைக்கு அப்படியான பூரண ஆசீர்வாதத்தை கொடுக்கும்படி ஆண்டவர் நம்மேல் நினைவாயிருக்கிறார்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, உமக்கு முன்பாக பயபக்தியாய் நடப்பதற்கு எனக்குக் கற்றுக்கொடும். என் இருதயம் உம் சமுகத்தின்மேலும் உம் வார்த்தையின்மேலும் பயபக்தியாயிருப்பதாக. உமக்குப் பயப்படுவதால் வரும் தெய்வீக ஞானத்தினால் என்னை நிரப்பும். என் வாழ்க்கையின் தேவைகள் எல்லாற்றுக்கும் நான் உம்மையே சார்ந்திருக்க எனக்கு உதவிடும். உம் சத்தியத்தில் நான் நடக்கும்படி என் பாதைகளை நேராக்கிடும். எனக்கான எல்லாவற்றையும் உம் கிருபையால் செய்துமுடித்தருளும். உருக்கமான இருதயத்தை எனக்கு தருவீராக; அது ஒருபோதும் உம்மைக் குறித்து தளர்ந்துபோகாதிருப்பதாக. உம் வசனத்தின்மேல் பயபக்தியாய் இருக்கும்படியும் உம் நாமத்தை மகிமைப்படுத்தும்படிக்கும் என்னை அர்ப்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.