நீதியுள்ள பெற்றோராக, நீங்கள் பெரிய சுதந்தரத்தை, பலன்களை, ஐசுவரியத்தை உங்கள் பிள்ளைகளுக்குக் கொண்டு வருகிறீர்கள். வேதம், "நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்" (நீதிமொழிகள் 20:7) என்று கூறுகிறது. உத்தம ஆவியோடு நீதியாக வாழும் ஒவ்வொரு தகப்பனும் தாயும் தங்கள் பிள்ளைகளுக்கு பெரிதான ஐசுவரியங்களை, சிறந்த பலன்களை கொண்டுவருகிறார்கள். தேவன்தாமே அவர்களை ஆசீர்வதிக்கிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பராமரிக்க போதுமான பணம் இல்லையென்றோ, அவர்கள் உயர்வதற்கென போதுமானவற்றை செய்யவில்லை என்றோ நீங்கள் எண்ணலாம். ஆனால், ஆண்டவர், "என் மகனே, என் மகளே, நீ உத்தமமாக, நீதியாக வாழ்ந்திருக்கிறாய். எனக்குச் சித்தமானவற்றையெல்லாம் செய்தாய். ஆகவே, உன் பிள்ளைகளை நான் ஆசீர்வதிப்பேன். அவர்கள் பலன் பெரிதாயிருக்கும். உன் பிள்ளைகளுக்கென நான் யாவற்றையும் செய்வேன். அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன்," என்று கூறுகிறார். வேதத்தில் கூறியுள்ளபடி, "கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்" (சங்கீதம் 115:14).

உத்தமமான, நீதியுள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படும்? முதலாவதாக, தேவன் அவர்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார். அவர்கள் ஆசீர்வாதமாக இருப்பார்கள் (சங்கீதம் 37:25). இரண்டாவதாக, பிள்ளைகள் தேசத்தில் பெலத்திருப்பார்கள் (சங்கீதம் 112:1,2). மூன்றாவதாக, அவர்கள் பரிபூரண ஆசீர்வாதங்களோடு வர்த்திப்பார்கள் (சங்கீதம் 115:12-14). காருண்யாவில் படிக்கிற ஒரு மாணவர், தன் தகப்பனும் தாயும் தினக்கூலி வேலை செய்வதாகவும், ஆனாலும் அவர்கள் உத்தமமாக, நீதியாய் வாழ்ந்து தேவனுடன் நடப்பதாகவும் சாட்சியில் கூறினார். அவர் நன்றாக படித்து, பன்னிரண்டாம் வகுப்பில் 90% மதிப்பெண்கள் பெற்றார்; அதே ஆண்டில் காருண்யாவில் முழு கல்வி ஊக்கத்தொகையும் பெற்றார். கல்வி கட்டணம் எதுவும் செலுத்தாமல் அவர் தற்போது கம்ப்யூட்டர் சயன்ஸ் எஞ்ஜினியரிங் படிக்கிறார். பெற்றோர் நீதிமான்களாய் விளங்குவதால் இந்த ஆசீர்வாதம் கிடைக்கிறது. பிள்ளைகள் வர்த்திப்பார்கள். உங்கள் குடும்பத்திலும், உங்கள் பிள்ளைகளுக்கும் இப்படி நடக்கும்.

நான்காவதாக, தேவன், உங்கள் பிள்ளைகள் நடுவில் இருப்பார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 14:5). ஆம், நீங்கள் நீதியாய் நடக்கும்போது, தேவ பிரசன்னம் உங்கள் பிள்ளைகளோடு இருக்கும். ஐந்தாவதாக, உங்கள் பிள்ளைகள் கூப்பிடும் முன்னரே வேதத்தில் வாக்குப்பண்ணப்பட்டுள்ளபடி தேவன் பதிலளிப்பார் (ஏசாயா 65:22-24). எல்லாவற்றிலும் பெரிதான ஆசீர்வாதமாக, தேவன் உங்கள் பிள்ளைகள்மேல் தம் பரிசுத்த ஆவியை ஊற்றுவார் என்று வேதம் கூறுகிறது (யோவேல் 2:28). உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். பெற்றோராகிய நீங்கள் தேவனுக்கு முன்பாக நீதியாய் நடக்கும்போது, அவர்தாமே உங்கள் பிள்ளைகளுக்கு இந்த ஆசீர்வாதங்கள் அத்தனையையும் அருளிச்செய்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீதியாகவும் உமக்கு முன்பாக உத்தமமான வாழ்க்கை நடத்தவும் எனக்கு உதவி செய்தருளும். என் வாழ்க்கை, என் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதங்களை, சுதந்தரத்தை, பெருக்கத்தை உண்டாக்குவதாக. என் பிள்ளைகள் நடுவில் இருந்து, அவர்களை உம் வழியில் நடத்துவீராக. தேசத்தில் அவர்கள் பெலத்திருக்கவும், பலருக்கு ஆசீர்வாதமாக விளங்கவும் செய்யும். ஆண்டவரே, அவர்கள் கூப்பிடுவதற்கு முன்பே பதிலளியும்; அவர்கள்மேல் உம் பரிசுத்த ஆவியை ஊற்றி, உம் மகிமைக்கென்று அவர்களைப் பயன்படுத்தும். உமக்கு முன்பாக நான் பரிசுத்தமாக வாழ்வது, அவர்களின் எதிர்கால ஆசீர்வாதத்திற்கான அடித்தளமாக விளங்கவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.