அன்பானவர்களே, இன்றைக்கு தேவன் தரும் வாக்குத்தத்தம் என்ன என்று பார்ப்போம். இன்றைய தினம் இயேசு அழைக்கிறார் ஸ்தாபகரான Dr. பால் தினகரனின் பிறந்த நாள். என் தந்தை மூலமாக வல்லமையான காரியங்களை செய்துவருவதற்காகவும், இந்த ஊழியம் கட்டப்பட்டிருக்கும் தரிசனத்திற்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். இன்றைக்கு உங்கள் ஜெபங்களில் அவரை நினைத்துக்கொள்ளுங்கள்.

"உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்" (ஏசாயா 60:14) என்ற இன்றைய வாக்குத்தத்தத்தை தியானிப்போம். எவ்வளவு பெரிதான வாக்குத்தத்தம் இது! மக்கள் நம் காலடியில் பணிந்து கர்த்தரின் நகரம் என்று நம்மை அழைப்பார்கள். ஆனால், வசனத்தின் முதல் பாகத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் நம்மை அசட்டை பண்ணுவார்கள்; நம்மை வெறுப்பார்கள்; நம்மை அழிக்க முயற்சிப்பார்கள். ஒருவேளை இன்றைக்கு உங்களை வெறுக்கிற, நீங்கள் விழுந்துபோவதை பார்க்க விரும்புகிற, வீட்டுக்கதவை தட்டி உங்களை மிரட்டுகிற மக்களை நீங்கள் எதிர்கொண்டிருக்கலாம். உங்கள் உள்ளம் உடைந்ததுபோல, பயத்தினால் பாரப்பட்டதுபோல நீங்கள் உணரலாம். ஆனாலும், அன்பானவர்களே, இதுபோன்ற நேரத்திற்காகவே தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார். என் தாத்தா, இயேசு அழைக்கிறார் ஊழியத்தை ஆரம்பித்து, கர்த்தர் தன்னை நடத்திய வழியில் ஜெபத்துடன் சென்றபோது, ஒரு மனிதர் தொடர்ந்து அவருக்கு விரோதமாக தமது பத்திரிகையில் எழுதிக்கொண்டே இருந்தார். என் தாத்தா செய்கிற எல்லா செயல்களுக்கும் விரோதமாக, தேவன் அவருக்குக் கொடுத்த தரிசனத்திற்கு விரோதமாக, தேவன் அவர் உள்ளத்தில் போட்ட திட்டங்களுக்கு விரோதமாக, அவர் கட்டியெழுப்பிய ஒவ்வொரு ஊழியத்திற்கும் விரோதமாக எழுதிக்கொண்டிருந்தார். நிச்சயமாக என் தாத்தாவின் உள்ளத்தை அது ஆழமாக காயப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அவர் ஒருபோதும் பதில் எழுதவில்லை. மாறாக, அவர் சென்று ஆண்டவருக்குள் தன்னை மறைத்துக்கொண்டு, அவருக்கு முன்பாக, "ஆண்டவரே, நான் உமக்கு ஊழியம் செய்யவில்லையா? உமக்குக் கீழ்ப்படிவில்லையா? ஏன் மனுஷர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; எனக்கு எதிராக பேசுகிறார்கள்?" என்று அழுதார். அன்பானவர்களே, இதுபோன்ற தருணங்களில், நாம் நம்மை ஆண்டவருக்குள் மறைத்துக்கொள்ளவேண்டும். என்ன நடந்தது? 

ஆண்டவர் என் தாத்தாவை பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தினார். கோடிக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக திகழும்படியும், அவர்கள் அன்பு அவரை சூழ்ந்துகொள்ளும்படியும் செய்தார். ஒருநாள், அவருக்கு விரோதமாக எழுதிக்கொண்டிருந்த அதே மனிதர் வந்து வருத்தம் தெரிவித்தார்; மன்னிப்பு கேட்டார். நீங்கள் உயரும்போது, தாங்கள் செய்த தீமைக்கான அழிவைக் குறித்த பயம் அவர்களைப் பிடிக்கிறது. அதுவே அவர்களுக்கு அச்சமுண்டாக்குகிறது. தாம் உங்களை உயர்த்துவதாகவும், தமது நகரமாக்குவதாகவும், உங்கள் சத்துருக்களும் உங்கள் பாதத்தில் வந்து பணிந்துகொள்ள வைப்பதாகவும் ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை அசட்டை பண்ணுகிறவர்களும் ஒருநாள் என்னை பணிந்துகொள்வார்கள்; நான் உம்முடையவன்(ள்) என்பதை ஒப்புக்கொள்வார்கள் என்ற தவறாத உம் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, மக்கள் என்னை வெறுக்கும்போது, மிரட்டும்போது அல்லது என்னை கீழே தள்ள முயற்சிக்கும்போது, உமக்குள் நான் மறைந்துகொள்ளவும், அசைக்கப்படாதிருக்கவும் எனக்கு உதவும். ஆண்டவரே, என்னை உயர்த்தும். உம்முடைய அன்புக்கும் மகிமைக்கும் சாட்சியாக மாற்றும். சத்துருவின் எல்லா திட்டங்களும் தோற்றுப்போகட்டும்; கர்த்தரின் நகரமாக என்னை பிரகாசிக்கப்பண்ணி, உம்முடைய நாமத்திற்கு கனத்தை கொண்டு வரச்செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.