அன்பானவர்களே, "ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்" (1 இராஜாக்கள் 3:12) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். கர்த்தர் உங்களுக்கு ஞானத்தையும் அளவற்ற புத்தியையும் கொடுத்து ஆசீர்வதிக்க விரும்புகிறார். வேதம், "அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது," என்று கூறுகிறது (கொலோசெயர் 2:3). ஆண்டவர் இன்று தம் கிருபையை பொழிய விரும்புகிறார். இயேசுவின் நாமத்தினாலே ஞானத்தின், அறிவின் ஆவி உங்கள்மேல் இறங்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன். கர்த்தர், சாலொமோனிடம், "உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்," என்று கூறினார். தேவன், எது சரி, எது உண்மை என்று புரிந்துகொள்ளக்கூடிய விவேகமுள்ள இருதயத்தைக் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். அவர், சாலொமோனை, மற்றவர்களைப்போல அல்லாமல் மிகுந்த கனமுள்ள பதவிக்கு உயர்த்தி தம் வாக்கை நிறைவேற்றினார். அவ்விதமே, கர்த்தர் உங்களையும் உயர்ந்த ஸ்தானங்களுக்கு உயர்த்துவார்; வாய்ப்புகளின் புதிய கதவுகளைத் திறப்பார்.
கர்த்தர், ஏன் நமக்கு ஞானமும் விவேகமுமுள்ள இருதயத்தைக் கொடுக்கிறார்? பிறரை பராமரித்து அவர்களைச் சரியான பாதையில் நடத்துவதற்கு உதவுவதற்காகவே கொடுக்கிறார்.
சாலொமோனைப் பாருங்கள். தேவன் அவனுக்கு மக்களை சரியாய் நியாயந்தீர்க்க ஞானத்தைக் கொடுத்தார். அவனது மிகுதியான விவேகத்தையும், தங்களின் உள்ளங்களைப் புரிந்துகொண்டு, நீதியான தீர்ப்புகளைக் கொடுக்கும் திறனையும் கண்ட அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்; அவனிடம் பயபக்தியாயிருந்தனர். இரண்டு பெண்களும் அவர்கள் பிள்ளைகளுமாகிய சம்பவத்தை நினைத்துப்பாருங்கள். ஓரிரவில், ஒரு பெண், தூங்கிக்கொண்டிருந்த தன் குழந்தையின்மேல் படுத்துவிட்டாள். குழந்தை மரித்துப்போயிற்று. அவள் உயிரோடு இருந்த குழந்தையை எடுத்துவிட்டு, மரித்துப்போன தன் குழந்தையை மற்றொரு பெண் அருகில் கிடத்தினாள். ராஜாவுக்கு முன் அவள், "உயிரோடு இருப்பதுதான் என் குழந்தை. இறந்தது அவள் குழந்தை," என்று முறையிட்டாள். இன்னொரு பெண்ணோ தனக்கு நீதி செய்யவேண்டும் என்று கேட்டாள். தேவன் தனக்குக் கொடுத்த ஞானத்தினால், சாலொமோன் அவர்கள் உள்ளங்களைப் பகுத்தறிந்து, உண்மையை புரிந்துகொண்டான். அந்தக் காரியத்தை ஆராய்ந்து, சரியான தீர்ப்பை வழங்கினான். அதனால் தேசம் முழுமையும் வியப்படைந்தது. மற்ற எல்லா ராஜாக்களையும் விட சாலொமோனுக்கு மிகுந்த கனம் கிடைத்தது. அவன் ஞானத்தோடும் விவேகத்தோடும் ஆளுகை செய்ததால் தேசம் செழித்தது. நமக்கு அவனைப் போன்ற ராஜாக்கள் தேவை. ஜாதி, இனம், மதம் பார்க்காமல் எல்லோரிடமும் நீதியாய் நடந்துகொள்ளும் தலைவர்கள் நமக்குக் தேவை. தலைவர்கள் பாரபட்சம் பார்க்காமல் நீதியாய் நடக்கும்போது, சாலொமோன் ஆட்சி செய்த காலத்தைப்போல செழிப்பும் நீதியும் தேசத்தில் மேலோங்கும். மக்கள் செல்வத்தை, சமாதானத்தை, சகோதரத்துவத்தை அனுபவிப்பார்கள்; தேசம், மிக உயரத்தை எட்டும்.
இரண்டாவதாக, தானியேலைப் பாருங்கள். சொப்பனங்களின் அர்த்தத்தைக் கூறும் விசேஷித்த ஆவியும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிற, கடினமான பிரச்னைகளைத் தீர்க்கிற திறனும் அவனுக்கு இருந்தது (தானியேல் 5:12). அந்த வரத்தினால், அவன் நடக்கப்போகிறவற்றை முன்பே ராஜாக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டினான். அவன் கூறியவண்ணமே எல்லாமும் நடந்தன. அவனை சிறைப்பிடித்த அதே ராஜாக்களுக்கே அப்படிச் செய்தான். ஆனாலும் அவர்கள் நடுவில் பிரபு போல வாழ்ந்தான். கர்த்தர், அதே கிருபையை உங்களுக்கும் அருளிச் செய்வார். இப்படியாக நீங்கள் உங்கள் நிறுவனத்தில், ஸ்தாபனத்தில், ஊழியத்தில் உயருவீர்கள். அதன் தலைவர்களை வழிநடத்தக்கூடிய ஞானத்தை அவர் உங்களுக்குத் தருவார். அப்படிப்பட்ட புத்தியைக் கொடுத்து தேவன் உங்களை ஏன் ஆசீர்வதிக்கிறார் என்று நீங்கள் வியப்படைவீர்கள். தேசத்தை ஆளும் அதிகாரம் படைத்த ராஜாக்களுக்கும் தலைவர்களுக்கும் தெளிவான ஆலோசனை அளிக்கும் ஞானமுள்ளவராக உங்களை உருவாக்குவதற்கு அவர் விரும்புகிறார். கர்த்தரின் ஆவியானவர் அனைத்தையும் அறிவார். ராஜாக்கள், தங்கள் தேசத்தை ஞானத்துடன் ஆளுகை செய்ய அவர் விரும்புவதால் எதிர்காலத்தில் நடக்கப்போகிறவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். நீங்களும் நிறுவனங்களையும் ஊழியங்களையும் வழிநடத்தும்படி அவர் விரும்புகிறார். புத்தியுள்ள ஞானத்தின் ஆவியானவராகிய பரிசுத்த ஆவியானவர், உங்களை நிறைத்து, வாழ்க்கையின் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைப்பதற்கு தெளிவாக வழிகாட்டுவார். இந்தத் தெய்வீக வரம் முன்னேறும்படி உங்களுக்கு வழிகாட்டும். ஆண்டவரிடம் இந்த ஆசீர்வாதத்தைக் கேளுங்கள்; அவர் இன்றே உங்களுக்கு அருளிச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
மூன்றாவதாக, உங்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்கு ஞானத்தையும் அறிவையும் அருளிச்செய்ய தேவன் விரும்புகிறார். வேதம், "ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்" (1 தீமோத்தேயு 5:8) என்று கூறுகிறது. உங்கள் மனைவியை / கணவரை, பிள்ளைகளை - அன்பானோரை கவனித்துக்கொள்ளும்படி அன்பும் அக்கறையும் நிறைந்த ஆவியால் உங்களை நிரப்புவதற்கு ஆண்டவர் விரும்புகிறார். அவர்கள் தேவைகளை நீங்கள் வழங்கவேண்டும் என்றும், உங்கள் பிள்ளைகளின் திருமணத்தை ஏற்றவிதத்தில் ஏற்பாடு செய்வது போன்ற ஞானமுள்ள தீர்மானங்களை எடுக்கும்படியும் அவர் விரும்புகிறார். அவர்களுக்குத் தேவையானவற்றை, தேவையான நேரத்தில் கொடுப்பதே நம் முதன்மையான பொறுப்பாகும். தங்கள் முயற்சிகளில் வெற்றியடையும்படி பணம் உள்ளிட்ட வேண்டியவை அவர்களுக்கு இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும். உங்கள் குடும்பத்தை எல்லாவிதங்களிலும் போஷிப்பதற்கு, பாதுகாப்பதற்கு தேவையான ஞானத்தை தேவன் அருளுவார். உங்கள் பிள்ளைக்கு, கணவருக்கு என்ன செய்யவேண்டும் என்று அறிந்துகொள்ளும்படி அவர் உங்களை வழிநடத்துவார். "உன் மனைவிக்கு இதைச் செய்," என்று பரிசுத்த ஆவியின் வாயிலாக அவர் வழிநடத்துவார். அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்து, நீங்கள் உங்களுக்கு அன்பானோருக்கும், குடும்பம் முழுமைக்கும் சமாதானத்தை அளிப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பிள்ளைகளுக்கு ஞானமும் அறிவுமுள்ள ஆவியை மிகுதியாக கொடுத்தருளும். நீதியாய் நியாயந்தீர்ப்பதற்கான ஞானம், தலைவர்களை வழிநடத்தும் ஞானம், குடும்பத்தை பராமரிப்பதற்கான ஞானம் ஆகிய மூன்றுவித ஞானத்தையும் அருளிச்செய்யும். எங்களை ஆசீர்வதித்தருளும்; உயர்த்தியருளும்; உம் சமாதானத்தால் எங்கள் வாழ்வை நிரப்பியருளும். ஒவ்வொரு முடிவையும் எடுக்கும்போது உம் பரிசுத்த ஆவியானவர் எங்களை வழிநடத்துவாராக. எங்களுக்கு அன்பானோரை பராமரிக்கவும் அவர்கள் தேவைகளை ஏற்ற நேரத்தில் கொடுக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். கேட்கிறவர்களுக்கு நீர் ஞானத்தை தாராளமாய்க் கொடுப்பீர் என்று உம் வார்த்தை கூறுகிறது. தகப்பனே, இன்று இந்த ஆசீர்வாதத்தை எங்களுக்கு அருளவேண்டுமென்று கேட்கிறோம். விசுவாசத்தில் அதை இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்கிறோம், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


