அன்பானவர்களே, ஆபத்துக் காலத்தில் கர்த்தரே நம்மை பாதுகாக்கிறவர். இந்த உலகத்தில், ஆபத்துகள், விபத்துகள், இழப்புகள், நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் சிதறிப் போகும் அல்லது நம்மை விட்டு விலகிப்போகும் காலங்கள் வரலாம். இவை எல்லாவற்றின் நடுவிலும் கர்த்தரே நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். வேதம், "தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்" (சங்கீதம் 27:5) என்று கூறுகிறது. அன்பானவர்களே, ஆபத்து நாட்கள் வரலாம். வேதம், "நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை" (ஏசாயா 57:1) என்று கூறுகிறது. சிலவேளைகளில் இளவயதினர் கூட ஆண்டவரோடு இருக்கும்படி எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

நேற்று ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, "என் சகோதரனுக்கு 53 வயதுதான் ஆகிறது. அவன் பிள்ளைகள் சிறியவர்கள்தாம். இந்த வயதில் அவர்களுக்கு தகப்பன் வேண்டும். ஆனால், நேற்று ஐந்தே நிமிடத்தில் அவர் இறந்துபோனார். இறப்பதற்கு சற்று முன்னர் தான், எங்கள் அம்மாவிடம் பேசியுள்ளார். அதற்குப் பின் தன் அறைக்குச் சென்றுள்ளார். மூச்சுவிட முடியவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார். ஐந்தே நிமிடத்தில் இறந்துபோனார். ஏன் இப்படி நடந்தது?" என்று கேட்டார். நான், "ஆண்டவரை விட்டு உங்கள் சகோதரனை ஏதோ ஓர் ஆபத்து பிரிக்கும் முன்னரே, தேவன் கிருபையாக அவர் ஆத்துமாவை பாதுகாத்துள்ளார். அவரை பரலோகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்," என்று கூறினேன். அவர், "சகோதரரே, நீங்கள் சொல்வது உண்மைதான். என் சகோதரன், பல ஆண்டுகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். அவரது ஈரல் அதிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால், கடைசி ஆறு மாதங்கள் அவர் உண்மையிலேயே மனந்திரும்பி, குடிப்பதை நிறுத்தியிருந்தார். எப்போதாவது, திரும்பவும் அப்பழக்கத்தில் விழுந்து கொஞ்சம் குடிப்பார். அதை முழுவதுமாக விட்டுவிடுவதற்கு முழு மனதோடு போராடினார். கடந்த வாரத்தில் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். வயது முதிர்ந்த எங்கள் அம்மாவை தினமும் போய் பார்த்து, பேசிக் கொண்டிருப்பார். அவர்களுக்கு தைரியம் கூறுவார்; சந்தோஷப்படுத்துவார். அவருக்குக் குடும்பம் இருந்தாலும், எங்கள் அம்மாவை பார்க்க வரத் தவறுவதேயில்லை. அப்படி மனம் மாறியபின்னர், திடீரென எடுத்துக்கொள்ளப்பட்டார்," என்று கூறினார்.

ஆம், தீங்குநாள் வருவதற்கு முன்னரே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான். அவர்கள் ஆத்துமாக்கள் காக்கப்படுகின்றன. ஆனால், நாம் இந்த உலகத்தில் வாழும்வரைக்கும் கர்த்தர் தம் இரகசிய வாசஸ்தலத்தில் நம்மை மறைத்து வைக்கிறார். அந்த மனுஷனை தம் உன்னத வாசஸ்தலத்தில் மறைத்து வைத்திருக்கிறார். இன்னும் பூமியில் இருக்கும் நம்மை, தம் சமுகத்தின் கூடாரத்தின் கீழ், சாத்தான் தொடாமுடியாதவண்ணம், பொல்லாத மக்கள் தீங்கு செய்யாதவண்ணம், தீமை நம்மை மேற்கொள்ளாதவண்ணம் ஒளித்து வைக்கிறார். அவர் நம்மை ஒளித்து வைப்பதோடு மட்டுமல்லாமல், யாரும் நம்மை அசைக்காதவண்ணம், அழிக்கப்பட்டுவிடாமல் கன்மலையின்மேல் நிலைநிறுத்துகிறார். இந்தக் கிருபையை ஆண்டவர் இன்று உங்களுக்குத் தருகிறார். அவர் உங்களை வேலையை, இல்லறத்தை, படிப்பை, வியாபாரத்தை, ஊழியத்தை, அபிஷேகத்தை நிலைப்படுத்துவார். தம் கூடாரத்தில் பத்திரமாக மறைத்து வைப்பார்.

தீய எண்ணங்களோடு உங்களைத் தேடுகிறவர்கள், உங்களை கண்டுபிடிக்க முடியாது. தாவீது, எதிரிகளின் பாளயத்திற்குள் சென்றபோது, கர்த்தர் அவன் விரோதிகள் ஆழ்ந்து உறங்கும்படி செய்தார். தாவீது தான் சென்ற வேலையை முடித்துவிட்டு பத்திரமாக திரும்பினான். ஒருவரும் அவனை தொடவில்லை. அவ்விதமே, ஆண்டவர் உங்களுக்குச் செய்வார். ஆகவே, தைரியமாயிருங்கள். வேதம், "ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்," (சங்கீதம் 90:1) என்று கூறுகிறது. அவர் என் பிள்ளைகளுக்கு மாத்திரம் அடைக்கலமல்ல; என் பேரப்பிள்ளைகளுக்கும் அடைக்கலமாயிருக்கிறார். வேதம், "அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்" (உபாகமம் 33:27) என்று கூறுகிறது. ஆகவே, பயப்படாதிருங்கள். வேதம், "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்" (சங்கீதம் 91:1) என்று கூறுகிறது. இந்தக் கிருபையை இன்று ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். "தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" (2 கொரிந்தியர் 6:16) என்று வேதம் கூறுகிறது.

ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் ஆத்துமாவைக் காத்துக்கொள்வார்; தம் சொந்தப் பிள்ளையைப்போல உங்களை காப்பாற்றுவார்; உங்களை தம் பரிசுத்த ஆலயமாக வைத்துக்கொள்வார். தம் கிருபையினால் உங்களுக்கு வழிகாட்டுவார்; நீங்கள் செல்லுமிடமெங்கும் உங்களோடிருப்பார். ஆண்டவர் எப்போதும் உங்கள் தேவனாய் இருப்பதால், திடமனதாயிருங்கள்; தைரியமாயிருங்கள். அனுதினமும் அவரது சமாதானத்தை, பாதுகாப்பை, ஜெயத்தை பெற்று நடப்பீர்களாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா காலமும் நீரே என் அடைக்கலமும் பலத்த துருகமுமாயிருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் செட்டைகளின் கீழ் என்னை மறைத்து, ஆபத்து நாளில் சுகமாய் காத்துக்கொள்வீராக. உம் மறைவிடத்தில் என்னை மூடி, நான் அசைக்கப்படாதபடி, என் குடும்பமும் பிள்ளைகளும் பாதுகாப்பாயிருக்கும்படி, சத்துருவின் சகல சதியாலோசனைக்கும் தப்பும்படி என்னை கன்மலையின்மேல் உயர்த்தும். என் வாழ்க்கையை, வேலையை, ஊழியத்தை, எதிர்காலத்தை உம் பரிபூரண சித்தத்தின்படி நிலைப்படுத்தும். உம் சமுகம் எப்போதும் என்னை சூழ்ந்திருக்கட்டும். நான் செல்லுமிடத்தில் எல்லாம் நீர் என்னோடிருக்கிறீர் என்பதை அறிந்து தைரியமாய் வாழ உதவும். உம் ஆசீர்வாதம் என் குடும்பத்தில் தலைமுறை தலைமுறைக்கும் இருப்பதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.