தேவன், "நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்" (ஏசாயா 46:13) என்று வாக்குப்பண்ணுகிறார். ஆம், இயேசுவே இரட்சகர். நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்கிறவர் என்பதே இயேசு என்ற பெயரின் அர்த்தமாகும் (மத்தேயு 1:21). இயேசு என்பதைத் தவிர வேறு எந்த நாமமும் பூமியில் மக்களை இரட்சிக்கும்படி கொடுக்கப்படவில்லை. இயேசு என்ற நாமத்தினால் மாத்திரமே, இயேசுவால் மாத்திரமே நாம் பாவத்திலிருந்து விடுபட, இரட்சிக்கப்பட முடியும். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது (அப்போஸ்தலர் 4:12). நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படி இரட்சித்தார் (தீத்து 3:5). அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
இன்றும் நீங்கள் அவரிடம் திரும்பி, "ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும்," என்று கூறலாம். நாம் யாரும் பரிபூரணரல்லர். எந்த நேரமும் இயேசுவின் மூலமாய் அவருடைய கிருபாசனத்திற்கு அண்டையில் நம்மால் செல்ல இயலும். நாம் தேவனிடம் விசுவாசத்தோடு வரும்போது நம்மை அழிந்துபோக அனுமதிக்காமல் நம் பாவங்களை மன்னித்து நித்திய ஜீவனை அளிக்கும் அளவுக்கு நம்மேல் அன்புகூர்ந்தார் என்று வேதம் கூறுகிறது (யோவான் 3:16,17). அவர் நம்மை நியாயந்தீர்க்கவோ, கண்டிக்கவோ, தூர எறிந்துபோடவோ மாட்டார். அவர் இரக்கமாயிருப்பார்; நம் பாவங்களை அகற்றுவார்; நம்மை மன்னிப்பார். தேவனுடைய அன்புக்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். இயேசுவே, நான் உன்னை இரட்சிக்கவந்தேன் என்று கூறுகிறார் (யோவான் 12:47).
இயேசு, ஒருமுறை அவரைப் பார்க்கவிரும்பிய, குள்ளமாக இருந்ததினால் மரத்தில் மறைந்திருந்த பாவியை தேடிச் சென்றார். அவன் அங்கே இருப்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இயேசு அவனைக் கண்டுபிடித்தார். அவன் பெயர் சகேயு. அவர்கள் அதற்கு முன்பு ஒருமுறை கூட சந்தித்திராவிட்டாலும் இயேசு அவனை பெயர் சொல்லி அழைத்தார். அவன் எவ்வளவு அதிர்ச்சியடைந்திருப்பான் பாருங்கள்! தேவன் உங்கள் பெயரை அறிந்திருக்கிறார். அவன் பரிதானம் வாங்கியதாலும், மக்களை துன்புறுத்தியதாலும் மற்றவர்கள் அவனை "பாவி, பாவி, பாவி" என்று அழைத்தனர். ஆனால் இயேசு அவனை பெயர் சொல்லி அழைத்து, "இன்று நான் உன் வீட்டுக்கு வருகிறேன்," என்று கூறினார். சகேயு அவரை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டான். இன்றைக்கு நீங்களும் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாய், ஆண்டவர் இயேசுவை சந்தோஷத்துடன் உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும். அவர் உங்களுக்கு இரட்சிப்பையும் தமது மகிமையையும் அளிப்பார். நீங்கள் கர்த்தருக்கு முன்பு வரும்போது அவர் தமது பரிசுத்தத்தையும் மகிமையையும் தருவார் என்று வேதம் கூறுகிறது (1 நாளாகமம் 16:29). தேவன்தாமே இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்குத் தருவாராக.
ஜெபம்:
ஆண்டவர் இயேசுவே, இரட்சிப்பையும் மகிமையையும் குறித்து அன்போடு நீர் அளித்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் பரிபூரணமானவன்(ள்) அல்ல; உம் இரக்கம் எனக்குத் தேவை என்று அறிக்கை பண்ணுகிறேன். என் கிரியைகளினால் அல்லாமல் உமது கிருபையால் என்னை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, தயவாய் என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னியும். இன்றைக்கு என்னை கழுவி சுத்திகரியும். என்னை பெயர்சொல்லி அழைக்கிறதற்காகவும் நேசிக்கிறதற்காகவும் உமக்கு நன்றி. தயவாய் என் உள்ளத்திற்குள் வந்து உம் சந்தோஷத்தால் என்னை நிரப்பும். உம் இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு அருளிச்செய்து, உமது பரிசுத்தத்தை எனக்கு அணிவித்தருளும். என் கடந்த காலத்தைக் காட்டிலும் உம் இரக்கம் உரக்கப் பேசுவதாக. நீர் அருளும் நித்திய ஜீவனாகிய ஈவை இன்றைக்கு ஆவலுள்ள இருதயத்துடன் பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


