அன்பானவர்களே, தேவன் இன்றைக்கு அருமையான, "என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்" (ஏசாயா 32:18) என்ற வாக்குத்தத்தத்தை உங்களுக்குத் தந்திருக்கிறார். தம் பிள்ளைகளுக்கு எவ்வளவு ஆசீர்வாதமான வாழ்க்கையை தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார்! இந்த உலகில் ஒவ்வொருவரும் சமாதானத்திற்காக ஏங்குகிறார்கள்; ஆனாலும், கிறிஸ்துவுக்குள் மாத்திரமே உண்மையான சமாதானத்தை காண முடியும். குடும்பங்களிலிருந்து சமாதானத்தை, பாவம், வியாதி, ஒடுக்குதல், குழப்பம் வழியாக திருடிக்கொள்ள பிசாசு முயற்சிக்கிறான். ஆனால், தேவனுடைய வார்த்தை, அவரை உறுதியாய் நம்புகிறவர்களின் இருதயம் பூரண சமாதானத்தை பெறும் என்று கூறுகிறது. கர்த்தர் தம் ஜனங்களை பசும்புல்வெளிக்கு, அமர்ந்த தண்ணீர்களண்டைக்கு வழிநடத்தி, இளைப்பாறுதலையும் திருப்தியையும் தருகிறார். பவுல், "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" (பிலிப்பியர் 4:11) என்று கூறுகிறான். தேவ பிள்ளைகள், சமாதானத்தை மட்டுமல்ல, நாள்தோறும் அவருடைய ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். 

அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள சியாட்டிலில் ஒரு குடும்பத்தை நாங்கள் பார்க்கச்சென்றபோது, இந்த வாக்குத்தத்தம் அவர்கள் வாழ்வில் நிறைவேறியிருந்ததைக் கண்டோம். தினந்தோறும் இரவு அவர்கள் குடும்ப ஜெபம் செய்யும்போது, பெற்றோர், கிட்டார் கருவியையும், ஒரு மகன் பியானோவையும், இன்னொருவன் டிரம்ஸையும் வாசிப்பார்கள். அவர்கள் இணைந்து ஆண்டவரை தொழுதுகொள்ளும்போது, சந்தோஷமும் ஒருமனமும் காணப்படும்; பரலோகம் அந்த இடத்தில் இறங்கியதுபோன்று அவர்கள் உணர்வார்கள். ஜெப வேளையில் தேவன் அவர்களிடம், "என் பிள்ளைகளே, நான் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறேன்.ஆகவேதான் சமாதானத்தை தந்திருக்கிறேன்," என்று கூறினார். மெய்யாகவே, அவர்கள் பாதுகாப்பான, அமைதியான இடத்தில் குடியிருந்தார்கள். ஒற்றுமையான குடும்ப ஜெபம், தேவனை குடும்பத்தின் தலைவராக கனப்படுத்துதல் என்று அந்த இரகசியம் எளிமையானது. குடும்பத்தினர் இயேசுவை தங்கள் வீட்டுக்குள் அழைக்கும்போது, அவர் எல்லா மூலைகளையும் தம் சமாதானத்தினால், பாதுகாப்பினால், இளைப்பாறுதலினால் நிறைக்கிறார்.

அன்பானவர்களே, இன்றைக்கு சமாதானம் உங்கள் வாழ்வில் குறைவுபட்டிருந்தால், குடும்பமாய் ஆண்டவரிடம் வாருங்கள். இயேசு, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28) என்று அழைக்கிறார். உங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களை கூடி வரச்செய்து ஜெபியுங்கள். தேவன், உங்கள் வீட்டைச் சுற்றிலும் அக்கினி மதில் எழுப்பி, உங்கள் எல்லைகளை சமாதானத்தால் ஆசீர்வதிப்பார். எல்லா தீங்கிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார். தேவ சமாதானம் உங்களை வீட்டை நிரப்பும்படி குடும்பமாய் இணைந்து ஜெபியுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் தருவதாய் நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வீட்டின்மேல் பாதுகாக்கும் உம் கரத்தை வைத்து, அதை சுகமான தாபரமாக்குவீராக. ஒரு தீய சக்தியும் எங்களைத் தொடாதபடிக்கு, எங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருப்பீராக. எங்கள் குடும்பத்தை உம்முடைய பிரசன்னத்தால் நிரப்பி, சந்தோஷத்தையும் இளைப்பாறுதலையும் ஒற்றுமையையும் தந்து எங்களை ஆசீர்வதித்தருளும். இயேசுதாமே எப்போதும் எங்கள் குடும்பத்தின் இருக்கவேண்டுமென்று அவரின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.