எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (எரேமியா 29:13) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். எவ்வளவு மகிமையான நிச்சயம்! தேவன், நமக்கு தம்மை மறைத்துக்கொள்வதில்லை. அவர் எப்போதுமே சமீபமாயிருக்கிறார். ஆனாலும், தம்மை நாம், தற்செயலாக அல்ல; ஆனால், முழு மனதுடன் தேடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரை முழு இருதயத்துடனும் தேடுவது என்பதற்கு நம் முழு கவனத்தையும், முழு அன்பையும், முழு சக்தியையும், முழு நேரத்தையும் பயன்படுத்துவது என்பது அர்த்தம். வேதம், "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10) என்று கூறுகிறது. நம் வாழ்க்கை தேவனை தேடுவதை மையமாக கொண்டிருக்குமானால், அவர் ஆவிக்குரிய பிரகாரமாகவும் உலகப் பிரகாரமாகவும் நமக்குத் தேவையானவற்றை அருளிச்செய்வார். உண்மையாய் அவரை தேடுகிறவர்கள்மேல் அவரது ஆசீர்வாதம் நிரம்பி வழியும்.
நம் ஆண்டவர் இயேசுதாமே இதற்கு பூரண மாதிரியை உண்டாக்கியிருக்கிறார். வேதத்தில், "அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்" (மாற்கு 1:35) என்று வாசிக்கிறோம். அவர் இரவு முழுவதும் ஜெபித்ததையும் பார்க்கிறோம் (லூக்கா 6:12). முழு நாளும் ஊழியம் செய்த பிறகு ஜெபிக்கிறதற்காக மலையின்மேல் ஏறினார் என்றும் பார்க்கிறோம் (மத்தேயு 14:23). இயேசு இடைவிடாமல் பிதாவின் சமுகத்தை தேடினார். எவ்வளவு வேலை செய்தாலும், களைப்புற்றாலும் ஜெபத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று இது காட்டுகிறது. தாவீது இன்னொரு மாதிரியாய் இருக்கிறான். "தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது," (சங்கீதம் 63:1) என்று அவன் முறையிடுகிறான். அவன் காலையிலும் மாலையிலும் பகற்பொழுதிலும் ஜெபித்தான் (சங்கீதம் 55:17). கர்த்தரை உண்மையாய்த் தேடினதினிமித்தம் அவன், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1) என்று தைரியமாய் அறிக்கையிடுகிறான். தேவனை தேடுகிறதை அவன் ஒருபோதும் நிறுத்தாததால் அவன் வாழ்க்கை முழுவதுமே ஆசீர்வாதமாக விளங்கியது.
அன்பான தேவ பிள்ளையே, இதுவே, ஜெயமும் ஆசீர்வாதமுமான வாழ்க்கையின் இரகசியம். நாம் ஆண்டவரை நம் முழு இருதயத்தோடும் தேடும்போது, அவர் நமக்கு மேய்ப்பராகிறார். தாவீதை வழிநடத்தியதுபோல, அவனுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்ததுபோல, அவனை பாதுகாத்ததுபோல, நம்மையும் அவர் பரிபூரணமாய் ஆசீர்வதிப்பார். முழு இருதயத்தோடு தேடுவது என்பதற்கு, நம் கவனத்தை திரும்பும் காரியங்களை விட்டு கண்களை விலக்கி, நம் சித்தத்தை ஆண்டவருக்கு அர்ப்பணித்து, ஜெபிப்பதற்கும் அவரது வார்த்தைகளை தியானிப்பதற்கும் நேரம் ஒதுக்குது என்பதே பொருள். எவ்வளவு அதிகமாய் அவரைத் தேடுகிறோமோ, அவ்வளவு அதிகமாய் அவரை கண்டுபிடிப்போம்; அந்த அளவு அதிகமாய் அவரது பிரசன்னம் நம் வாழ்வை மறுரூபமாக்கும். நம்மை வெறுமையாக விட்டுப்போகும் உலக காரியங்களுக்கு ஒரு தருணத்தையும் வீணாக்காதிருப்போமாக. மாறாக, பரம பொக்கிஷமான கிறிஸ்துவை நாளுக்குநாள் ஆழமாக அறிந்துகொள்வதை தொடருவோம். உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடினீர்களாகில், உங்களுக்கு ஒரு நன்மையுங்குறைவுபடாது.
ஜெபம்:
அருமையான பரம தகப்பனே, உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். முழு இருதயத்தோடும் உம்மை தேடினால் நிச்சயமாகவே உம்மை கண்டு பிடிக்க முடியும் என்ற வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். முழு கவனத்துடனும் உண்மையான தியானத்துடனும் உம்மை தேடுவதற்கு எனக்கு உதவி செய்யும். உம்மை அனுதினமும் தேடுவதற்கு தடையாக கவனத்தை சிதறச் செய்யும் எல்லாவற்றையும் அகற்றியருளும். அதிகாலையிலும் பின்னிரவிலும் உம்மை தேடிய இயேசுவைப்போல ஜெபிக்க எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். எல்லாவற்றை காட்டிலும் உம்மீது தாகமாயிருந்த தாவீதின் ஆவியினால் என்னை நிரப்பும். என் வாழ்க்கை, நீர் மேய்ப்பராகவும் எனக்கு வேண்டியவற்றை அருளுகிறவராகவும் விளங்குவதற்கு சாட்சியாக திகழட்டும். உம்மை நான் தேடுவதால், உம்முடைய சமாதானத்தையும், அருட்கொடையையும், பாதுகாப்பையும் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். உம்முடைய பரிபூரண சித்தத்திற்கும் திரளான ஐசுவரியத்துக்கும் நேராக என்னை நடத்தவேண்டுமென்று இயேசு கிறிஸ்துவில் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.