அன்பானவர்களே, இன்று காலையில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இன்றைய வாக்குத்தத்த வசனம், "என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:14) என்று கூறுகிறது. இன்று நீங்கள் இயேசுவின் நாமத்தினால் கர்த்தரிடம் கேட்கும்போது, அவர் அதைச் செய்திடுவார். மகிழ்ச்சியாயிருங்கள். உங்களுக்கு அநேக விண்ணப்பங்கள், விருப்பங்கள் இருக்கலாம். ஆனால், இன்று நீங்கள் அவரது நாமத்தில், அவரது சித்தத்தின்படி கேட்பதால், தம் மகிமைக்கென தேவன் அவற்றை அருளிச்செய்வார்.
கர்த்தரிடம் கேட்ட ஒரு மனுஷனை வேதத்தில் காண்கிறோம். தேவன், சாலொமோனிடம், "நீ விரும்புகிறதைக் கேள்; நான் கொடுப்பேன்," என்று கூறினார் (1 இராஜாக்கள்). தேவ ஜனங்களை ஆள்வதற்கான ஞானத்தையும் விவேகத்தையும் சாலொமோன் கேட்டான். அவன் ஐசுவரியத்தை, நீடித்த ஆயுளை கேட்கவில்லை. புகழையோ, கனத்தையோ கேட்கவில்லை. அவன் சத்துருக்களை தேவன் தோற்கடிக்கவேண்டும் என்று கேட்கவில்லை. தேவ ஜனங்களை ஆளும்படி, ஏதோ ஒருவிதத்தில் அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக, ஞானத்தை தேவனிடம் கேட்டான். அவன் கேட்டதை தேவன் அருளிச்செய்தார்.
வேதத்தில் நாம் சாலொமோனின் ஞானத்தைக் குறித்துப் பார்க்கிறோம். தலைமுறை தலைமுறையாக உரைக்கப்படும் சாலொமோனின் கனத்தையும் காண்கிறோம். தேசமெங்கும் அவனைப்போல ஒரு ராஜா இருந்ததில்லை என்பதையும் பார்க்கிறோம். அவ்வண்ணமே, தம் ஜனங்களை ஆசீர்வதிக்க அவர் பிரியமாயிருக்கிறபடியால், அவரது சித்தத்தின்படி கேட்கும் உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பார். உங்கள் நன்மைக்காக மாத்திரம், உங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்காதிருங்கள். மாறாக, "ஆண்டவரே, பிறருக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி, உம் சித்தத்தின்படி இதை எனக்கு அருளிச்செய்யும்," என்று ஜெபியுங்கள். உம் நாமத்தை அவர்கள் விசுவாசிக்கும்படி, நீர் எனக்கு கொடுப்பது சாட்சியாக அமைவதாக. உம் நன்மைக்கு நான் சாட்சியாக வாழ்வேனாக என்று கூறுங்கள். "ஆண்டவரே, இன்றைக்கு நீர் என்னை ஆசீர்வதிக்கும்போது, பிறருக்கு நான் ஆசீர்வாதமாக, எனக்காக அல்ல, உம் மகிமைக்காக விளங்கும்படி செய்தருளும்," என்று ஜெபிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் நாமத்தினாலே எவற்றையெல்லாம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோமோ அவற்றையெல்லாம் உம் சித்தத்தின்படி செய்வதாக வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பிறரும் ஆசீர்வாதம் பெற்று, உம் நாமத்தை மகிமைப்படுத்த விரும்பும் இருதயத்தோடு கேட்பதற்கு எங்களுக்குக் கற்றுக்கொடுத்தருளும். உம் பிள்ளைகளை நல்ல வேலை, ஞானம், நற்சுகம், நல்ல இல்லறம், அவர்களுக்குத் தேவையான பெலனையும் அளித்து ஆசீர்வதித்தருளும். அவர்கள் விண்ணப்பங்களை உம் பரிபூரண சித்தத்தின்படி அருளிச்செய்து, உம் நன்மைக்கு அவர்கள் சாட்சியாக வாழப்பண்ணும். நீர் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் பிறருக்கு ஆசீர்வாதமாக அமைவதாக. அவர்களை வாழ்க்கையில் பிரகாசிக்கப்பண்ணி, உம் நாமத்திற்கு மகிமை கொண்டு வரும்படி செய்யும். ஜெபத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு பதிலும் உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


