எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். வேதம், "சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்" (சங்கீதம் 4:8) என்று கூறுகிறது. அருமையான பிள்ளையே, இந்த உலகத்தில் நமக்கு சமாதானம் வேண்டும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு சமாதானப் பிரபுவாக வந்தார். வேதம், "கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்" (சங்கீதம் 29:11) என்று கூறுகிறது. அருமையான தேவ பிள்ளையே, நீங்கள் தேவனுடைய வார்த்தையை அப்படி வாசிக்கவேண்டும். கர்த்தர், தம் ஜனத்திற்கு பெலன்கொடுப்பார். ஆண்டவர் தம் ஜனங்களை சமாதானத்தினால் ஆசீர்வதிப்பார். இந்த சமாதானம் எப்போது நம் வாழ்வில் வரும்? இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது வரும்.
இப்போதே ஆண்டவரிடம், "அருமையான இயேசு கிறிஸ்துவே, என் வாழ்வினுள் வாரும். இந்த உலகத்தின் எல்லா பாவ காரியங்களிலுமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். உம் இரட்சிப்பை எனக்குத் தந்தருளும். தகப்பனே, என் பாவங்களை மன்னியும். மன்னித்து உம் பிள்ளையாக மாற்றும்," என்று விண்ணப்பம் செய்வீர்களா? இப்போதே அப்படி உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திடுங்கள். ஆண்டவர் உங்கள் கூப்பிடுதலைக் கேட்பார். அவர் உங்களைக் குணமாக்குவார்; மன்னிப்பார்; எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தைத் தருவார். நம் தேவன் எவ்வளவு பெரியவர்! வேதத்தில் தாவீதைக் குறித்து கூறப்பட்டுள்ளது (1 சாமுவேல் 30ம் அதிகாரம்). அவன் மிகவும் உபத்திரவமான வேளையை கடந்து சென்றான். அவனை ஆதரிக்க யாருமற்ற நேரத்தில், உள்ளத்துக்குள் கலங்கினான். அப்போது, "தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்." (1 சாமுவேல் 30:6) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
உங்கள் உபத்திரவங்களின் மத்தியில், ஆண்டவருக்குள் உங்களைப் பெலப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது எல்லா சமாதானமும் சந்தோஷமும் கிடைக்கும். ஆபிரகாம் இந்த தெய்வீக சமாதானத்தை தன் வாழ்வில் பெற்றுக்கொண்டிருந்ததை வேதத்தில் வாசிக்கிறோம் (எபிரெயர் 11:8-12). வேதம், "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசாயா 26:3) என்று கூறுகிறது. அன்பானவர்களே, சமாதானத்தைக் குலைக்கும் பல காரியங்களின் வழியாய் நீங்கள் கடந்து செல்லலாம். ஆனாலும் வேதம், நம் நம்பிக்கை தேவனுக்குள் இருக்கிறது என்று கூறுகிறது (ரோமர் 16:20). நம் நம்பிக்கை ஆண்டவர்மேல் இருக்கும்போது, சமாதானத்தின் தேவன் சாத்தானை சீக்கிரத்தில் உங்கள் கால்களின்கீழ் நசுக்கிப்போடுவார். நீங்கள் இப்போது எந்த உபத்திரவத்தை சந்தித்துக்கொண்டிருந்தாலும், உங்கள் சமாதானத்தையெல்லாம் இழந்துவிட்டாலும், இப்போதே தம் தெய்வீக சமாதானத்தினால் கர்த்தர் உங்களை நிரப்புவார்.
ஜெபம்:
அருமையான ஆண்டவர் இயேசுவே, இன்று உம் முன்னே வந்து, எல்லாப் புத்திக்கும் மேலான உம் பரிபூரண சமாதானத்தால் என்னை நிரப்பவேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, தயவாய் என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்தருளும்; என்னை உம் பிள்ளையாக மாற்றும். உமக்குள் பெலப்படவும், என் மனம் எப்போதும் உம்மில் நிலைத்திருக்கவும், தொடர்ந்து உம் பரிபூரண சமாதானத்தில் நிற்கவும் எனக்கு உதவி செய்யும். உம் வார்த்தையில் நீர் வாக்குக்கொடுத்துள்ளபடி, சத்துருவின் சகல கிரியையையும் என் காலின் கீழ் நசுக்கி, உம் சந்தோஷத்தாலும் பாதுகாப்பினாலும் என் வாழ்க்கை நிரம்பும்படி செய்யும். இன்றிலிருந்து உம் இயற்கைப்பாற்பட்ட பெலன் எனக்குள் எழும்பி, அனுதினமும் என்னை நடத்துவதாக, ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


