அன்பானவர்களே, இன்றைக்கு, "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13) என்ற அழகான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய நம்மால் முடியும். முந்தின வசனத்தில் பவுல், "தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்" என்று கூறுகிறான். வேறொருவிதத்தில் கூறுவதானால், அவன் எல்லா சூழ்நிலைகளிலும் திருப்தியாயிருக்கக் கற்றுக்கொண்டிருந்தான். 11ம் வசனத்தில் அவன், "என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்று கூறுகிறான். எந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றையும் செய்வதற்கு கர்த்தர் தம் பெலனை கொடுக்கிறார்.

சாலொமோன், "மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்" என்று கூறுகிறான். (நீதிமொழிகள் 30:8,9). சிலர் எப்போதும் பேராசையுடன் இருப்பார்கள். அவர்களிடம் திரளானவை இருக்கும். ஆனால், "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டால், அவர்கள், "இன்னும் அதிகமாய் வேண்டும்," என்பார்கள். ஆம், தாவீதுக்கு அநேக மனைவியர் இருந்தனர். ஆனாலும், அவன் திருப்தியடையவில்லை. இன்னொரு மனுஷனின் மனைவியான பத்சேபாளின் அழகைக் கண்டு, அவளுடன் உறவு கொண்டான். அதற்காக, அவன் பொய் கூறினான்; அவள் கணவனைக் கொன்றான். அது இன்னும் அதிகமாய் அவனை பாவத்திற்குள் தள்ளியது.

அன்பானவர்களே, நமக்கும் அநேக காரியங்கள் வேண்டும் என்று ஆசை இருக்கலாம். இன்றே தேவனிடம் மன்னிப்பு கேட்போம். "தேவனே, என் மாம்ச ஆசைகளை எடுத்துப்போடும். என்னை உம் ஆவியால், பரிசுத்தத்தின் ஆவியால் நிரப்பிடும். போதும் என்ற மனதைக் கொடுத்தருளும்," என்று கேட்போம். மனுஷனால் இது கூடாதது. ஆனால், தேவனால் எல்லாமும் கூடும். அதைத்தான் வேதம், "மாம்சசிந்தை மரணம்" என்று கூறுகிறது. இன்றும் நாம் நம் சிந்தையை ஆளுகை செய்யும்படி தேவனிடம் கேட்போம். மாம்சத்தின்படி நடவாதிருப்போம். அவரது ஆவியின்படி நடப்பதற்கு நமக்குப் பெலன் தரவேண்டுமென்று தேவனிடம் கேட்போம். அப்போது அவர் போதுமென்ற உள்ளத்தை நமக்குக் கொடுப்பார். தேவனின் உதவியால் நம்மால் எதையும் செய்ய முடியும். ஆண்டவர் நம் சிந்தையை தம் ஆவியால் ஆளுகை செய்வார் என்றும், நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்யும்படி வைப்பார் என்றும் இன்றைக்கு அறிந்திருக்கிறேன்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் ஆவியின்படி நடப்பதற்கு உம் பிள்ளைகளுக்கு  உதவிடும். உலகப்பிரகாரமான, மாம்சபிரகாரமான விருப்பங்களை, பேராசையை, கண்களின் இச்சையை, ஜீவனத்தின் பெருமையை அகற்றிப்போடும். அவர்கள் மனங்களை ஆளுகை செய்து, எல்லா சோதனைகளையும் அகற்றும். உம்முடைய சத்தமல்லாத யாவும் இயேசுவின் நாமத்தில் அவர்களிடமிருந்து விலகிப் போகட்டும். அவர்களை உம் பரிசுத்த ஆவியால் நிறைத்து, போதுமென்ற உள்ளத்தைக் கொடும். எல்லா குடும்பத்திலுள்ள ஆண்களையும் பெண்களையும் உம் ஆவியால் வழிநடத்தி, அவர்கள் வீட்டில் சமாதானம், சந்தோஷம், ஒற்றுமை உண்டாகும்படி செய்யும். உலகப் பிரகாரமான காரியங்கள்மேல் ஆசை வைக்காமல், உம் நன்மையினால் அவர்கள் திருப்தியாகும்படி உதவி செய்யும். அவர்கள் கரங்களை பிடித்து, வழிநடத்தும். எப்போதும் உம் சத்தத்தையே கேட்பதற்கு உதவிடும். அவர்கள், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று கூறும்படி இயேசுவின் நாமத்தினால் செய்தருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன், ஆமென்.