அன்பானவர்களே, "அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" (லூக்கா 2:7) என்று வேதம் கூறுகிறது. ஆம், மரியாள் அவளுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசன வழிகாட்டலின்படி, முன்பு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டபடியே ஒரு குமாரனை பெற்றெடுத்தாள். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெற்றெடுப்பாள் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது (ஏசாயா 7ம் அதிகாரம்). மனுஷீக அறிவின்படி அதைப் புரிந்துகொள்ள முடியாது. தேவன் உங்கள் வாழ்வில், புதிய பிறப்பை கட்டளையிடும்போது கூடாதவற்றை கூடச் செய்வார். அவரே தேவன். தேவன் தீர்மானித்து உரைத்தது அப்படியே கன்னிமரியாளின் வாழ்வில் நடந்தது. "இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக..." (ரோமர் 4:17) என்று வேதம் கூறுகிறது. எனக்கு அன்பானவர்களே, எதில் நீங்கள் குறைவுபட்டாலும் உங்கள் வாழ்வில் அந்த ஆசீர்வாதம் உண்டாகும்படி அழைப்பதற்கு தேவனால் முடியும். மரியாளுக்கு எல்லாவற்றையும் நடப்பித்தவர் உங்களோடு இருக்கிறார்.

மரியாள், இயற்கையின்படி ஒருபோதும் கர்ப்பந்தரித்திருக்க முடியாது. ஆனால், தேவன் உரைத்ததும், அவரது வார்த்தை ஜீவனை உருவாக்கி, பிறக்க வைத்தது. அவன் சொன்னவிதமே, இரட்சகராகிய இயேசு என்னும் குமாரன் பிறந்தார். தேவன் கூறுகிறவை உங்கள் வாழ்வில் நடக்கும். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உங்களுக்கும் இந்தப் புதிய ஆசீர்வாதம் கிடைக்கும். இயேசுவாகிய இரட்சகர் உங்களுக்குள் பிறப்பார்; அவர் உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பார். இந்த ஆசீர்வாதத்திற்காகவே மரியாள் தன்னையே தேவனுக்குக் கொடுத்தாள்; இயேசு அவளிடம் பிறந்தார். நீங்கள் இயேசுவுக்கு உங்களைக் கொடுக்கும்போது, அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார்; உங்களில் இரட்சகர் பிறப்பார். வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி, இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் (மத்தேயு 1:23).

மூன்றாவதாக, அவள் அபிஷேகம்பண்ணப்பட்டவரை, மேசியாவை பெற்றாள் (யோவான் 4:25; மத்தேயு 26:63). இயேசு, "ஆம், நான் கிறிஸ்துதான். அபிஷேகம்பண்ணப்பட்டவர்," என்று கூறினார். நீங்களும்கூட அபிஷேகம்பண்ணப்பட்டவரை கொண்டிருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் மகிழலாம். அபிஷேகம் பண்ணப்படும்போது, நீங்களும் வல்லமையடைந்து, சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கலாம்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டலாம், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறலாம் (ஏசாயா 61:1). தேவனுடைய அபிஷேகத்தை நீங்கள் பெற்றிருக்கலாம். மரியாள் கர்ப்பந்தரித்து, இம்மானுவேலாகிய இரட்சகரை, அபிஷேகம்பண்ணப்பட்டவரை பெற்றெடுத்தாள். நீங்கள் இயேசுவுக்கு உங்களையே தந்திருப்பதால் தேவன் உங்களோடிருப்பார்; இயேசு உங்களுக்குள்ளும் உங்களோடும் இருப்பார்.

ஜெபம்:
பரம தகப்பனே, ஜீவனுள்ள உம் வார்த்தைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மரியாளுக்குள் ஜீவனை அளித்ததுபோல, எனக்குள்ளும் புது ஜீவனை அளிப்பீராக. ஆண்டவரே, அருமையான இரட்சகரும் மீட்பருமான இயேசு என் வாழ்வில் பிறப்பாராக. மனுஷீக தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட அவருடைய மகிமையும் அற்புதத்தைச் செய்யும் வல்லமையும் என் வாழ்வில் விளங்குவதாக. ஆண்டவரே, என் பாவங்களை மன்னித்து, என் இருதயத்துக்குள் இம்மானுவேலாக வாசம் பண்ணுவீராக. என்னை உம் அபிஷேகத்தினால் நிரப்பும்; மற்றவர்களைக் குணப்படுத்தும்படியும் உம் வசனத்தை பிரசித்தப்படுத்தும்படியும் என்னை பெலப்படுத்தும்; நீர் விரும்பும்வண்ணம் ஒருவரையொருவர் நேசிக்கும்படி செய்யும். என் வாழ்க்கை உம் மகிமையையும் கிருபையையும் வெளிப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.