அன்பானவர்களே, தேவன், "இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்" (ஏசாயா 60:18) என்று வாக்குப்பண்ணுகிறார். கொடுமைக்கும் அழிவுக்கும் தேவன் உங்களை நீங்கலாக்கி, இரட்சிப்பினால் உங்களைக் காத்துக்கொண்டு, உங்களை துதியின் ஆவியினால் நிரப்புவார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவம் கழுவப்பட்டு கிடைக்கும் இரட்சிப்பென்பது தேவ பிள்ளைகளாகிய நமக்கு  பெரிய ஈவாகும். தேவனுடைய பிள்ளையாக வாழ்வதென்பதே துதிக்கத்தக்கது.

நம்முடைய இரட்சிப்புக்காகவும், எதிர்கால ஆசீர்வாதத்திற்காகவும் தேவனை நம்புவதும் துதிக்கு உரியது. நம்மிடம் எதுவுமில்லாதிருக்கையில், அழிவும் கொடுமையும் சூழ்ந்திருக்கும்போது, "ஆண்டவரே, நீரே என்னை நடத்திச் செல்வீர் என்று நம்புகிறேன். உம்முடைய தயை என் முன்பாக கடந்துபோகப்பண்ணும்," என்று கூறுவோமானால், அதுவே துதியாகும். யோசபாத், எதிரிகள் அவனுக்கு விரோதமாக வரும்போது தேவன்மேல் நம்பிக்கை வைத்தான். எதிரிகளை அவன் கையில் ஒப்புக்கொடுப்பதாக தேவன், தீர்க்கதரிசி மூலமாக பேசியபோது, இராணுவத்தை ஒழுங்கு பண்ணுவதற்கு முன்பு, துதிக்கிற குழுவினரை முதலாவதாக ஆயத்தம்பண்ணினான். அவர்கள், "கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளது" என்று பாடினார்கள். தேவன்தாமே யுத்தம்செய்தார். எதிரிகள் தங்களுக்குள் தாங்களே போரிட்டார்கள். பட்டயம் உயர்த்தப்படாமலே தேவன் ஜெயத்தைக் கொடுத்தார். அதுதான் இரட்சிப்பு.

இரட்சிப்பு நம்முடைய சுய கிரியைகளினாலே சம்பாதிக்கக்கூடியதல்ல. அது இயேசுவால் சிலுவையில் பெறப்பட்டுவிட்டது. தேவன், இயேசு என்ற மனுஷனாக, பரிசுத்த தேவனாக, மனுஷனின் வித்தாக அல்லாமல், தேவனின் வித்தாக வந்து தம்மையே பரிபூரண பலியாக சமர்ப்பித்தார். "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரெயர் 9:22) என்று வேதம் கூறுகிறது. ஆகவே மனுக்குலம் மன்னிப்பை பெறும்படியாக பரிசுத்தமான இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது. இன்றைக்கு நாம் மனந்திரும்பி, நம்முடைய பாவங்களை கழுவி, நம்மை மன்னிக்கும்படி கேட்போம். அவருடைய இரத்தம் இயற்கைக்கப்பாற்பட்டவிதத்தில் அதிசயவிதமாக நம்மை கழுவும். அவர் பாவத்தை அகற்றுகிறார்; நாம் திரும்பி விடக்கூடாது என்று பாவத்தின் சுபாவத்தையும் அகற்றுகிறார். உலகம், பாவம் செய்துவிட்டு திரும்பவும் மன்னிப்பை கேட்கலாம் என்று கூறும். ஆனால், அது இரட்சிப்பு அல்ல. இயேசு நம்மை நித்திய ஜீவனுக்கென்று சுத்திகரிக்கிறார்; அவரைப் பின்பற்றி நீதியாக வாழவேண்டும். நீதியாக வாழ்வது தேவனுக்கு துதியை கொண்டு வரும். இந்த கிருபையை அவர் இன்றைக்கு தருகிறார்.

பங்கஜ் டோபா என்ற சகோதரரின் அருமையான சாட்சி. அரசு தேர்வுகள் எழுதுவதற்காக ராஞ்சிக்கு வந்தபோது அவருக்கும் இயேசுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்வுகளில் மீண்டும் மீண்டும் தோல்வி ஏற்பட்டபோது அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். நான்கு வருடங்கள் அந்த நிலை தொடர்ந்தது. முன்பு பாதிக்கப்படாத அவருக்கு வலிப்பும் ஏற்பட ஆரம்பித்தது. மருத்துவர்கள், ஐந்து ஆண்டுகள் மருந்து சாப்பிடவேண்டும் என்றும், எங்கேயும் தனியாக பயணிக்கக்கூடாது என்று கூறினார்கள். இந்தச் சிரமமான நேரத்தில்தான் ராஞ்சியில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம் திறக்கப்பட்டது. நண்பர் ஒருவர் அவரை ஜெப கோபுரத்திற்கும் அங்கு நடைபெறும் வாலிபர் கூட்டத்திற்கும் அழைத்தார். அவர் மனமில்லாமல் சென்றார். ஆனால், பரிசுத்த ஆவியானவர் அவரை வல்லமையாக தொட்டார். அவர் மது அருந்துவதை, தீய நட்புகளை விட்டுவிட்டார். பக்தியுள்ள நண்பர்கள் இருக்குமிடத்தில் இருந்தார். வேதத்தை வாசிக்க ஆரம்பித்தார். 2014ம் ஆண்டு ராஞ்சியில் பெரியதொரு பிரார்த்தனை திருவிழா நடத்த சென்றேன். பங்கஜ் அங்கு தன்னார்வ ஊழியம் செய்தார். நாங்கள் ஜெபித்தபோது, தேவனுடைய சுகமளிக்கும் வல்லமை அவர்மீது வந்தது. வலிப்பு முற்றிலும் குணமானது. மருத்துவர்கள் அவர் குணமாகிவிட்டார் என்பதை பின்னர் உறுதிசெய்தனர். கொல்கத்தாவில் ரயில்வேயில் அரசு வேலையை கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார்.  விரைவிலேயே அரசு வேலையுள்ள மணிஷாவை அவர் திருமணம் செய்தார். அவர்கள் இருவரும் இயேசு அழைக்கிறார் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைந்தனர். ஆறுமாத காலத்திற்குள் மணிஷாவுக்கு கொல்கத்தாவுக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. தேவன் அழகிய மகளைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார். ஆன் என்ற அந்த மகளை இளம் பங்காளராக சேர்த்தார்கள். எட்டு ஆண்டுகள் அவர்கள் வாடகை வீட்டிலேயே இருந்தனர். ஒருநாள், பங்கஜ், கர்த்தருடைய வீட்டைக் கட்டுங்கள்; அவர் உங்கள் வீட்டைக் கட்டுவார் என்று கூறியதைக் கேட்டார். இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம் கட்டுவதற்கு அவர்கள் உண்மையுடன் காணிக்கை கொடுத்தார்கள். 2023ம் ஆண்டு தேவன் அவர்கள் விசுவாசத்தைக் கனப்படுத்தி கொல்கத்தாவில் அவர்களுக்கு சொந்த வீட்டைக் கொடுத்து ஆசீர்வதித்தார். இன்று, ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். எவ்வளவு சந்தோஷம்! நீங்கள் தேவனுக்குக் கொடுக்கும்போது அவர் உங்கள் வாழ்க்கையையும் கட்டுவார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய பிள்ளையாகிய எனக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் இரட்சிப்பாகிய ஈவை கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை அழிவுக்கு விலக்கிப் பாதுகாத்து, என் இருதயத்தை துதியினால் நிரப்பியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, நீர் சிலுவையில் செய்த தியாகத்தை நம்புகிறேன். என் வாழ்க்கையை முழுவதும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவும். பாவக் கறைகள் யாவற்றையும் அகற்றும். நீதியாய் வாழ்வதற்கும் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்கும் எனக்கு கிருபையை தந்தருளும். யுத்தங்கள் சூழ்ந்துகொள்ளும்போது, நீர் அளிக்கும் ஜெயத்தை நம்பி, உம்மை துதிக்கும்படி நினைவுப்படுத்தும். "தேவன் நல்லவர். அவர் இரக்கங்கள் என்றென்றைக்குமுள்ளது," என்று என் இருதயம் எப்போதும் அறிக்கைசெய்யும்வண்ணம் உம்மேல் நான் விசுவாசமாயிருக்க உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.