அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே" (அப்போஸ்தலர் 15:11) என்று கூறுகிறது. இரட்சிப்பு, உங்கள் சொந்த முயற்சியால் சம்பாதிக்கக்கூடிய ஒன்றல்ல. அது விலையேறப்பெற்றதும், தேவன் அருளும் கிருபையின் ஈவுமாக இருக்கிறது. வேதம், "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு," என்று தெளிவாகப் போதிக்கிறது (எபேசியர் 2:8). அநேகர் நற்கிரியைகள் மாத்திரமே தங்களை பரலோகத்திற்குக் கொண்டு செல்லும் என்று எண்ணுகிறார்கள். ஒருமுறை கடை ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு சகோதரி, "நாம் நல்ல காரியங்களைச் செய்தால் தேவனுடைய ராஜ்யத்திற்குள் செல்ல முடியாதா?" என்று கேட்டார்கள். நாம் அன்பானவர்களாக, உதாரத்துவமானவர்களாக, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருக்கலாம்; ஆனால், இயேசு கிறிஸ்து இல்லாமல் நம்மால் பரலோகத்திற்குச் செல்ல முடியாது. இரட்சிப்பு, தேவனுடைய கிருபையின் வாயிலாக வருகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இந்த மெய்யான சத்தியத்தை புரிந்துகொண்டவனாய், "நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்," (1 கொரிந்தியர் 15:10) என்று கூறுகிறான். நாம் இருப்பதும், நமக்கு இருக்கும் எல்லாமும் தேவ கிருபையினால் வருவதாகும். நம்மிடம் விசுவாசத்தையே தேவன் கேட்கிறார். விசுவாசமில்லாமல் அவருக்குப் பிரியமாயிருப்பது கூடாது. நான் கல்லூரி படித்தபோது, என் சிநேகிதி, கிறிஸ்தவர்களை, "நீங்கள் எப்போதும் விசுவாசியுங்கள், விசுவாசியுங்கள், விசுவாசியுங்கள் என்று சொல்லுகிறீர்கள். விசுவாசிப்பதற்கு என்ன இருக்கிறது?" என்று கேலி செய்வாள். ஒருநாள் நான் உட்கார்ந்து அவளுக்கு இயேசுவின் அன்பை விளக்கினேன். நான், இயேசு சிலுவையில் தம் ஜீவனைக் கொடுத்து, விலையேறப்பெற்ற தம் இரத்தத்தை நம் பாவங்களுக்காக சிந்தினார். நாம் அவரில் விசுவாசம் வைத்தால், இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வோம். அதற்காகவே நாங்கள், "கர்த்தராகிய இயேசுவை விசுவாசியுங்கள். அப்போது நீங்களும் உங்கள் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்," என்று கூறுகிறோம் என்று சொன்னேன். இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதை நானே கண்டிருக்கிறேன். என் அம்மா ஆண்டவரில் விசுவாசம் கொண்டவர்கள். அவர்கள் விசுவாசத்தின் வாயிலாக, எங்கள் குடும்பமே கிறிஸ்துவை அறிந்துகொண்டது. தேவன் கிருபையாய் அளித்த இரட்சிப்பில் நாங்கள் இன்று மகிழ்ந்திருக்கிறோம்.

என்னுடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்தில், ஒரு வாலிபர் கூட்டத்தில் நடந்த சம்பவத்தை மறக்க இயலாது. ஜெப வேளையில் அநேக இளம் பிள்ளைகள், பெரும்பாலும் பள்ளி மாணவ மாணவியர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். நடப்பது எல்லாவற்றையும் ஒரு பெண் அங்கு நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். மாணவ மாணவியர் ஜெபித்து, ஆராதித்து, தேவனால் தொடப்படுகிறதை கண்டு தன் உள்ளத்தில் அவர்களை கேலி செய்தாள். தலை வெட்டப்பட்ட கோழிகள் அங்குமிங்கும் ஓடுகிறதைப் போல் இருக்கிறது என்று எண்ணி மனதுக்குள் சிரித்தாள்.

ஆனால், தேவ கிருபை அந்தப் பெண்ணையும் அடைந்தது. சடுதியாய் அவளைப் பரிசுத்த ஆவியானவர் தொட்டார். அவள் தேவ பிரசன்னத்தில் களிகூர்ந்தாள்; பின்னர் சாட்சி கூறுவதற்காக மேடைக்கு ஓடிவந்தாள். "நான் இவர்களைக் குறித்து கேலி பேசினேன். ஆனால், ஆண்டவர் இன்றைக்கு என்னை தம் அருமையான பரிசுத்த ஆவியால் நிரப்பினார்," என்று அறிக்கையிட்டாள். அன்றே தேவனுடைய இரட்சிப்பை அனுபவித்தது, அவளது நற்கிரியைகளினால் அல்ல; தேவனுடைய ஆச்சரியமான கிருபையால் அவரது பிள்ளையாக மாறினாள்.

தேவன் கிருபையுள்ளவரும் இரக்கம் நிறைந்தவருமாயிருக்கிறார். தம்மிடம் வருகிற யாரையும் அவர் தள்ளுவதில்லை. ஜனங்கள் அவரது இரட்சிப்பை அலட்சியம் செய்தாலும் அவர் அன்போடு அவர்களை திரும்ப அழைக்கிறார். வேதம், "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?" (எபிரெயர் 2:4) என்று கூறுகிறது. இன்றைக்கு தேவன் இதே அழைப்பை உங்களுக்கும் கொடுக்கிறார். வேதம், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்," என்று கூறுகிறது. நாமே தெரிந்துகொள்ளவேண்டும். நாம் பாவம் அல்லது தேவ கிருபை எதை தெரிந்துகொள்வோம்? இயேசு கிறிஸ்துவின் வாயிலாக வரும் கிருபையை தெரிந்துகொண்டு அவர் இலவசமாக அருளும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, உம்முடைய கிருபையினால் மாத்திரமே என் இரட்சிப்பு வருவதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் மாத்திரமே என்னை பாவத்திலிருந்தும், இருளிலிருந்தும், எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் இரட்சித்து உம்முடைய ஆச்சரியமான ஒளிக்கு வழிநடத்துகிறீர். இயேசு கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசத்தையும் வைக்கவும், அவர் சிலுவையில் செய்து முடித்த கிரியையை நம்பவும் எனக்கு உதவுகிறீர். என் வாழ்க்கையில் உம் கிருபையைச் பெருகச் செய்து, என் குடும்பத்துக்கு இரட்சிப்பை அருளிச்செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.