பிரியமானவர்களே, இன்றைக்கு, "பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்" (லூக்கா 12:32) என்று ஆண்டவர் கூறும் வசனத்தை வாசிப்போம். ஆண்டவர் நமக்குக் கட்டளையிடும் முதல் காரியம், "பயப்படாதே" என்பதாகும். அவர் தம்மை உங்கள் தகப்பனாக, அன்பே உருவான தகப்பனாக வெளிப்படுத்துகிறார். அவரது பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.

அவர் நம்மை அன்புடன், "சிறுமந்தையே" என்று அழைக்கிறார். தேவ பிள்ளைகளாகிய நாம் அவருக்கு ஆடுகளைப்போல இருக்கிறோம். குட்டி ஆடானது மேய்ப்பனை உண்மையாய் பின்தொடர்ந்து செல்லும். அவ்வாறே இயேசு, "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" என்று கூறுகிறார். ஆம், ஆண்டவர் நமக்கு நித்திய ஜீவனை, பரலோக ராஜ்யத்தை தருவதாக வாக்குப்பண்ணுகிறார்.

ஆண்டவர், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு ஒரு நன்மையையும் வழங்காதிருக்கமாட்டார். தம் பிள்ளைகளுக்கு பரலோகத்திலிருந்து நன்மையான ஈவுகளைக் கொடுப்பதற்கு அவர் பிரியமாயிருக்கிறார். லூக்கா 12ம் அதிகாரத்தில் இயேசு, என்னத்தை உண்போம்; என்னத்தைக் குடிப்போம்; என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படக்கூடாது என்று கூறுகிறார். அவரே நமக்கு அருளுகிறவராக இருக்கிறபடியால் உலக காரியங்களைக் குறித்து கலங்குவதற்கு தேவையில்லை. கிறிஸ்து இயேசுவுக்குள் தம் ஐசுவரியத்தின்படியே ஆண்டவர் நம் தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கிறார்.

நாம் முதலாவதாக தேவனை தேடும்போது, இவையெல்லாம் நமக்குக் கூடுதலாகக் கொடுக்கப்படும். ஆகவேதான் இயேசு நம்மிடம் பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்துவைக்கும்படி கூறுகிறார். கீழாக அல்ல; மேலாக நோக்குவோம். தொடர்ந்து அவரைத் தேடுவோம்; மற்ற காரியங்களை அவர் பொறுப்பெடுத்துக்கொள்வார்.

தம் ராஜ்யத்தை நமக்கு தருவதில் தேவன் எப்போதும் பிரியமாயிருக்கிறார். தேவ ராஜ்யம் என்பது என்ன? அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. தம் பிள்ளைகள் நீதியாய் வாழும்படியும், தம் சமாதானத்தை அனுபவிக்கும்படியும், பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கவேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். இதுவே அவரது ராஜ்யத்தின் ஆசீர்வாதம்.

நம் ஆண்டவர் பலன் அளிக்கிறவர். நாம் இந்த உலகில் நம் எதிர்காலத்தைக் குறித்து எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், தேவன் பரலோகத்திற்கு உரிய காரியங்களைக் குறித்தே அக்கறையாயிருக்கிறார். அவர் தம் பிள்ளைகளுக்கு தேவ ராஜ்யத்தைக் கொடுக்க பிரியப்படுகிறார். அப்படி செய்யவேண்டும் என்று எந்தக் கடமையுமில்லாதபோதும், அவர் நமக்குப் பரலோக ராஜ்யத்தை கொடுக்க பிரியமாயிருக்கிறார். நம்மை ஆசீர்வதிப்பதில் ஆண்டவர் பிரியப்படுகிறார்; அவர் வந்து நமக்குள் வாசம்பண்ண விரும்புகிறார்.

ஓர் அன்பு சகோதரி, ஒருமுறை என்னை அரவணைத்து, "தேவனை முதலாவது வைத்திடுங்கள்" என்று கூறினார்கள். தேவனை தேடுவது அருமையானது. இன்றும், அவரது ராஜ்யத்திற்குள் நுழைந்து அதை அனுபவிக்க உதவும்படி தேவனிடம் கேட்பீர்களா?

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, என்னை உம் சிறுமந்தை என்று அழைக்கிறதற்காக ஸ்தோத்திரிக்கிறேன். என் உள்ளத்திலிருந்து எல்லா பயத்தையும் கலக்கத்தையும் கோபத்தையும் கசப்பையும் எடுத்துப்போட்டருளும். உம்மையே முதலாவதாக தேடவும், எல்லா தேவைக்கும் உம்மையே நம்பவும் எனக்கு உதவி செய்யும். என்னை நீதியினால், சமாதானத்தால், சந்தோஷத்தால், உம் பரிசுத்த ஆவியால் நிறைத்திடும். கவலையாய், கலக்கத்துடன் இருப்போரை உம் இதமான கரம் தொட்டு, மனதுருக்கத்துடன் அணைத்துக்கொள்வதாக. உமக்குப் பிரியமில்லாத காரியங்களை என்னை விட்டு அகற்றி, உம் ராஜ்யத்திற்கு பாத்திரவானாக மாற்றியருளும். ஆண்டவரே, நீர் சீக்கிரமாய் வருவதால், உம்மை சந்திப்பதற்கு உம் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தும். பூமியிலேயே நாங்கள் உம் ராஜ்யத்தை அனுபவிக்கச்செய்யும். எல்லோர் வாழ்விலும் உம் சமாதானத்தை உரைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.