அன்பானவர்களே, இன்றைக்கு, " உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்" (உபாகமம் 31:6) என்ற வசனத்தைத் தியானிக்கிறோம். தேவன் நம்மோடு வருவது எவ்வளவு ஆசீர்வாதம்! முந்தைய வசனத்தில், கர்த்தர் தம் ஜனங்களை நோக்கி, தாம் விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்காக, விரோதிகளை தம் ஜனத்தின் கைகளில் ஒப்புவிப்பேன் என்று கூறுகிறார். ஜனங்கள், யுத்தம் செய்ய, யுத்த களத்தில் நிற்பதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவர்களிடம் கீழ்ப்படியும்படி கூறுகிறார். அவர், "யுத்தம் செய்ய நீங்கள் மட்டும் செல்லப்போவதில்லை. நான் உங்களுடனே வந்து, உங்கள் யுத்தத்தை நடப்பிப்பேன்," என்கிறார்.

தேவன் நம்மோடு இருப்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்! கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றபோது, அவர்தாமே அவர்களுடன் நடந்துசென்றார்; அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அருளிச்செய்தார். அவர்தாமே அவர்களுடன் நின்று அவர்களுக்காக யுத்தம் செய்ததையும் இங்கு பார்க்கிறோம். சங்கீதக்காரன், " கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?" என்று கூறுகிறான் (சங்கீதம் 118:6). அன்பானவர்களே, "தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" இந்த வசனத்தை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருங்கள். தாவீது, 23ம் சங்கீதத்தில், "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" என்று பாடுகிறான். தேவன் நம்மோடிருந்தால், நாம் திடமாகவும் சிங்கத்தைப்போல தைரியமாகவும் இருப்போம்.

மக்கள் உங்களுக்கு விரோதமாக வரலாம்; ஆனால், நீங்கள் அவர்களுக்கு எதிராக போரிடப்போவது இல்லை. கர்த்தரே யுத்தம் பண்ணப்போகிறார். குதிரை யுத்தநாளுக்காக ஆயத்தம் பண்ணப்படும்; ஆனால், ஜெயம் கர்த்தரிடத்திலிருந்து வரும். கர்த்தருடைய ஜனங்கள் அவரை விசுவாசித்து, பின்பற்றியபோது, அவரே அவர்களுக்காக யுத்தம் செய்ததை வேதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். நாங்கள் குடும்பமாக இக்கட்டானவேளைகள் வாயிலாக கடந்து சென்றபோதெல்லாம், கர்த்தர், தீர்க்கதரிசன வார்த்தையின் மூலம், "என் பிள்ளைகளே, கலங்காதிருங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். என் மகிமை உங்கள்மேல் இருக்கும். பொறுமையாயிருங்கள்; ஜெபியுங்கள்; உங்கள் வாயைத் திறவாதிருங்கள்; நான் உங்களுக்காக யுத்தம்பண்ணுவேன்," என்று பேசுவார். இதைக் கேட்டதும் தெய்வீக பெலன் எங்கள் உள்ளங்களை நிரப்பும்; கர்த்தரின் சமுகத்தில் நாங்கள் களிகூருவோம். எங்கள் பேத்தி கேட்டி, அப்போது மிகவும் சிறுகுழந்தையாயிருந்தாள். நினைப்பதை பேச முடியாது; ஆனால், மகிழ்ச்சியில் மிகவும் சிரித்து, குதிப்பாள். அவள்மேல் பரிசுத்த ஆவியானவர் இருப்பதை நாங்கள் மெய்யாய் உணர்ந்தோம்; ஆண்டவர் எங்களைப் பெலப்படுத்தினார். அவ்வாறே, ஆண்டவர் உங்களைப் பெலப்படுத்துவார். திடமாயிருங்கள்; தைரியங்கொள்ளுங்கள்; யுத்தத்தை சந்தியுங்கள். அன்பானவர்களே, ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் செய்கிற எல்லா யுத்தத்திற்கும் என்னோடே கூட வருகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயம் எனக்குள் எழும்போதெல்லாம் நீர் எப்போதும் என்னோடிக்கிறீர் என்பதை மறந்துபோகாமலிருக்கப்பண்ணும். ஆண்டவரே, என் உள்ளத்தைப் பெலப்படுத்தி, என்னை தைரியவானாக்குவீராக / தைரியமுள்ள பெண்ணாக்குவீராக. எப்போதும் உமக்குக் கீழ்ப்படியவும், உம்மில் நம்பிக்கை வைக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆண்டவரே, என் யுத்தங்களை நடப்பித்து, என்னை உம் மகிமையினால் மூடுவீராக. இன்று பயத்திற்கு பதிலாக உம்மேல் விசுவாசம் வைப்பதையே தெரிந்துகொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.