அன்பானவர்களே, இன்றைய தினம் ஆண்டவர் அருமையான வாக்குத்தத்தத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்; தாம் சொல்லியவண்ணம் நம்மை ஆசீர்வதிக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். "உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்" (ஏசாயா 32:15). இந்த வசனம் குறிப்பிடும் மறுரூபம், எவ்வளவு மகிமை நிறைந்ததாக இருக்கிறது. பஞ்சகாலத்தில் நிலம் வறண்டு, கீறல் விழுந்து, உயிரற்றதாக காணப்படும். எல்லா பயிர்களும் பட்டுப்போய்விடும். மழை பொழிந்ததும், நிலம் புத்துயிர் பெறும்; திடீரென எல்லாமே பச்சையாக மாறும். பரிசுத்த ஆவியானவரின் மழையும் நம் வாழ்வை இப்படியே மாற்றுகிறது. ஆவி, வறண்ட இருதயங்களை கனி கொடுக்கும் தோட்டங்களாக, வனாந்தரங்களை செழிப்பான காடாக மாற்றும்.

ஆண்டவர், ஏன் உன்னதத்திலிருந்து தமது ஆவியை நம்மேல் ஊற்றுகிறார்? எல்லா இருதயங்களையும் மாற்றுவதற்கு, எல்லா ஆத்துமாக்களுக்கும் புத்துயிர் அளிப்பதற்கு, தமது பிரசன்னத்தின் சந்தோஷத்தால் நம்மை நிரப்புவதற்காக தம் ஆவியை ஆண்டவர் ஊற்றுகிறார். அது நாமாக சம்பாதிக்கக்கூடியதல்ல; அது தேவனுடைய கிரியையாயிருக்கிறது. "உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்" (அப்போஸ்தலர் 3:19) என்று வேதம் கூறுகிறது. "உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்" (யோவேல் 2:13) என்று வேதம் நமக்கு நினைவுறுத்துகிறது. நாம் மனந்திரும்பும்போது பரிசுத்த ஆவி வருகிறார். அவர் மன்னிக்கிறார்; புதுப்பிக்கிறார்; பாரங்களை அகற்றுகிறார். நம்முடைய வறண்ட இருதயங்கள் செழிப்பான வயல்வெளிகளாக மாறும்; பிரச்னை நிறைந்த நம் வாழ்க்கை, இளைப்பாறுதல் மிக்க இடமாக மாறும்.

இதை என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன். எனக்கு திருமணம் முடிந்த தொடக்கக் காலத்தில், கோயம்புத்தூரில் நடந்த இயேசு அழைக்கிறார் வல்லமை ஊழியப் பயிற்சியில் கலந்து கொண்டேன்.  என்னை சுற்றிலும் அநேகர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றனர். எனக்குக் கிடைக்கவில்லை. நான் பொறுமையாக அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஓராண்டு கழித்து இன்னொரு கூட்டம் நடந்தது. இந்த முறை, நான் உண்மையாக மனந்திரும்பி, முழு இருதயத்துடன் தேவனை நோக்கி, "ஆண்டவரே, பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளாமல் உம்முடைய கரத்தில் எப்படி பயன்படுத்தப்பட முடியும்?" என்று கேட்டேன். மறுநாள் காலையில் தேவன் கிருபையாக என்னை நிறைத்தார். என் இருதயம் மாறியது. என் வாழ்க்கை மறுரூபமானது. இன்றைக்கு பரிசுத்த ஆவியினால்தான் இப்படி இருக்கிறேன். ஆண்டவர் உங்களுக்கும் அப்படியே செய்வாராக. அவர் உங்களை தம்முடைய ஆவியினால் நிறைத்து, வறண்டு காணப்படும் உங்கள் வாழ்க்கையை செழிப்பாக்குவாராக.

ஜெபம்:
அன்பு தகப்பனே, உம்முடைய அன்பான வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவி உன்னதத்திலிருந்து என்மேல் ஊற்றப்படவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். என் உள்ளம் ஆண்டாண்டு காலமாய் வனாந்தரமாய், வறண்டதாய், களைத்துப்போனதாய் காணப்படுகிறது. உம்மால் என்னை செழிப்பான தோட்டமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறேன். என் பாவங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்முடைய இரக்கத்தையும் அன்பையும் நம்பி மனந்திரும்புகிறேன். தயவுசெய்து உம்முடைய பரிசுத்த ஆவியை என்மேல் ஊற்றும்; என்னை புதுப்பியும்; மாற்றும். உம்முடைய வல்லமை என் வாழ்வின் எல்லா மூலைகளிலும் நிறைந்திருக்கட்டும்; உம்முடைய மகிமைக்காக நான் நற்கனிகளை தரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.