அன்பானவர்களே, ஆண்டவரோடு நேரம் செலவழிப்பது எவ்வளவு இன்பமும் சிலாக்கியமுமாயிருக்கிறது. அவரது சமுகம் நம்மை அப்படிப்பட்ட சந்தோஷத்தால் நிரப்புகிறது. இன்றைக்கும், தமது சமுகத்திலிருந்து அவர், "உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்" (ஏசாயா 57:15) என்று கூறுகிறார். எவ்வளவு அருமையான வசனம்!
மக்கள், "ஓ, இயேசு பெரிய மக்களோடு வாழ்கிறார்," என்று சொல்லலாம். ஆனால், அன்பானவர்களே, அவர் பெரிய மக்களோடு மாத்திரம் வசிக்கிறவரல்ல. அவர் மக்களை பெரியவர்களாக்குகிறார்! இயேசு அப்படியே செய்கிறார். உண்மையில், பரலோக மகிமையை விட்டு உலகிற்கு வந்தார்; தம்மையே மனுஷனுக்காக கொடுப்பதற்கு, மனுஷரோடு இருப்பதற்கு, உதவி செய்வதற்கு, பாவ தளையிலிருந்து அவனை விடுவிப்பதற்கு வந்தார். அவர் பணிந்த ஆவியுள்ளவர்களோடு இருப்பதற்கு, நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களோடு, மனந்திரும்பி, "ஆண்டவரே, நான் பாவி," என்று கூறுகிறவர்களோடு இருப்பதற்காக வந்தார்.
அதற்காகவே இயேசு, இரண்டு மனுஷர்களின் கதையைக் கூறினார். ஆசாரியனைபோன்ற பரிசேயன் ஒருவன், பாவியான வரி வசூலிப்பவனோடு நின்றான். பரிசேயன் பெருமையோடு, "ஆண்டவரே, பாவியான இந்த ஆயக்காரனைப்போல நான் இல்லை. நான் நீதிமான். என்னை ஆசீர்வதியும்," என்று கூறினான். ஆனால், ஆயக்காரன் தாழ்மையாக, மார்பில் அடித்துக்கொண்டு, "ஆண்டவரே, நான் பாவி. என்னை மன்னியும், இரட்சியும். என்மேல் கிருபையாயிரும்," என்று ஜெபித்தான்.
இயேசு, பாவியாக இருந்த, மனந்திரும்பிய இந்தத் தாழ்மையான மனுஷனின் ஜெபமே தேவனுடைய இருதயத்தை அடைந்தது என்று கூறினார். உண்மையில், பணிந்த ஆவியுள்ளவர்களுக்கு, மனந்திரும்புகிறவர்களுக்கு, இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு உதவும்படி அவர் வருகிறார். இன்றைக்கு, உங்களை பாவத்திலிருந்து வெளியே கொண்டு வரும்படி, உங்களை உயர்த்தும்படி நீங்கள் செய்யும் அருமையான ஜெபத்திற்கு தேவன் செவிகொடுப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உன்னதமான, பரிசுத்தமான இடத்தில் வாசம்பண்ணும் தேவனாக மாத்திரமல்ல, பணிந்த ஆவியுள்ளவர்களோடும், நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களோடும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இப்போதும், என் தேவைகளை ஒப்புக்கொண்டவனா(ளா)க, தாழ்மையுள்ள ஆயக்காரனைப்போல உம் முன்னே வருகிறேன். நீர் என் இரட்சகராக இருக்கிறபடியால், என் பாவங்களை மன்னித்து, என்னை மீட்டுக்கொள்ளும். என் வாழ்க்கை எப்போதும் உம்முடைய சமுகத்திலும் அன்பிலும் பிரகாசிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.