எனக்கு அன்பானவர்களே, இது, கர்த்தருக்குள் மகிழவேண்டிய இன்னொரு நாளாகும். ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்தி, நமக்கு வெற்றியை தருவதற்காக அவர் வருகிறார். வேதம், "நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது" (சங்கீதம் 97:11) என்று கூறுகிறபடி, வெற்றிகரமான புதிய ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ளப் போகிறோம். அது சாதாரணமான வெளிச்சம் அல்ல; சாதாரணமான சந்தோஷமும் அல்ல; அது கிறிஸ்துவின் வெளிச்சம். கர்த்தரின் சந்தோஷம். ஆண்டவருக்கு முன்பாக நேர்மையாக இருக்க விரும்பும் நீதிமான்கள்மேல் அது வருகிறது. சந்தோஷம் என்றால் என்ன? அது, நம் உள்ளங்களில் இருக்கும் தேவ பெலனாகும். நீதிமான்களின் உள்ளத்தில் தேவனுடைய சந்தோஷம் பரிபூரணமாக இருப்பதால் அவர்களின் பெலன் மிகுதியாயிருக்கும்.
இந்த வெளிச்சம், நம்மைக் குறித்து எல்லா மக்களுக்கும் முன்பாக ஆண்டவருடைய சாட்சியாக விளங்கும். அவர்கள், "இந்த மனுஷன் / மனுஷி தேவனுடைய ஊழியர்," என்று கூறுவார்கள். தானியேல், யோசேப்பு, பவுல் மற்றும் சீலாவின் வாழ்க்கையில் நீங்கள் இதைக் காணலாம். பூமி அதிர்ந்தபோது, தேவனுடைய மகத்தான வல்லமையால் சிறைச்சாலையின் கதவுகள் திறவுண்டன. சிறைச்சாலைக்காரன், பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பு விழுந்து, அவர்களை தேவ மனுஷர் என்று சாட்சிகொடுத்து, "உங்களைப்போல நானும் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?" என்று கேட்டான். பானபாத்திரக்காரனின் சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னபோது யோசேப்பும் தேவ மனுஷனாக எண்ணப்பட்டான். தானியேல் சிங்க கெபியிலிருந்து வந்தபோது, ராஜாவே, "மெய்யாகவே உன் தேவனே தேவன்," என்று கூறினான்.
அவர்கள் உள்ளங்களில் சந்தோஷத்தினால், சிறைச்சாலையிலும் அவர்களைக் காத்துக்கொண்ட சந்தோஷத்தினால் நிறைந்திருந்தது. அநியாயமாய் கைது செய்யப்பட்டபோதிலும் அவர்கள் விசுவாசித்து, நம்பி நீதிமான்களாய் நிலைத்திருந்தார்கள். ஆண்டவரின் வெளிச்சம் அவர்கள்மேல் உதித்து, அவர்கள் மெய்யாகவே தேவனுடைய ஊழியர்கள் என்பதற்கு சாட்சி கொடுத்தது. நீதிமான்களுக்கு தேவன் இந்த இரண்டு ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறார். ஆகவே, கவலைப்படாதிருங்கள். எப்போதும் அவருக்கும் மனுஷருக்கும் முன்பாக சரியானபடி இருப்பதற்கு தேவ பயத்தை நம் உள்ளங்களில் தருகிறார். அப்படிப்பட்ட இருதயத்தை தேவன் நீதியினால் நிரப்புவார். அதை இப்போது பெற்றுக்கொள்வோமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய நீதியை எனக்குள் ஊற்றுவீராக. உமக்கு முன்பாக நேர்மையாக நடக்கவேண்டுமென்ற என் வாஞ்சையை தீர்ப்பீராக. உம் நீதியை எனக்கு அருளிச் செய்வீராக. உமது பரிசுத்தத்தை எனக்குத் தந்தருளும். உமக்கு முன்பாக என் எண்ணங்கள் சுத்தமானவையாக, என் விருப்பங்கள் பரிசுத்தமானவையாக, என் இருதயம் ஸ்திரமானதாக இருப்பதாக. ஆண்டவரே, உம் உண்மையான ஊழியனான / ஊழியக்காரியாகிய நான் உம் இருதயத்திற்குப் பிரியமானவனா(ளா)க இருக்கும்படி செய்யும். என் வாழ்க்கை உம் கிருபைக்கு சாட்சியாக விளங்கட்டும். பரிசுத்த ஆவியானவரே, உம் வெளிச்சத்தை பூமியின் ராஜாக்களும் என்னை சுற்றிலுமுள்ளவர்களும் கண்டு, "மெய்யாகவே, இவர் தேவனுடைய ஊழியர்," என்று சாட்சியிடும்படி உம்முடைய சமுகத்தால் என்னை நிரப்பும். அநியாயமான காலத்திலும் உம் மகிழ்ச்சி எனக்குள் எழும்பட்டும். என் நீதியை அது காத்து, நான் நேர்மையாக விளங்கும்படி செய்யட்டும். ஆண்டவரே, உம்முடைய பெலத்தினால் மாத்திரமே நான் நீதிமானாக / நீதியான பெண்ணாக விளங்க முடியும். உம்முடைய மகிழ்ச்சியே என் பெலனும் கீதமும் என் நம்பிக்கையாக விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


