அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்" (சங்கீதம் 118:14) என்ற வசனத்தை தியானிப்போம். இன்றைக்கு நீங்கள், "நான் பெலவீனன். நான் விடாய்த்துப் போனேன். மிகவும் களைத்துப் போனேன். எனக்குக் கொஞ்சம் பெலன் வேண்டும்," என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். சரீர பிரகாரமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சோர்ந்துபோய், யாராவது கைபிடித்துத் தூக்கமாட்டார்களா? என வாஞ்சையாகக் காத்திருக்கலாம். ஆனால் இன்று தேவன் தம்முடைய பெலத்தினால் உங்களை நிரப்புகிறார்.

பெரிய மரத்தை நாம் பார்க்கும்போது, அதன் அழகிய கிளைகளை, அது தரும் நிழலை, இலைகளின் பசுமையை, மரத்தில் வலிமையை வியக்கிறோம். எவ்வளவு உறுதியாக அது நிற்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனாலும், பலர் உண்மையாக அதை தாங்கிப் பிடித்திருக்கும் வேர்களைப் பற்றி எண்ணாமல் இருக்கிறோம். மண்ணின் ஆழத்தில் வேர்கள் உறுதியாக பிடித்து மரத்தை ஸ்திரமாக நிறுத்தியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், மரம் உறுதியாக நிற்பதற்கு அதுவே காரணமாகும்.

அவ்வாறே, அன்பானவர்களே, பெலன் எங்கிருந்து வருகிறது? காணாத இடத்திலிருந்து அது வரும். தானியேல் எப்படி தன் மேல் அறைக்குச் சென்று தினமும் மூன்று வேளை ஜெபித்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (தானியேல் 6:10). இது மறைந்திருக்கும் வேர். இதன் காரணமாக மக்கள் அவனுக்கு விரோதமாக வந்தார்கள். ஆனால் அவன் அசைக்கப்படவில்லை; திடமாக நின்றான். அவ்வண்ணமாக, வேதாகமம் நம்மை அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு ஜெபிக்கும்படி கூறுகிறது. "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்" (மத்தேயு 6:6).

ஆம், நம்முடைய பெலனுக்கான மெய்யான ஆதாரம் இரகசியமாயிருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு அதை பார்க்கமுடியாமல் இருக்கலாம். நாம் இரகசியமாய் ஜெபிக்கும்போது தேவனிடமிருந்து பெலனை பெற்றுக்கொள்ளலாம். அவர் நமக்கு வெளியரங்கமாய் பலன் அளித்து ஸ்திரமாக நிற்கும்படி செய்கிறார். இன்று நீங்கள் சோர்வாக, பெலனற்றுபோனதாக உணரலாம். "வேலை செய்ய இவ்வளவு தூரம் பயணிப்பதால், வீட்டுக்குத் திரும்பியதும் எந்த வேலையும் செய்ய பெலனில்லை," என்று நீங்கள் கூறக்கூடும் அல்லது "வாழ்க்கையில் எவ்வளவோ முயற்சி செய்தும், எந்த பலனையும் காண முடியவில்லை. முன்னேற முடியவில்லை. சோர்ந்து களைத்துப்போய்விட்டேன்," என்று கூறக் கூடும். ஆனால் அன்பானவர்களே, சரீரத்திற்கும் தேவன் பெலன் கொடுப்பார். அவர் உங்களை தாங்குவார். அவரது வார்த்தை உங்கள் ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் ஜீவனை அளிக்கும். அவர் ஆவிக்குரியவிதத்தில் உங்களைப் பெலப்படுத்துவார்; புதிய வெளிப்பாடுகளை தருவார்; புதிய உற்சாகத்தை தந்து, ஆழமான வேரூன்றி இருக்கிற மரத்தைப் போல உயிர்ப்பிப்பார். ஆகவே சந்தோஷமாயிருங்கள். தேவனை சார்ந்துகொள்ளுங்கள். இரகசியமாய் அவரிடம் ஜெபியுங்கள். அவர் வெளியரங்கமாக உங்களுக்குப் பலனளித்து, திடமாக நிற்கும்படி செய்வார்.

ஜெபம்:
ஆண்டவரே, இன்று நான் களைத்துப்போய், பலவீனப்பட்டு, விடாய்த்துபோயிருக்கிறேன். சிலவேளைகளில், "யாராவது எனக்கு உதவி செய்யமாட்டார்களா?," என்று ஏங்கும் நிலையில் இருக்கிறேன். ஆனால், இன்று, நான் உம்மில் இளைப்பாறும்போது என்னை புதுப்பெலனால் நிரப்பி, உயர்த்தவேண்டும் என்று ஜெபிக்கிறேன். என் ஆவியை, சரீரத்தை உயிர்ப்பித்து உம்மிலும், உம் வசனத்திலும் சமுகத்திலும் வேரூன்ற உதவி செய்யும். ஆண்டவரே, நான் வெளியே புறப்படும்போது புதுப்பெலனை, புது ஜீவனை, புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை பெற்று திடமாக நிற்க உதவிசெய்யும். வழியில் எதிர்ப்படும் எல்லாவற்றையும் தைரியமாக சந்திக்கும்படி இன்று உயிர்ப்பியும். உம்முடைய பெலனை இன்று என்மேல் ஊற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசுவின் வல்லமையான நாமத்தில் அதைப் பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.