அன்பானவர்களே, இம்மாதத்தில், "உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்" (உபாகமம் 30:3) என்ற அருமையான வாக்குத்தத்தம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ஆறுதலான நிச்சயம்! இன்றைக்கு, கர்த்தர், "பயப்படாதே, உன்னைச் சீர்ப்படுத்துவேன்," என்று கூறுகிறார். எல்லாமும் உங்களைவிட்டு போயிருக்கலாம். உங்களிடமிருந்து எல்லாமும், எல்லோரும் திருடப்பட்டிருக்கலாம் அல்லது பறிக்கப்பட்டிருக்கலாம். எல்லாவற்றையும் கர்த்தர் திரும்ப தருவார். 'உனக்கு இரங்கி' என்ற வார்த்தைகள் தேவனின் அன்பான இருதயத்தை வெளிப்படுத்துகின்றன. அவர் உங்கள்பேரில் மனதுருக்கமாயிருக்கிறார். நீங்கள் ஒருபோதும் எதிர்பார்க்காத இடங்களுக்கு வாழ்க்கை உங்களைக் கொண்டு போனாலும், கர்த்தர் உங்களை மறந்துவிடவில்லை. ஒருவேளை நீங்கள் உடல்ரீதியாக அடிமைத்தனத்திற்குள் இல்லாதிருக்கலாம். ஆனால், உள்ளாக பயத்தை, நிராகரிப்பை, தனிமையை, குற்றத்தை, துக்கத்தை சுமந்துகொண்டிருக்கலாம். இம்மாதம் கர்த்தர், "எல்லா சிறையிருப்பிலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்," என்று கூறுகிறார். உங்கள் வாழ்க்கையை, உங்கள் குடும்பத்தை அவர் சீர்ப்படுத்துவார். உடைக்கப்பட்டவற்றை திரும்ப கட்டுவார். மீண்டும் உங்களை கனப்படுத்துவார்.
ஆண்டவர் ஏன் உங்களைச் சீர்ப்படுத்துகிறார்?
அவர் உங்கள் மேய்ப்பர் என்பதே எளிய பதிலாகும். இயேசு, "நானே நல்ல மேய்ப்பன்," என்று கூறியுள்ளார். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் ஜீவனை உங்களுக்காக சிலுவையில் கொடுத்தார். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக மட்டும் அவர் தம் விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தவில்லை; தம் இருதயத்தை உங்களை நெருங்கச் செய்து, தம் மந்தையில் சேர்த்துக்கொள்ளவும் சிந்தினார். ஆகவேதான், ஆண்டவர் காயப்பட்ட, நொறுக்கப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டார். உங்களை மறுபடியுமாய் தம் அன்பின் அணைப்புக்குள் சேர்த்து, முழுமைப்படுத்த வாஞ்சிக்கிறார். ஒருவேளை நீங்கள் வழிதவறிய, குழம்பிய, பாரப்பட்ட ஆடுபோல உணரலாம். ஆண்டவர், நல்ல மேய்ப்பராக தம் அன்பின் இருதயத்தை வெளிப்படுத்துகிறார். இயேசு உள்ளமுடைந்தோரை தேற்றினார்; வியாதியஸ்தர்களை குணமாக்கினார்; ஒடுக்கப்பட்டோரை விடுவித்தார்; மக்களை பூரணத்துக்குத் திருப்பினார். அதே இயேசு இன்று உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
இயேசு, "கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்" (லூக்கா 13:34) என்று கூறுகிறார். தேவனின் இருதயம் இப்படியே வாஞ்சிக்கிறது. அவர் உங்களை தம் செட்டைகளின் கீழ் பாதுகாத்து, தேற்றி, இளைப்பாறுதல் தர விரும்புகிறார். ஒருவேளை நீங்கள் ஆண்டவரிடமிருந்து விலகிப் போயிருக்கலாம். வேதனை, ஏமாற்றம், பாவம் உங்களுக்கும் அவருக்கும் தூரத்தை ஏற்படுத்தியிருக்கலாம். திரும்ப வரும் தகுதியில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசுவின் அன்பு உங்கள் தோல்விகளைக் காட்டிலும் பெரியது. நீங்கள் எவ்வளவு தொலைவு போயிருந்தாலும், இயேசு உங்களை மறுபடியுமாய் அழைக்கிறார். உங்கள் மேய்ப்பராகும்படி அவரிடம் கேளுங்கள். அவர் ஒருபோதும் உங்களை நிராகரிக்கமாட்டார். உங்கள் வாழ்க்கையை, உலகத்தின் வழிகளை விட்டு, முழுவதுமாக இயேசுவை நோக்கி திருப்புங்கள்.
நீங்கள் அப்படிச் செய்யும்போது, ஆண்டவர் உங்கள் குடும்பத்தையும், எதிர்காலத்தையும் சீர்ப்படுத்துவார். வேதம், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்," (அப்போஸ்தலர் 16:31) என்று கூறுகிறது. நீங்கள் ஆண்டவரை நம்பி, அவரில் விசுவாசம் வைக்கும்போது, அவரது இரட்சிப்பின் கிருபை உங்கள் குடும்பத்தினரையும் தொடும். 23ம் சங்கீதம் வாக்குப்பண்ணுகிறபடி, உங்கள் நல்ல மேய்ப்பர் அமர்ந்த தண்ணீர்களண்டையும், புல்லுள்ள இடங்களண்டையும் நடத்திச் செல்கிறார். அவர் உங்கள் பெலனை புதுப்பித்து, உங்கள் ஆவியை புதிதாக்கி, தம் நாமத்துக்காக உங்களை நீதியின் பாதையில் நடத்துவார். நிறைவாக, ஆண்டவர், உடைந்த உங்கள் வாழ்க்கையை மறுபடியும் கட்டும்போது, வெட்கத்தை கனமாக மாற்றுவார். வேதம், "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்" (ஏசாயா 62:4) என்று கூறுகிறது. மக்கள், உங்கள் வாழ்க்கை முறிந்துபோனதென்று சொல்லலாம். ஆனால், ஆண்டவர், "நான் உன்மேல் பிரியமாயிருக்கிறேன்," என்று கூறுகிறார். இன்று அவரை நம்புங்கள். நீங்கள் இழந்த எல்லாவற்றையும் அவர் நிச்சயமாக திரும்ப தந்திடுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு நல்ல மேய்ப்பராக இருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்க்கையை உம் அன்பின் கரங்களில் முற்றிலுமாக ஒப்படைக்கிறேன். என் வாழ்வில் உடைந்திருப்பவற்றை சீர்ப்படுத்தும்; எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும்; உம் சமாதானத்தினால் என் உள்ளத்தை நிறைத்திடும். உம் இரட்சிப்பின் கிருபை என் குடும்பத்தை தொடுவதாக; எப்போது என்னை உம் நீதியின் பாதைகளில் நடத்தவேண்டுமென்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


