தேவன் உங்களுக்கு இரக்கஞ்செய்ய விரும்புகிறார். அதற்காகவே கிருபாசனத்தில் அமர்ந்திருக்கிறார். வேதம், "நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" (எபிரெயர் 4:16) என்று கூறுகிறது. தேவனுடைய சிங்காசனம், கிருபையின் சிங்காசனமாகும்.
எது இந்தக் கிருபையை நமக்குக் கொண்டு வருகிறது? முதலாவது, அது நமக்கு இரட்சிப்பை அளிக்கிறது. வேதம், கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று கூறுகிறது (எபேசியர் 2:8,9). அது உங்களின் கிரியை அல்ல. நீங்கள் செய்த நற்கிரியைகளும் அல்ல. நீங்கள் செய்த தியாகத்தினாலும் அல்ல; உங்களை வருத்திக் கொண்டதாலுமல்ல. சரீர பிரகாரமாக நீங்கள் செய்கிற ஒன்றும் உங்களை ஒருபோதும் இரட்சிக்காது.
இரட்சிப்பு ஆவிக்குரியது. தேவனால் மாத்திரமே உங்கள் ஆவியோடு செயல்பட முடியும். தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்று இயேசு கூறுகிறார். ஆகவே, நம் ஆவியை, பரிசுத்த ஆவியுடன் இணைக்கவேண்டும். அவரது வல்லமை வந்து, நம் ஆவியை மறுரூபப்படுத்துகிறது; பாவத்தின் ஆவியை அகற்றுகிறது; நமக்கு தேவனின் ஆவியை அளிக்கிறது. தேவன்தாமே இந்தக் கிருபையை உங்களுக்குத் தந்தருள்வாராக.
இரண்டாவதாக, பெலவீனத்தில் பெலன் தருகிறார். வேதம், " என் கிருபை உனக்குப்போதும்" (2 கொரிந்தியர் 12:9) என்று கூறுகிறது. உங்கள் பலவீனத்தில் அவர் பலன் பூரணமாக விளங்கும். ஆம், உங்கள் பலவீனத்தின் நடுவிலும் பலமாக விளங்கக்கூடிய இந்தக் கிருபையை தேவன் உங்களுக்குத் தருகிறார். இயேசுவின் நாமத்தில் எல்லா பலவீனமும் உங்களை விட்டு அகலுவதாக. இந்தப் பலன் கிருபாசனத்திலிருந்து வந்தாலும், நீங்கள் குணப்படவும், எல்லா சோதனையிலும் பலப்படுத்தப்படுவதற்குமான கிரயத்தை இயேசு சிலுவையில் ஏற்கனவே செலுத்திவிட்டார்.
மூன்றாவதாக, ஆண்டவர் இயேசுவின் கிருபையினாலே ஐசுவரியம் உங்களிடம் வருகிறது. தமது தரித்திரத்தினாலே நீங்கள் ஐசுவரியவானாகும்படி இயேசு தரித்திரரானார் என்று வேதம் கூறுகிறது (2 கொரிந்தியர் 8:9). வறுமையிலிருந்தும் குறைவிலிருந்தும் தம் கிருபையினாலே நீங்கள் உயர்த்தப்படும்படி சரீரப்பிரகாரமாக, மகிமையற்றவராக அவர் சிலுவையில் தொங்கினார். இப்போதே அந்தக் கிருபை உங்கள்மேல் வருவதாக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வில் காணப்படுகிற எல்லா பாரத்தையும் ஒடுக்குதலையும் நீர் காண்கிறீர். வேதனை, வெட்கம், உதவியற்ற நிலையின் நடுவிலும் நான் உமக்காகக் காத்திருக்கிறேன். இன்று, நீர் அருளும் விடுதலை என் வாழ்க்கையில் வருவதாக. நெடுங்காலமாக என்னை கட்டி வைத்திருக்கும் எல்லா சங்கிலியையும் உடைத்துப் போடும். நித்திய சந்தோஷமும் மகிழ்ச்சியும் மீண்டும் என் இருதயத்திற்குத் திரும்பப் பண்ணுவீராக. சமாதானம், கௌரவம், நம்பிக்கை மீண்டும் என்னில் திரும்புவதாக. கர்த்தாவே, ஒடுக்கப்பட்ட உம் மக்களை நீர் மீட்டுக்கொண்டதுபோல என்னையும் மீட்டுக்கொள்ளும். நீர் ஒருபோதும் என்னை கைவிடமாட்டீர் என்று விசுவாசித்து இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


