அன்பானவர்களே, இந்த மே மாதத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேவன் ஏற்கனவே உங்களை ஆசீர்வதிக்க ஆரம்பித்துவிட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்போதும் நாம் இன்றைய நாளிற்கான ஆசீர்வாதத்தை பெறவிருக்கிறோம். 1 தீமோத்தேயு 6:17 ம் வசனம், “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்”, என்று ஒரு ஐசுவரியவானைப் பற்றி கூறுகிறது.
யார் ஐசுவரியவான்? அதிகமான ஐசுவரியங்களையோ, பணத்தையோ, சொத்தையோ , விலைமதிப்பற்ற பொருட்களையோ அல்லது ஆஸ்திகளையோ வைத்திருப்பவர் அல்ல. இவைகள் ஒரு மனிதனை ஐசுவரியவான் ஆக்குவதுமில்லை. இந்த வசனம், "நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாதிருங்கள்" என்று அறிவுறுத்துகிறது. ஏனென்றால், இத்தகைய ஆசீர்வாதங்கள் எல்லாம் நிரந்தரமானவை அல்ல. இவை அனைத்துமே நிலையற்றது. தேவன் யோபுவிற்கு இதனை காண்பித்தார். யோபுவை போல ஐசுவரியாவான் இந்த உலகில் இருந்ததில்லை. அவனிடம் அநேக ஆஸ்திகளும், ஐசுவரியங்களும், மிக பெரிய குடும்பமும் இருந்தது. ஒருவரின் கற்பனைக்கு ஏற்ப அனைத்து ஆசீர்வாதங்களும் அவனிடம் இருந்தது. ஆனால், ஒரே நொடிபொழுதில் அவனிடம் இருந்த அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்மூலம், தேவன் யோபுவிற்கும், நமக்கும் இவ்வுலக ஆசீர்வாதங்கள் நிலையற்றவை என்பதை காண்பிக்கிறார்.
நாம் இந்த உலகத்தில் எதைக் கட்டினாலும் அது நொடிபொழுதில் அழிந்துவிடும். “இதைப்போன்ற ஆசீர்வாதங்களெல்லாம் இருந்தால் நீ ஐசுவரியவான் என்று அர்த்தம் இல்லை. நீ ஐசுவரியவான், ஏனென்றால் நான் உன்னோடு இருப்பதால்" என்று தேவன் கூறுகிறார். நான் உன்னோடு இருப்பதால் உனக்கு தேவையான எல்லாவற்றையும், எந்நேரத்திலும் என்னால் கொடுக்க முடியும் ஆண்டவர் சொல்லுகிறார். ஆகாய் கூறுவதுபோல, "வெள்ளியும், பொன்னும் என்னுடையது" என்று தேவன் சொல்லுகிறார். தேவன் யோபுவிற்கு அவன் இழந்த செல்வங்கள், ஆஸ்திகள், குடும்பம், வீடு மற்றும் அவனுக்குண்டான எல்லாவற்றையும், அவனிடம் இருந்த நிலையைவிட, இரண்டு மடங்காக ஆசீர்வதிக்க முடியும் என்பதை காண்பித்தார். ஆம், அவரால் கூடும். தேவன் உங்களோடு இருந்தால் நீங்கள் ஐசுவரியாவான். தேவன் நமக்கு அனுபவிக்க தேவையான அனைத்தையும் சம்பூரணமாக கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுவே இன்றைய வாக்குத்தத்தம். நீங்கள் இதைப் பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
அன்பின் தேவனே, இந்த மே மாதத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எனக்கு தேவையான அனைத்தையும் சம்பூரணமாக கொடுப்பவர் நீரே. என் வாழ்வின் உண்மையான பொக்கிஷமாகிய உம்மில் மட்டும் என் இருதயம் இளைப்பாறட்டும். யோபுவை போல நானும் என் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும், ஆசீர்வாதத்திலும், இழப்பிலும் உம்மையே நம்புகிறேன். என்னிடம் உள்ளவையெல்லாம் உம்முடையது, நீர் எல்லாவற்றையும் இரண்டத்தனையாக திருப்பியளிப்பீர் என்பதை அறிவேன். நீரே எனக்கு சகலமும் அளிப்பவர், நீரே என் பங்கும், என் சமாதானமுமானவர். நீர் என்னோடு இருப்பதால் எனக்கு எவ்வித குறையும் இல்லை. நான் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் இந்த வாக்குத்தத்ததை பெற்றுக்கொள்ளுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.