அன்பானவர்களே, இன்று வாழ்க்கையின் போராட்டங்களால் தத்தளித்துக்கொண்டிருக்கிறீர்களா? எல்லாமே யுத்தமாக தெரிகிறதா? குடும்ப வாழ்க்கையை போராட்டமாக தோன்றுகிறதா? பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது போராட்டமாக இருக்கிறதா? உங்கள் வேலையே போராட்டமாக காணப்படுகிறதா? எல்லாவற்றையும் நீங்களே செய்ய முயற்சிக்கிறீர்களா? களைத்துப்போய்விட்டீர்களா? இன்று ஆண்டவர், யுத்தம் உங்களுடையதல்ல; தம்முடையது என்று நினைவுப்படுத்துகிறார். "இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது" (2 நாளாகமம் 20:15) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
நானே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளவேண்டிய நேரம் என் வாழ்க்கையில் வந்தது. ஜேடன் பிறந்த நேரம் அது. நான் பலவற்றைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். நான், "ஆண்டவரே, நான் மறுபடியும் கல்லூரிக்குச் செல்லவேண்டும். என் படிப்பை முடிக்க வேண்டும். ஜேடனையும் பார்த்துக்கொள்ள வேண்டும். கேட்டியையும் கவனிக்கவேண்டும்," என்று நினைத்தேன். "உனக்கு என்ன ஆயிற்று? ஏன் கவலையாகவும், குழப்பமாகவும் இருக்கிறாய்?" என்று என்னிடம் எல்லோரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஓரிரவில், ஆண்டவர், "எல்லாவற்றையும் என் கரத்தில் விட்டுவிடு," என்று கூறினார்.
எல்லோரும் படுத்த பிறகு, நான் ஜெபிப்பது வழக்கம். அந்த நேரத்தில் ஆண்டவர், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்ற தம் வார்த்தையை எனக்கு நினைவுப்படுத்தினார். ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் உங்களுக்கு இளைப்பாறுதலை தரும்படி காத்திருக்கிறார். எல்லாவற்றையும் உங்கள்மேல் போட்டுக்கொள்ளாதிருங்கள்.
எங்கள் நாயும் நல்ல பாடம் ஒன்றைக் கற்றுக்கொடுத்தது. அது எங்களிடம் வரும்போதெல்லாம், அருகில் படுத்துக்கொள்ளும். அதனுடன் நாம் தரையில் அமர்ந்தோமானால், அது, "அம்மா, என் பக்கத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள்," என்று இளைப்பாறுதலுடன் காணப்படும். அவ்வாறே, இன்று, ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று நினைத்து இளைப்பாறும்படி கூறுகிறேன். இது உங்கள் யுத்தமல்ல; கர்த்தருடையதாகும். உங்கள் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் கவலைப்பட அவசியமே இல்லை. ஆண்டவர் அதைக் கவனித்துக்கொள்வார். இன்று, எல்லாவற்றையும் ஆண்டவரின் கரங்களில் ஒப்படைத்து, சேர்ந்து ஜெபிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, தகப்பனே, இன்று எல்லாவற்றையும் உம் கரங்களில் கொடுக்கிறோம். இனிமேலும் கவலைப்படவோ, குழப்பமடையவோ விரும்பவில்லை. இந்த யுத்தம் எங்களுடையதல்ல; உம்முடையது என்பதால் எங்கள் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிக்கிறோம். உம் பிள்ளைகள் அநேகர் இன்று தங்கள் முடிவுகளுக்காகக் காத்திருக்கலாம். யுத்தம் அவர்களுடையதல்ல; உம்முடையது என்று அவர்களுக்கு நினைவுப்படுத்தும். அவர்கள் எல்லாவற்றையும் உம் கரங்களில் வைக்கிறபடியால், உம் பரிபூரண சித்தத்தின்படி அவர்களுக்கு நல்ல முடிவுகளை அருளிச்செய்திடும். உம் அன்பு பிள்ளைகளை ஆசீர்வதித்து, அவர்கள் விரும்புகிறதற்கு மேலாக சிறந்தவற்றை அவர்கள் வாழ்வில் கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இவர்களை உம் இளைப்பாறுதலால், சமாதானத்தால், மகிழ்ச்சியால் நிரப்பவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


