எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய வாக்குத்தத்த வசனம், "உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள்" (எரேமியா 31:17) என்று கூறுகிறது. அன்பானவர்களே, உங்களை விட்டு தூரமான இடத்தில் வசித்துக்கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளைக் குறித்தும், தங்களுக்கு இஷ்டமான வழிகளில் நடக்கும் பிள்ளைகளைக் குறித்தும் நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆம், சமீபத்தில் என் பேத்தி ஷேரனை குறித்து நாங்கள் கவலைப்பட்டோம். அவள் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். நீண்டகாலமாக இந்தியாவுக்கு வரவேயில்லை. ஆனால், இந்த வாக்குத்தத்தத்தின்படி, ஏற்றவேளையில் ஆண்டவர் அவளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்; அவளைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்தார். எல்லாவற்றுக்கும் ஒரு காலமுண்டு.
இயேசு கிறிஸ்துவை மட்டுமே நாம் சார்ந்திருந்து, அவரிடமிருந்து நன்மையையும் கிருபையையும் பெற்றுக்கொள்வோம். வேதம், "உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்," என்றும், "கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன். கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்" என்றும் கூறுகிறது (சங்கீதம் 66:3; 92:4,5). "கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்," என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (மாற்கு 16:20). ஆகவே, நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து அவரது வாக்குத்தத்தங்களை உரிமையாக்கிக் கொள்ளவேண்டும்.
இந்த எல்லா வசனங்களும் தேவனுடைய வாக்குத்தத்தங்களாக இருக்கின்றன. நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, உங்களுக்காக அந்த வாக்குத்தத்தத்தை உரிமையாக்கிக் கொள்ளவேண்டும். வேதம், "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி..." என்று கூறுகிறது (பிலிப்பியர் 1:5). தம் வார்த்தையில் வாக்குக்கொடுத்த ஆண்டவர் நிச்சயமாகவே ஏற்றவேளையில் நேர்த்தியாக அதை நிறைவேற்றுவார். நாம் எப்போதும் அவரையே நோக்கவேண்டும்; நன்மைக்காகவும் கிருபைக்காகவும் அவரையே சார்ந்திருக்கவேண்டும். அவரது வார்த்தையின்படி, அவர் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் ஏற்றவேளையில் நேர்த்தியானவிதத்தில் சந்திப்பார். ஆகவே, தேவனுடைய வார்த்தையை வாசித்து, தேவனின் நன்மையாலும் கிருபையாலும் திருப்தியடைவீர்களாக. இப்போதும் அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு ஒப்படையுங்கள்; உங்களுக்குத் தேவையான எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் அவரையே நோக்கிப் பாருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உண்மையுள்ள உம் வாக்குத்தத்தங்களுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கவலைகளை, குறிப்பாக என் பிள்ளைகளைப் பற்றிய கரிசனைகளை நீர் அறிந்திருக்கிறீர். உம் வார்த்தையின்படி, ஏற்றவேளையில் அவர்களை திரும்பக் கொண்டு வாரும். நீர் என்னில் தொடங்கியுள்ள நற்கிரியையை முடித்திடுவீராக; உம்மை முற்றிலும் நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். என் தேவைகளையெல்லாம் உம் இரக்கத்தாலும் கிருபையினாலும் சந்திப்பீராக. என் வாழ்க்கையை உம் அன்பின் கரங்களுக்குள் ஒப்படைக்கிறேன். என் வாழ்வில் உம் சித்தம் மாத்திரமே செய்யப்படவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


