அன்பான சகோதரரே / சகோதரியே, வேதம், "நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்" (நீதிமொழிகள் 13:9) என்று கூறுகிறது. தம் பிள்ளைகள் இந்த உலகில் பிரகாசிக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
என் மகன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, நான் அவனிடம், "நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கு. உன்னுடைய வெற்றிக்காக மாத்திரம் அல்ல. தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தவும் அவரைக் கனப்படுத்தவும் அப்படிச் செய். தேவனுக்கு ஏற்றபடி நடந்துகொள். அவர் மகிமை உன்மேல் தங்கும். அப்போது அவர் உன்னை ஆசீர்வதித்து, படிப்பில் நீ சிறந்து விளங்கும்படி செய்வார்," என்று கூறினேன். என் மகன் கீழ்ப்படிந்தான். ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு முன்பு வேதத்தை வாசிப்பான். தேர்வு எழுதி முடித்தவுடன் அவன், "அம்மா, நான் தேவனை கனப்படுத்தினேன். அவர் என்னை கனப்படுத்தினார்," என்று கூறினான். பத்தாம் வகுப்புத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைக் கொடுத்து ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தார்.
வேதம், "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்" (நீதிமொழிகள் 4:18) என்று கூறுகிறது. நம்முடைய கண்களை தேவன்மேல் வைத்திருந்தால், ஒருபோதும் நாம் கீழாகப்போகமாட்டோம். மாறாக, நாம் எழுந்து அவரது மகிமைக்காக பிரகாசிப்போம். 'உலகத்தின் ஒளி' என்று இயேசுவை விசுவாசிக்கிறவர்களை அவர் அழைக்கிறார். ஆண்டவரோடு இணைந்திருக்கிறவர்கள் அவருடைய ஒளியை பிரகாசிக்கிறார்கள். மக்கள், அப்போஸ்தலனாகிய பவுலையும் அவன் உடன் இருந்தவர்களையும், 'உலகத்தைக் கலக்குகிறவர்கள்' என்று அழைத்தனர் (அப்போஸ்தலர் 17:6).
அன்பானவர்களே, உலகத்தை மாற்றும்படி தேவன் உங்களை அழைத்திருக்கிறார். எங்கள் மகள் ஷேரன் அடிக்கடி, "நான் உலகத்தை மாற்றப்போகிறேன்," என்று கூறுவாள். உண்மையில் நாம் எப்படி உலகத்தை மாற்ற முடியும்? நம் வார்த்தைகள், செயல்கள், உத்தமத்தின் வாயிலாக தேவனுடைய சத்தியத்தை பிரதிபலித்து அப்படி செய்ய முடியும். இந்த உலகம் நம்மை, குறிப்பாக தங்களை தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கிறவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாம் எப்படி பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை அவர்களை கவனிக்கிறார்கள்.
இயேசுதாமே பூரண உதாரணமாயிருக்கிறார். அவர் வார்த்தையிலும் செயலிலும் வல்லமையுள்ளவராக இருந்தபோதிலும், தொடர்ந்து தம் பரம பிதாவை தேடினார். அவர் அதிகாலையிலும், பகல்பொழுதிலும், மாலையிலும், இரவிலும் ஜெபித்தார். தேவனையே சார்ந்திருந்ததால், அவரால் நீதிமானாய் வாழ்ந்து தன் தகப்பனின் சித்தத்தை நிறைவேற்ற முடிந்தது. சூரியகாந்தி பூவை எண்ணிப்பாருங்கள். ஒவ்வொரு காலையும் அது உதிக்கும் சூரியனை நோக்கும்; நாள் முழுவதும் மாலை வரை அது சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கும். தொடர்ந்து சூரியனையே நோக்கிக்கொண்டிருப்பதால், அது வலிமையாக வளரவும், அழகாக தோன்றவும் தேவையான பெலனைப் பெற்றுக்கொள்கிறது. அவ்விதமே, நாம் தேவனை அனுதினமும் அவரது வார்த்தை வாயிலாகவும், ஜெபத்தின் வாயிலாகவும் நோக்கவேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல், "நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்," (கொலோசெயர் 1:29) என்று கூறுகிறான். அவ்வண்ணமே, வேதம், "அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை," (சங்கீதம் 34:5) என்றும் கூறுகிறது. எப்போதும் ஆண்டவரையே நோக்கிக் கொண்டிருப்பவர்கள் அதிகமதிகமாய் பிரகாசிப்பார்கள்.
நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். உங்களைச் சுற்றிலுமிருக்கும் அனைவரும் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு உங்கள் பரம தகப்பனை மகிமைப்படுத்தும்படி, ஆண்டவர் உங்கள் வெளிச்சம் தினம் தினம் பிரகாசிக்கும்படி செய்வாராக. உங்கள் வாழ்க்கையில் இயேசுவின் வெளிச்சம் காணப்படட்டும். என் மகன், "நான் தேவனை கனப்படுத்தியதுபோல, அவர் என்னை கனப்படுத்தினார்," என்று சாட்சி கூறியவண்ணம், ஆண்டவர் உங்களைக் கனப்படுத்துவாராக. அவரது மகிமை உங்கள் வாழ்க்கையில் தங்கட்டும்; உங்கள் உண்மைக்கு அவரே பலன் அளிப்பாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படி என்னை அழைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீதியில் நடக்கவும் என் வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் உம்மை கனம்பண்ணவும் எனக்கு உதவும். தினமும் என் வார்த்தைகள், செயல்கள், குணங்கள் உம் மகிமையை வெளிப்படுத்தட்டும். இயேசு செய்ததுபோல, ஜெபத்திலும் உம் வார்த்தையின் வாயிலாகவும் உம்மை உண்மையாய் தேட எனக்குக் கற்றுத்தாரும். உம் பலத்த வல்லமையால் என்னை பெலப்படுத்தும்; நீர் என்னை வைக்கும் இடத்தில் பிரகாசமாக ஒளிவீசுவதற்கு எனக்கு உதவும். என் படிப்பை, வேலையை, தொழிலை, என் கையின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்தருளும். உம்மை நம்புகிறவர்களை கனப்படுத்துவதுபோல என் உண்மையையும் கனப்படுத்தியருளும். அநேகர் என் வாழ்வின் வாயிலாக உம் நன்மையைக் கண்டு, உம் பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


